திருநெல்வேலி மாவ்ட்டத்தில் அமைந்துள்ள சங்கரன்கோயில் என்னும் ஊரானது சங்கரநயினார்கோயில் என்றே பலகாலம் அழைக்கப்பட்டு வந்தது. சங்கரன்கோவிலாக மாற்றப்பட்டத்திற்கான ஆதாரங்களைத் தேடும் முயற்சி துவக்கப்பட்டுள்ளது. ஆதியில் இக்கோயில், ஸ்ரீசங்கரலிங்கசுவாமி உடனுறையும் ஸ்ரீகோமதி அம்பிகை என்ற ஆவுடையம்மன் ஆகிய இரு சந்நிதிகளை மட்டுமே உடைத்தாயிருந்தது. இதனைப்பற்றிய குறிப்பு திருநெல்வேலி கெசட்டியர் ( Tinnevally Gazetter Vol ! என்ற நூலில், எச்.ஆர். பேட் ஐ..சி.எஸ் எழுதி அரசாங்கத்தார் வெளியிட்டது. பக்கம் 413 - 414 -ல் காணப்படுகிறது.
உக்கிரபாண்டியர் காப்பறையனோடு வந்து புற்றையும் பாம்பையும் சிவலிங்கத்தையும் கண்டு கோயில் கட்டினார். ஊரை உருவாக்கினார் இதுதான் சங்கரநயினார் கோவிலின் தொடக்கம். கதை மேலும் போகிறது. இங்கேதான் சிவபெருமான் தமது மனைவியார் கோமதியம்மைக்கும், சிவன்தான் பெரியவன், திருமால்தான் பெரியவன் என்று போரிட்ட சங்கனுக்கும் பதுமனுக்கும் தமது சங்கரநாராயணத் திருக்கோலத்தைக் காட்சி தந்தருளினார். இதுவரை சிவனாரைப் பற்றி மட்டுமே குறித்து வந்த கதை பன்னிரண்டாவது நூற்றாண்டில் பெரியார் இராமானுசாச்சாரியாரால் தொடங்கப்பெற்ற தத்துவக் கொள்கையை விளக்கும் வரலாற்றைத் திடீரெனப் புகுத்துகிறது. இந்தக் கோயிலோடு திருமாலுக்குத் தொடர்பினை உண்டாக்கி அதற்கு ஆதரவு தேடும் பொருட்டுச் சங்கரலிங்கத்தின் பெயராகிய சங்கரநயினார் என்பதற்குப் பதிலாகச் சங்கரநாராயணர் ( சிவனும் திருமாலும் ) என்ற பெயரை முதன்மையாக்கும் இக்கதையின் பகுதி பிற்காலத்தில் நுழைக்கப்பட்டதென்பது சிறிதும் சந்தேகமில்லாதது.
கோயிலின் அமைப்பு அதன்கண் திருமாலுக்கு ( சங்கரநாராயணருக்கு ) ஆரம்பத்தில் கோயில் இல்லை என்பதை வெளிப்படுத்துகிறது. கோயில் இரண்டு பெரும் பகுதிகளை உடையது. அவற்றில் பெரியதில் சிவபெருமானின் அடையாளமாகிய சிவலிங்கம் ( சங்கரலிங்கம் ) இருக்கிறது. சின்னதில் கோமதி அம்பிகை இருக்கின்றாள். மூன்றாவதாக இரண்டுக்கும் இடையிலே நாராயணருக்கு ஒரு சிறு கோயில் நுழைக்கப் பெற்றது. ஆனால், இந்தக் கோயில் இந்த மூன்றாவது பகுதியில் புகுத்துதலுக்குப் பொருந்தியதாக இல்லை. எப்படியெனில் வழிப்போக்கனாகிய ஓர் ஏழை அடியேனும் கூடத் தெருவிலிருந்தபடியாகவே கண்டு வழிபாடு செய்வதற்கு ஏதுவாகச் சிவலிங்கம், அம்மை ஆகிய இறைவன், இறைவி சன்னிதிகள் தலைவாயிலிலிருந்து பல தொடர்க் கதவுகளினால் திறந்திருப்பதுபோல, சங்கரநாராயணர் சந்நிதிக்குச் சிறிதும் வசதி இல்லை. அதனால் சங்கரநாராயணர் கோயில் தலைவாசல் இல்லாததாய்ப் பெரிய கோயிலின் உள்ளேயே அடங்கிப் போய்விட்டது. அதாவது தெருவிலிருந்தபடியே இறைவன் அல்லது இறைவியை வழிபடும் வசதி சங்கரநாராயணர் சன்னதியில் இல்லை என்று குறிப்பிடுகின்றார்.
சிவ வழிபாட்டிலிருந்து திருமால் வழிபாட்டிற்கு மாற்றப் பெற்றுள்ளனவாக நாம் கேள்விப்படுகிற கோவில்கள் பல இருக்கின்றன. வட ஆர்க்காட்டில் உள்ள திருப்பதிப் பெரிய கோவிலும், இராமநாதபுரம் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள பெருமாள் கோவிலும் இங்கே குறிப்பிடத்தக்கன. இந்த முயற்சி வீர வைணவர்களாக இருந்த விஜயநகர மன்னர் காலத்தியது. ஆனால், இம்முயற்சிக்குச் சங்கரநயினார் கோயிலில் முன்னாலேயே இரண்டு தெய்வங்களும் இருக்கின்றன என்ற தந்திரமான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக்காலத்தில் தருமகர்த்தாக்கள் இந்தக் கோயிலில் இரண்டு தெய்வங்களும் இருப்பதை மிகைப்படுத்தி வருவதோடு நிலங்களுக்குப் பட்டாவைச் சங்கரநாராயணர் என்ற பெயருக்கே ஆக்கி வருகிறார்கல். என்றாலும், கோவிலின் பூஜை முறைகளில் இப்புதுத் தெய்வம் ( சங்கரநாராயணர் ) மிகச் சிறு பகுதிக்கே உரியதாக இருக்கிறது. சங்கரலிங்கப் பெருமானின் மனைவியாகிய கோமதியம்மையின் அருள் விளக்கமே இக்கோயிலின் மேன்மைக்கெல்லாம் காரணம் என்பதுதான் உண்மை.
இன்றும் சங்கரன்கோவிலில் தீவிர சிவபக்தர்கள் சங்கரநாராயணர் சன்னிக்குள் செல்ல மாட்டார்கள். மேலும் சிலர் உள்லே சென்று இடப்பகுதிப் பிரகாரத்தை மட்டும் சுற்றிவிட்டுத் திரும்பிவிடுவார்கள். இது கண்ணால் கண்டுவரும் உண்மை.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.