Tuesday, December 3, 2013

சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா?  - ஆறுமுகசாமி

சிதம்பரம் நடராஜர் கோயில் வழக்குத் தொடர்பாக அரசு சார்பில் வழக்கறிஞரை நியமிக்க வலியுறுத்திச் சிவனடியார் ஆறுமுகசாமி முன்னிலையில், மனித உரிமை பாதுகாப்பு மையத்தினர் சில தினங்களாக நடராஜர் கோயிலில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். திங்கள்கிழமையும் போராட்டம் நடந்தது.

விவகாரம் பெரிதான நிலையில், கோயிலுக்குள் தேவாரம் பாடக் கூடாதா எனப் பொது தீட்சிதர்களில் ஒருவரான சாம்பமூர்த்தியிடம் கேட்டோம். இதற்கு அவர் அளித்த பதில், “யார் வேண்டுமானாலும் கோயிலுனுள் வந்து தேவாரம் பாடலாம். நாங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மாறாகக் கோயில் கர்ப்பக் கிரகத்தினுள் ஆகம விதிகள் எனச் சிலவற்றைக் கடைபிடித்தாக வேண்டும்.

கர்ப்பகிரகத்தினுள், அர்த்தமண்டபத்தில் வாய்விட்டுப் பாடக்கூடாது, அதேவேளையில் மகாமண்டபத்தினுள் பாடலாம். ஆனால், இந்தக் கோயிலில் அர்த்தமண்டபம் மற்றும் மகா மண்டபம் எனத் தனித்தனியாக எதுவும் இல்லை. முழுவதும் கர்ப்பகிரகமாகவே ஏற்றுக்கொள்ளப்படுவதால், இங்குச் சமஸ்கிருதத்தில் மட்டும் தான் பூஜை நடைபெறுகிறது.

நந்திக்குப் பின்னால் நின்று தேவாரம் பாடுவதையோ, திருவாசகம் பாடுவதையோ நாங்கள் எதிர்க்கவில்லை. ஆறுமுகசாமிக்கு தேவாரம் தெரியாது என்பதுதான் உண்மை என்றார் வெங்கடேச தீட்சிதர்.

பரம்பரையாக 2 ஆயிரம் ஆண்டுகளாகத் தீட்சிதர்கள் பராமரித்து வருகின்றனர். கோயிலை அரசு எடுத்துக் கொண்டு நிர்வாகத்தை மட்டும் தான் நாங்கள் செய்கிறோம். போராட்டம் என்ற பெயரில் பொதுத் தீட்சிதர்களுக்கு எதிரான போராட்டம் தான் இங்கு நடைபெறுகிறது” என்றார் சாம்பமூர்த்தி.

இது தொடர்பாக மனிதநேயப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் செந்தில் கூறுகையில், “கோயில் அரசு ஏற்றுக்கொண்ட பின்னர்க் கோயில் வருமானம் உயர்ந்துள்ளது. விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் சுத்தம் செய்யப்படுகிறது. அன்றாடம் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மொத்தத்தில் அடிப்படை வசதிகள் மேம்பட்டுள்ளது. தீட்சிதர்கள் பக்தர்களிடம் பணம் கறப்பதைத் தொழிலாகக் கொண்டிருந்தனர். அவை தற்போது தடைபட்டுள்ளது. எனவே அரசு தான் இதை நிர்வகிக்க வேண்டும்” என்றார்.

தேவாரம் பாடி பரபரப்பை ஏற்படுத்திய ஆறுமுக சாமியை தேடினோம். அவர் சாலையோரம் அமர்ந்து யாசகம் செய்துகொண்டிருந்தார். அவரிடம் கேட்டபோது, “நான் எப்போதும் போல் தேவாரம் பாடி வருகிறேன். அரசு வழங்கும் உதவிப்பணம் ரூ.3015 கிடைத்து வருகிறது. என்னைப் பொறுத்தவரை கோயில் நிர்வாகத்தை அரசு தான் நிர்வகிக்க வேண்டும். அதற்கு நான் போராடுகிறேன். சமூக ஆர்வலர்கள் என் பின்னால் உள்ளனர்” என்றார்.                                                                                                                                                 

நன்றி ;- தி  இந்து  - 04 - 12 - 2013
03 Dec 2013

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.