Saturday, December 7, 2013

திருசிற்றம்பலம்

மாணிக்க வாசகர் வரலாறு

குருந்த மரத்தடியில் சிவபெருமான் குருவாய் உபதேசம் செய்த காட்சி

தொல்லை யிரும்பிறவி சூழும் தளை நீக்கி
அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே
எல்லை மருவா நெறியளிக்கும் வாதவூர்
எங்கோன் திருவாசகம் என்னும் தேன்.


"திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்"

வாட்டமிலா மாணிக்க வாசக நின் வாசகத்தை
கேட்டபொழு தங்கிருந்த கீழ்ப்பறவை சாதிகளும்
வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெய்ஞ்ஞான
நாட்டமுறும் என்னிலிங்கு நானடைதல் வியப்பன்றே. - வள்ளலார் சுவாமிகள்.



இவை அனைத்தும் மாணிக்க வாசக சுவாமிகள் தீந்தமிழால் சிவபெருமானை குறித்துப் பாடிய திருவாசகத்தை பற்றிய சில புகழாரங்கள். சிவபெருமானே குருவாக வந்து மாணிக்கவாசகரை தடுத்தாட் கொண்டார். சைவ சமய குரவர்கள் நால்வர்களுள் ஒருவரான மாணிக்க வாசகரின் வரலாற்றை இந்த மார்கழி மாதத்தில் அவரது திருவெம்பாவையும், திருப்பள்ளியெழுச்சியையும் காண்பதற்கு முன் காண்போம்.



பாண்டிய நாட்டில் திருவாதவூரில் சம்புபாதாசிருதர், சிவஞானவதி ஆகியோருக்கு மகவாக அவதரித்தார். இவரது இயற்பெயர் திருவாதவூரர். இவர் 63 நாயன்மார்களுள் ஒருவர் இல்லை மேலும் சுந்தரரின் திருத்தொண்டர் தொகையில் இவர் இடம் பெறவில்லை. எனவே இவர் சுந்தரர் காலத்திற்கு பின் பட்டவராக இருக்க வேண்டும். இளமையில் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியதால் பாண்டிய மன்னன் அரிகேசரி அல்லது அரிமர்த்தன பாண்டியனின் அமைச்சராக இருந்தார். "தென்னவன் பிரம்மராயர்" என்னும் உயரிய விருதை அளித்து பெருமை படுத்தினார். அரசனுக்கு அமைச்சராக இருந்தும் அவர் ஆன்மீக நாட்டம் உடையவராகவே இருந்தார். தக்கவொரு குருவை அவர் உள்ளம் நாடியவாறிருந்தது. ஒரு நாள், அரசன் தன்னுடைய குதிரைப் படையைப் பலப்படுத்தவேண்டி, வாதவூராரை அழைத்து, கருவூலத்திலிருந்து பொன்னை எடுத்துக்கொண்டு, கீழைக்கடற்கரைக்குச் சென்று, நல்ல அரபு, பாரசீகக் குதிரைகளாகப் பார்த்து, வாங்கிவரும்படி ஆணையிட்டான். அக்காலத்தில் தமிழகத்தின் கடற்கரைப்பகுதிகளில் சில பட்டினங்களில் பாரசீக வளைகுடாப் பகுதியிலிருந்து வந்த அராபியர்கள் குடியேற்றங்களை அமைத்துக் கொண்டு வாணிபம் செய்து வந்தனர்.


ஒட்டகங்களின்மீது பெரும்பொருளை ஏற்றிக்கொண்டு வாதவூரார் பாண்டிநாட்டு வடஎல்லையில் இருந்த "திருப்பெருந்துறை" என்னும் ஊரை அடைந்தார். இப்போது இத்திருத்தலம் ஆவுடையார் கோவில் என்று அழைக்கப்பதுகின்றது. அவ்வூரை நெருங்கியதுமே வாதவூராருக்கு ஏதோ பெரும்பாரமொன்று மறைந்ததுபோலத் தோன்றியது. அங்கு ஓரிடத்திலிருந்து, "சிவ சிவ" என்ற ஒலி கேட்டது. அந்த ஒலியை நோக்கிச் சென்றார். அங்கு ஈசனே குருந்தமரத்தடியில் சீடர்களுடன் மௌனகுருவாக அமர்ந்திருந்தான். இறைவன் அவரின்மீது தனது அருட்பார்வையைச் செலுத்தி அவருக்கு "மாணிக்கவாசகன்" என்னும் தீட்சாநாமமும் வழங்கினான். மாணிக்கவாசகராய் மாறிவிட்ட திருவாதவூராரும் திருப்பெருந்துறையிலேயே தங்கி, பெரும் கோவிலைக்கட்டி பல திருப்பணிகளையும் அறப்பணிகளையும் செய்து கொண்டிருந்தார். வந்த காரியத்தையும் மறந்தார்; அரசன் கொடுத்தனுப்பிய பணத்தையும் கோவில் கட்டுவதிலேயே செலவிட்டுவிட்டார். குதிரைகளை ஞாபகப்படுத்தி பாண்டியமன்னன் தூதுவர்களை அனுப்பினான். ஈசனின் ஆணைப்படி, ஆவணி மூல நாளன்று குதிரைகள் வந்து சேருமென்று சொல்லியனுப்பினார். ஒற்றர்களின் வாயிலாக உண்மையினை அறிந்த மன்னவன் செலவழித்த பொருட்களைத் திருப்பித்தருமாறு மாணிக்கவாசகரைச் சிறையில் அடைத்துத் துன்புறுத்தினான்.


மாணிக்க வாசகரின் உண்மையான பக்தியை உலகுக்கு தெரியப்படுத்த திருவுளம் கொண்ட சொக்கேசப்பெருமான் தானே காட்டில் திரிந்த நரிகளைக் குதிரைகளாக மாற்றி, (நரிதனை பரியாக்கி) தன்னுடைய பூதர்களை ராவுத்தர்களாக்கி, தானும் "சொக்கராவுத்தர்"என்னும் கோலத்தொடு ஓர் அராபியக் குதிரை வணிகனாகப் பாண்டியனை அடைந்து குதிரைகளை ஒப்படைத்தார். ஆனால் இரவில் போலிக்குதிரைகள் நரிகளாக மாறி, பழைய குதிரைகளையும் சேதப்படுத்திவிட்டு, மதுரை நகரில் பெருங்குழப்பம் விளைவித்து, காட்டிற்குள் ஓடிப்போயின. மீண்டும் அரிமர்த்தன பாண்டியன் மாணிக்கவாசகரை சித்திரவதை செய்தான். அப்போது சொக்கேசப்பெருமான், வைகையில் பெருவெள்ளம் தோன்றிடச் செய்தார். அரசன் வீட்டுக்கு ஒருவர் வந்து வைகையை அடைக்க வேண்டும் என்று ஆணையிட்டான். அவ்வமயம் பிட்டு விற்கும் வந்திக்கு யாரும் இல்லாததால் அவர் ஆலவாயண்ணலிடம் வேண்டி முறையிட்டாள். அவளுக்கும் அருள கூலியாளாகத் தானே வந்து கூலியாக உதிர்ந்த பிட்டு மட்டுமே கூலி என்று பேசி அன்று சோதனையாக எல்லா பிட்டும் உதிர்ந்து விட அதை உண்டு விட்டு , அனைவரும் மண் எடுத்து வெள்ளத்தை அடைத்துக் கொண்டிருக்க , கூலியாளாக வந்த பெருமான் மட்டும் தூங்கிக் கொண்டு இருந்தார். அங்கே வந்த அரிமர்த்தன பாண்டியன் கோபம் கொண்டு தன் கையால் இருந்த பிரம்பால்  முதுகில் அடிக்க அந்த அடி எல்லாவுயிர்களின் முதுகிலும்  விழ அரசன் மயங்கி நிற்க , தானே ஒரு கூடை மண்ணை வெட்டிப்போட்டு, வைகையின் வெள்ளத்தை அடக்கி மறைந்தார்.



மணிவாசகரின் பெருமையை அறிந்த மன்னன், அவரை விடுவித்தான். ஆனால் அவர் அரசவையை விட்டு, திருப்பெருந்துறைக்குச் சென்று தங்கி, குருபீடம் ஒன்றை நிறுவினார். அங்கு அவர் "சிவபுராணம்", "திருச்சதகம்" முதலிய பாடல்களைப்பாடினார். அதன்பின்னர் இறைவனின் ஆணையை மேற்கொண்டு திருஉத்தரகோசமங்கை என்னும் தலத்தில் இருந்து பாடல்கள் இயற்றினார். அதன்பின்னர் தலயாத்திரை புரிந்து திருவண்ணாமலையில் "திருவெம்பாவை", "திருவம்மானை" ஆகியவற்றைப்பாடினார். கடைசியாகத் தில்லையை அடைந்தார். அங்கு ஈழநாட்டைச் சேர்ந்த புத்தமதக்குருவை வாதில்வென்று, ஈழமன்னனின் ஊமைமகளைப் பேசவைத்து, அவர்களை மதமாற்றம் செய்தார். ஈழத்து புத்தகுரு கேட்ட கேள்விகளுக்கு, ஈழத்தரசனின் குமாரியின் வாயால் சொல்லச்செய்த விடைகளே, "திருச்சாழல்" என்னும் பதிகமாக அமைந்தன. தில்லையில் "அச்சோப்பதிகம்" போன்ற சிலவற்றைப்பாடினார்.
 ஒருநாள், பாண்டிநாட்டு அந்தண வடிவில், ஈசன் மணிவாசகரிடம் வந்து, அதுவரை அவர் பாடியுள்ள பாடல்களை முறையாகச்சொல்லுமாறு கேட்டுக்கொண்டான். மணிவாசகர் அவ்வாறு சொல்லச்சொல்ல, இறைவனும் தன் திருக்கரத்தால் ஏட்டில் எழுதிக்கொண்டான். திருவாசகப் பாடல்கள் அனைத்தையும் எழுதிய பின்னர், ஈசன் மணிவாசகரிடம், "பாவை பாடிய வாயால், கோவை பாடுக!", என்று கேட்டுக் கொண்டான். மணிவாசகர் அவ்வண்ணமே திருக்கோவையாரைப் பாட, ஈசன் அதையும் ஏட்டில் எழுதிக்கொண்டான். எழுதி முடித்தவுடன் இறுதியில், "இவை திருச்சிற்றம்பலமுடையான் எழுத்து", என்று கைச்சாத்துச் சாற்றி திருச்சிற்றம்பலத்தின் வாசற்படியில் வைத்து மறைந்தான். வாசற்படியில் ஏட்டுச்சுவடி இருப்பதைக்கண்ட அர்ச்சகர், தில்லைமூவாயிரவர் ஆகியோர் மாணிக்கவாசகரிடம் அந்தப்பாடல்களுக்குப் பொருளைக் கேட்டனர். அவனே அதற்கு அர்த்தம் மாணிக்கவாசகர், அவர்களை அழைத்துக்கொண்டு திருச்சிற்றம்பலத்தை யடைந்து, "அந்நூலின் பொருள் இவனே!", என்று சிற்சபையில் நடனமாடும் நடராசப் பெருமானைக் காட்டியவாறு, சிற்றம்பலத்துள் தோன்றிய பேரொளியில் ஆனி மாத மூலத்தன்று கலந்து, கரைந்து, மறைந்தார்.

மாணிக்கவாசகரால் எழுதப்பட்ட பெரும் நூல்கள் இரண்டு: 1.திருவாசகம்; 2. திருக்கோவையார். இவற்றுள் திருவாசகம் என்பது ஒரு பெரிய தொகுப்பு நூல். இதில் மொத்தம் 51 பாடல் நூல்கள் உள்ளன. அவற்றுள் பத்துப்பத்துப் பாடல்களாகப் பாடிய பதிகநூல்களே அதிகம். நீண்ட பாடல்களாக விளங்குபவை சிவபுராணம், கீர்த்தித் திருவகவல், திருவண்டப்பகுதி, போற்றித் திருவகவல், திருச்சதகம் ஆகியவை. இவற்றில் பல பாடல்கள் புகழ்பெற்றவையாய் விளங்கிடினும், மிக அதிகமாக வழங்கப்படுபவை, சிவபுராணமும் திருவெம்பாவையும், திருப்பள்ளியெழுச்சியும் தான். திருவெம்பாவை, தொள்ளாயிரம் ஆண்டுகளாக சைவக்கோயில்களில் ஓதப்படும் பெருமையுடையது. "தமிழ் மந்திரம்" என்ற பெயரில் அந்தக்காலத்தில் அது கடல் கடந்து சயாம் நாட்டிற்குச் சென்றிருக்கிறது. அரசனுக்கு முடிசூட்டும் காலத்திலும், சில திருவிழாக் காலத்திலும், சயாமியர் திருவெம்பாவையை ஓதுகின்றனர். ஒவ்வொரு திருவெம்பாவைப்பாடலின் முடிவிலும் "ஏலோர் எம்பாவாய்!" என்ற சொற்றொடர் காணப்படும். அது மருவி வந்து இப்போது சயாமியரால், " லோரி பாவாய்" என்று அழைக்கப்படுகிறது.

"வான்கலந்த மாணிக்கவாசக! நின் வாசகத்தை


நான்கலந்து பாடுங்கால், நற்கருப்பஞ்சற்றினிலே


தேன்கலந்து, பால்கலந்து, செழுங்கனித் தீஞ்சுவை கலந்து,என்


ஊன்கலந்து, உயிர்கலந்து, உவட்டாமல் இனிப்பதுவே!" வள்ளலார் சுவாமிகள்

 
07 Dec 2013

1 comments:

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.