Friday, November 14, 2014


திருச்செந்தூர் செந்தில் குமரன் ஆணவமே அங்கமாக கொண்ட சூரபத்மனை இரு கூறாய் பிளந்து சேவலும், மயிலுமாய் உருமாற்றி தனக்கேயான கொடியாகவும், வாகனமாகவும் அமைத்துக் கொண்டமர்ந்த ஊர். ஓயாத கடலலைகள் முருகனின் தாள் பணிந்து செல்லும்  திருச்சீரலைவாய் என்னும் திருச்செந்தூர். ஊமையாய் பிறந்த குமர குருபரனுக்கு பேச்சும், கலைகளின் மூச்சும் அளித்த சுப்ரமணியசுவாமி அமர்ந்த ஊர்.
அவ்வூரில் தன் முற்பிறவியின் எச்சத்தை கழிப்பதற்காக பிறவி எடுத்து வந்த ஞானி. துறவறம் பூண்டு ஓயாது முருகனைத் துதித்து வந்தார். அவர் பிறவிப் பயனை நிறைவு செய்ய பரம் பொருளிடம் இருந்து ஏதோ ஒரு கட்டளை இருந்தது.
ஞானிகளுக்கு ஊரெது, பேரேது, எனவே அவரை ஞானி என்றே அழைப்போம், அவரிடம் ஒரு மூட்டை இருந்தது. அதில் முருகக் கடவுளின் சிலை ஒன்று இருந்தது. எங்கு சென்றாலும் ஒரு குழந்தையைப் போல் தூக்கிக் கொண்டு போய் முருகனை நீராட்டி, காட்டுப் பூக்களை சூட்டி நாளும் வழிபாடு செய்து வந்தார். தனக்கு அந்திமக் காலம் நெருங்குவதையும், இப்புவியில் தன் பிறவியின் நோக்கம் நிறைவேறும் நேரம் வந்து விட்டதையும் உணர்ந்தார்.
தான் வழிபட்டு வந்த முருகனின் சிலை பொருத்தமானவரிடம் ஒப்புவிக்க வேண்டும் என்றும், அத்தெய்வம் என்றென்றும் பூஜையில் இருக்க வேண்டும் என்றும் முருகனைப் பிரார்த்திக்க ஆரம்பித்தார்.
அன்று இரவு உறக்கத்தின் நடுவில் வேல் ஏந்திய வேலவன் ஞானியின் கனவில் தோன்றினார். ஞானியை வேலன் கைபிடித்து அழைத்துச் சென்றார். வழியில் ஓர் இரும்புப் பாதை அது சாலையைக் கடக்குமிடம் புகைவண்டி வரும் நேரத்தில் சாலைக் கதவுகளை பெரியவர் ஒருவர் அடைத்துக் கொண்டிருந்தார்.
அந்நேரம் ஓர் ஒளிக்கீற்று பெரியவரின் முகத்தை அடையாளம் காட்டியது. அவரிடம் சிலையைக் கொடு என்று என்ற அசரீரி ஒலித்தது. முருகன் சிரித்த வண்ணம் மறைந்தார்.
கனவு கலைந்து ஞானி கண்விழித்தார். தன் பிரார்த்தனைக்கு முருகன் வழிகாட்டி விட்டதை உணர்ந்தார். அவருக்கு ஆன்ம ஒளி உண்டாயிற்று. மனம் தெளிவு பெற்றது.
பொழுது புலர்ந்தது. காலைக் கடன்களை முடித்து நீராடி, தன்னுடைய செப்புத் திருமேனியையும் நீராட்டி பூச்சூட்டி வழிபாடு செய்து விட்டு அந்த திருவுருவத்தை நெஞ்சில் அணைத்தபடி இருப்புப் பாதை ஓரமாக நடக்கத் தொடங்கினார். முருகன் தனக்கு கனவில் காட்டிய உத்தமனைத் தேடினார்.
சற்று தூரத்தில் கனவில் கண்டதைப் போலவே ஒரு சாலையைக் கடக்கும் இருப்புப் பாதையைக் கண்டார். அங்கு காக்கிச் சட்டை அணிந்த ஒருவர் தான் கனவில் கண்டவரைப் போலவே கருமமே கண்ணாகப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அவர் தஞ்சாவூர் நகரின் மத்தியிலுள்ள பூக்காரத்தெருவை பூர்வீகமாகக் கொண்டவர். திருச்செந்தூர் அருகில் இரயில்வேத் துறையில் பணியாளராக இருந்தார்.
முதல் நாள் இரவு அவருக்கும் ஒரு கனவு வந்தது. அக்கனவில் நல்ல தோற்றப் பொலிவுடன் கூடிய துறவி ஒருவர் தன் துணி மூட்டையில் இருந்து அழகிய முருகன் சிலையை கண்ணீர் மல்க தன்னிடம் ஒப்படைப்பது போல் தோன்றியது. பணியாளரின் உறக்கம் கலைந்தது. அவருக்கு ஒன்றும் புரியவில்லை. காலை எழுந்ததும் குளித்து முடித்துவிட்டு செந்திலாண்டவரை நோக்கி வணங்கி விட்டு, தான் பணிபுரியும் இடம் நோக்கி செல்லத் தொடங்கினார்.
எதிரில் இவரை நோக்கி ஞானியார் வந்து கொண்டிருந்தார். இருவரும் எதிரெதிரே நின்றனர். கனவு கண்ட உருவங்கள் நனவில் சந்தித்துக் கொண்டன. கலியுகத்திலும் கந்தனின் அருட்பெரும் கருணையைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் மல்கினர். காக்கிச் சட்டையும், காவி உடையும் கலந்து தழுவிக் கொண்டன. அங்கு எந்த பேதமும் இல்லை.
தஞ்சையை சேர்ந்த அந்த தொழிலாளி அன்று விடுப்பு எடுத்துக் கொண்டு ஊர் திரும்ப திட்டமிட்டிருந்தார். ஞானி தன் கையிலிருந்த முருகன் சிலையை பணியாளரிடம் ஒப்படைத்து, அய்யா, இக்கடவுளை
நான் கண்ணின் இமை போல காத்து வழிபட்டு வந்தேன். என் பிறவிப் பயன் நிறைவெய்தும் நேரம் வந்து விட்டது. எனவே, நீங்கள் இதை உரிய இடத்தில் அமைத்து பூஜை செய்ய வேண்டும் என்று கூறி சிலையை ஒப்படைத்து விட்டு கடந்து சென்றார்.
காக்கி உடை பணியாளர் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட முருகனின் சிலையை தன் வெண்ணிறத் துண்டால் போர்த்தினார். தான் பிறந்த ஊரான தஞ்சைக்கு வந்தார். தன் உறவினர்களிடமும் நண்பர்களிடமும் நடந்ததைக் கூறினார்.
அவர்கள் குடியிருந்த இடம் தஞ்சை நகரின் மத்தியிலுள்ள பூக்கொல்லை. ஒரு பூக்கொல்லையின் நடுவில் 10 குச்சிகளை நட்டு அதற்கு பனை ஓலை வேய்ந்து அதில் முருகனை எழுந்தருளச் செய்தார்கள்.
அது நடந்து சரியாக 110 ஆண்டுகளுக்கு முன்பு 1904-ஆம் ஆண்டில் திருச்செந்தூரில் இருந்து ரயிலில் வந்த முருகனின் பெருமை அக்கம் பக்கம் பரவியது.
தொடர்ந்து தெருவாசிகள் ஒன்று கூடி நிலங்களையும், பொருட்களையும் தானமாகப் பெற்று கற்கோயில் ஒன்றை கந்தனுக்கு கட்டினார்கள். அனைத்து பரிவாரங்களுடன் அற்புதமாக அமைந்தது ஆலயம்.
வருடம் முழுக்கவும், திருவிழாவும், தேருமாக சிறப்பாக பூஜைகள் நடைபெறுகிறது. சிவன் மைந்தனுக்கு திருச்செந்தூரைப் போலவே இங்கும் கந்த சஷ்டி பெருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
திருச்செந்தூர் சென்று செந்திலாண்டவனை தரிசிக்க முடியாதவர்கள், இங்கு வந்து தரிசனம் செய்யலாம்.
தஞ்சை நகரின் மத்தியில், புகை வண்டி நிலையம் அருகில் பூக்காரத்தெருவில் அமைந்துள்ளது அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில்.
தொடர்புக்கு: 97866 40927 
நன்றி : டி.கோவிந்தராஜு,  வெள்ளிமணி, தினமணி 

0 comments:

Post a Comment