Tuesday, October 28, 2014

திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழாவின் ஐந்தாம் நாளான செவ்வாய்க்கிழமை பல்வேறு தெய்வங்களின் வேடமணிந்து கோயிலில் பஜனை செய்த ராஜபாளையம் பக்தர்கள்.திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழாவின் ஐந்தாம் நாளான செவ்வாய்க்கிழமை பல்வேறு தெய்வங்களின் வேடமணிந்து கோயிலில் பஜனை செய்த ராஜபாளையம் பக்தர்கள்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா புதன்கிழமை (அக். 29) நடைபெறுகிறது. விழாவைக் காண பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நிகழாண்டு கந்த சஷ்டி திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
சூரசம்ஹாரம்:கந்த சஷ்டியின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா புதன்கிழமை நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடக்கிறது. மாலை 4.30 மணியளவில் திருக்கோயில் கடற்கரையில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா நடைபெறுகிறது.
விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் வந்து பக்தர்கள் விரதம் இருந்து வருகின்றனர். இதனால் திருக்கோயில் வளாகமே பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றது. பக்தர்கள் திருக்கோயில் வளாகத்தில் பக்திப் பாடல்கள் பாடியும், பஜனை பாடியும் வருகின்றனர்.
பாதுகாப்புப் பணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை தலைமையில், துணை கண்காணிப்பாளர் செü.கோவிந்தராஜ் உள்ளிட்ட காவல்துறையினர், ஊர்க்காவல் படையினர், கடலோரக் காவல்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கடற்கரையில் உயர்கோபுரங்கள் அமைக்கப்பட்டும், ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டும் கண்காணிக்கப்படுகிறது. தயார் நிலையில் தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கடற்கரையில் நடைபெறும் சூரசம்ஹார விழாவைக் காண செல்லும் பக்தர்களுக்கு தனியாக கம்பங்களாலான வரிசைப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் கூட்டத்தைக் கருத்தில் கொண்டு பல்வேறு பகுதிகளிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் மற்றும் திருநெல்வேலியிலிருந்து சிறப்பு இரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.
பக்தர்களுக்கு வாகன அனுமதிச் சீட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன்படி அனுமதிச்சீட்டு உள்ள வாகனங்கள் மட்டுமே தாலுகா அலுவலகச் சாலை அருகிலும், நாழிக்கிணறு பேருந்து நிலையம் அருகிலும் நிறுத்தப்பட உள்ளன. மற்ற வாகனங்கள் ஊருக்கு வெளியே உள்ள எல்லையில் நிறுத்தப்பட உள்ளன.
விரதமிருக்கும் வெளிநாட்டு பக்தர்கள்: திருச்செந்தூர் கோயிலில் மலேசியா டத்தோ தவராஜா, அவரது மனைவி டத்தின் ருக்மணி கடந்த பல ஆண்டுகளாக ஆறு நாள்கள் விரதம் இருந்து வருகின்றனர்.
இதே போல ராஜபாளையத்தைச் சேர்ந்த பரமானந்தம் பிள்ளை தலைமையிலான குழுவினர் 49-வது ஆண்டாக இவ்வாண்டு கோயிலில் விரதம் இருந்து வருகின்றனர். இவர்கள் செவ்வாய்க்கிழமை சிவன், பார்வதி, விநாயகர், முருகன், நாரதர் உள்ளிட்ட பல்வேறு வேடங்களை அணிந்து வந்து பஜனை பாடி சுவாமி தரிசனம் செய்தனர்.
நன்றி :- தினமணி

0 comments:

Post a Comment