பழநி கோயிலில் பூட்டிய அறையில் 10 ஆண்டுகளாக ஐம்பொன் முருகன் சிலையை வைத்திருப்பதும், தற்போது பூட்டிய அறையில் அந்த சிலைக்கு தினசரி வழிபாடு நடப்பதும் அரசுக்கு ஆகாது என ஒரு தரப்பினர் விநோத நம்பிக்கை கொண்டுள்ளனர்.
முருகனின் அறுபடை வீட்டில் 3-வது படை வீடான பழநி கோயிலில், மூலவர் சிலை நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டதும், மேற்கு நோக்கி அருள்பாலிப்பதும் சிறப்பு மிக்கது. பழநி கோயில் மீது செவ்வாய்கிரகத்தின் நேரடி பார்வை விழுவதால், இந்த கோயில் சிலை அரசுக்கு உகந்ததாக புராண காலத்தில் இருந்தே ஐதீகமாகக் கூறப்படுகிறது. அதுபோலவே, பழநியில் வெற்றி பெற்ற கட்சியே, தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது இதுவரை நடந்துவருகிறது. மற்றொருபுறம், இந்தக் கோயிலில் ஆகம விதிமீறல் நடைபெறும் ஒவ்வொரு காலகட்டத்திலும், அது ஆட்சியாளர்களை பாதிப்பதும் நடக்க தவறுவதில்லை.
சமீபத்திய உதாரணமாக, கடந்த மாதம் 7-ம் தேதி நடந்த பழநி திருஆவினன்குடி கோயில் கும்பாபிஷேகத்தில் கோயில் கருவறையில் மருந்து சாத்துதல் நிகழ்ச்சியில் குருக்கள், தேவஸ்தான அதிகாரி களுடன் ஆகம விதியை மீறி, கருவறையில் பெண்கள் சென்றது, கோபுரம் மீது கும்பாபிஷேகம் நடந்து கொண்டிருந்தபோது ஆத்மார்த் தமாக மந்திரம் சொல்ல வேண்டிய அர்ச்சகர்கள் செல்போனில் நிகழ்ச்சியை படமெடுத்து அடுத்த அரை மணி நேரத்தில் தங்கள் முகநூலில் (பேஸ் புக்) வெளியிட்டது உள்ளிட்ட சம்பவங்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. இந்த சம்பவம் நடந்த அடுத்த வாரமே, முதல்வராக இருந்த ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பதவியை இழந்து சிறை சென்றார்.
இந்நிலையில், பழநி மலைக் கோயிலில் பாரவேல் மண்டபம் அருகே வடமேற்கு மூலையில் கிழக்கு நோக்கி அமைந்துள்ள பூட்டிய அறையில், யாராலும் கண்டுகொள்ளப்படாமல் 10 ஆண்டுகளாக பூட்டி வைக்கப்பட்டிருந்த சிலைக்கு, தற்போது தினமும் தீபாராதனை, நெய்வேத்தியம் காட்டி பூஜை நடைபெறுகிறது. பூட்டிய அறையில் சாமி சிலைக்குபூஜை செய்வது ஆட்சியாளர்களுக்கு ஆபத்து என்றும், அதன் பிரதிபலிப் பாகவே தற்போது தமிழக அரசியல் சூழ்நிலை எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக தலைகீழாக மாறியுள் ளதாக இந்து அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து திண்டுக்கல் இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலர் எம்.ஜெகன், விசுவ ஹிந்து பரிஷத் நகர் செயலர் தா.செந்தில்குமார் ‘தி இந்து’விடம் கூறியது: ஒரு சிலை (லிங்கம்) பிரதிஷ்டை செய்யப்பட்ட கருவறையில், இன்னொரு சிலை பிரதிஷ்டை செய்தால், அது ஆட்சிக்கு ஆகாது. இதையே பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் `ஸ்த்தாவர லிங்கம், பரிதொன்றில் ஸ்தாபித்தால், ஆவதன் முன்னே அரசு நிலைகெடும்’ என திருமூலர் தெரிவித்துள்ளார்.
ஆனால், பெரியோர்கள் கூற்றை பொருட்படுத்தாமல் தொடர்ச்சியாக பழநி கோயிலில் தனிப்பட்ட நபர் களுக்காக ஆகம விதிகள் மீறப்பட்டு வருகின்றன. 2004–ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி பழநி கோயிலில் நவபாஷாண மூலவர் சிலை இருக்கும் கருவறையில் ஜெயேந்திரர் தலைமையில், மூலவரை மறைத்து அதே உயரத்துக்கு 100 கிலோ எடையில் ஐம்பொன் சிலையை ஆகம விதிகளை மீறி, இரவோடு இரவாக யாரும் அறியாவண்ணம் வைத்தனர். அதிகாலையில் இதுகுறித்து அறிந்த மக்கள், இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என எதிர்ப்பு தெரிவித்தும் அந்த சிலை அகற்றப்படவில்லை.
கருவறையில் ஒரு மூலவர், ஒரு உற்சவர்தான் இருக்க வேண்டும். ஆனால், பழநி கருவறையில் 3 சிலைகள் இருந்ததால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் எனத் தெரிவித்தனர். அதை யாரும் பொருட்படுத்தவில்லை. நினைத்ததுபோலவே, இந்த சிலை வைத்த சிறிது காலத்தில் நடந்த மக்களவைத்தேர்தலில் அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்தது. அடுத்த சில நாட்களில், அந்த சிலையை அப்புறப்படுத்தி கடந்த 10 ஆண்டாக மலைக் கோயிலில் டபுள் லாக்கர் பாதுகாப்பு பெட்டகத்தில் பூட்டிய அறையில் வைத்தனர். பூட்டிய அறையில் சிலையை வைக்கக் கூடாது. அது தெய்வ குற்றமாகும் என சொன்ன தாகக் கூறி, தற்போது தினமும் 9 மணிக்கு ஒரு அர்ச்சகர் மட்டும் அந்த அறைக்கு சென்று, அந்த சிலைக்கு ராஜ அலங்காரம் செய்து நெய்வேத் தியம் செய்கிறார். பக்தர்கள் வந்து செல்லக்கூடிய இடத்தில் பூட்டிய அறையில் சிலையை வைக்கவும் கூடாது, யாருக்கும் தெரியாமல் அந்த சிலைக்கு பூஜை செய்வது அதைவிட பெரிய தெய்வ குற்றம் என்றனர்.
ஐம்பொன் சிலை என்பதால் வெளியே வைக்கவில்லை
இதுகுறித்து கோயில் இணை ஆணையர் ராஜமாணிக்கத்திடம் கேட்டபோது, ‘எந்த ஆகம விதிமீறல்களும் நடக்கவில்லை. ஆகம விதி மீறல் நடந்திருந்தால் 35 ஆண்டுகளுக்குப் பின் பழநியில் இவ்வளவு அதிக மழை பொழிவு ஏற்பட்டிருக்குமா? வெள்ளம் வந்து செழிப்பாகி இருக்குமா? மலைக்கோயில்களில் அனைத்து தெய்வங்களுக்கும் பரிகார பூஜை செய்வது வழக்கம். அதுபோல, இந்த ஐம்பொன் சிலைக்கு தினசரி ஒரு கால பூஜை நடத்தப்படுகிறது. இந்த வழிபாடு நீண்ட காலமாக நடக்கத்தான் செய்கிறது. இந்த சிலை ஐம்பொன்னால் ஆனது என்பதால், வெளியே வைக்க முடியவில்லை. அதனால், அந்த சிலை பாதுகாப்பு கருதி பக்தர்கள் தரிசனத்துக்கு வைக்கவில்லை. பூஜை நடைபெறும்போது மட்டும் அந்த அறை திறந்திருக்கும். மற்ற நேரத்தில் பூட்டியிருக்கும் என்றார்.
Keywords: பழநி கோயில், முருகன் சிலை
நன்றி : தி இந்து
0 comments:
Post a Comment