Thursday, October 29, 2015

அன்புடையீர்,
வணக்கம்.
26.10.2015 அன்று கும்பகோணத்தில் 14 கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றன. அக்கோயில்களில் ஒன்பது கோயிலுக்குச் சென்றோம். முதலில் அபிமுகேஸ்வரர் கோயிலுக்குச் செல்வோம், வாருங்கள். கருத்து கூறுங்கள்.
அன்புடன்,
ஜம்புலிங்கம்
இணைப்பு : 

B Jambulingam's profile photo
B Jambulingam's profile photo

B.Jambulingam


26.10.2015 அன்று கும்பகோணத்தில் பல கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றன. அக்கோயில்களில் அபிமுகேஸ்வரர்,  பாணபுரீஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், கம்பட்ட விஸ்வநாதர் (மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி காணும் சைவக்கோயில்கள்), வராகப்பெருமாள் (காவிரியில் தீர்த்தவாரி காணும் வைணவக்கோயில்களில் ஒன்று), திரௌபதியம்மன், வரசித்தி விநாயகர், பகவத் விநாயகர், யானையடி அய்யனார் கோயில்களுக்குச் சென்றோம். 14 கோயில்களில் கும்பாபிஷேகம் ஆகும் நிலையில் ஒன்பது கோயிலுக்குச் சென்றோம். முதன்முதலாக நாங்கள் சென்ற அபிமுகேஸ்வரர் கோயிலுக்குச் செல்வோம், வாருங்கள்.



முன்பொரு காலத்தில் சிவன் வேட உருவம் தாங்கி அமுதக்கலசத்தை உடைத்துச் சிதைத்தபோது அதிலிருந்து ஒரு தேங்காய் விழுந்த இடத்தில் ஒரு தென்னை மரம் தோன்றியதாகவும் அதனடியில் ஒரு சிவலிங்கம் தோன்றியதாகவும் அதனால் இத்தலம் நாளிக்கேச்சரம் என்று கூறப்படுவதாகவும் தலவரலாறு கூறுகிறது. ஆதலால் இறைவனை நாளிக்கேசன் என்றும் அழைக்கின்றனர். 

மகாமகக்குளத்தின் கீழ்க்கரையில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு காசி விசுவநாதர் கோயில் வழியாகச் சென்றோம். மகாமகக்குளக்கரையில் ஆங்காங்கு பக்தர்கள் வந்துகொண்டிருந்தார்கள். 




கோயிலின் அருகே இருந்தும், மகாமகக்குளக்கரையியிருந்தும், கும்பாபிஷேகத்தைக் காண ராஜகோபுரம் தமக்குத் தெளிவாகத் தெரியும்படி நின்றுகொண்டிருந்தனர்.  ராஜகோபுரத்தைக் கண்டு தரிசனம் செய்தோம். 

ராஜ கோபுர வாயில் வழியாக கோயிலுக்குள் சென்றோம். கொடிக்கம்பத்தைக் கடந்து உள்ளே சென்று மூலவர் அபிமுகேசரைக் கண்டோம். 

பிறகு அங்கிருந்து யாகசாலைக்குச் சென்றோம். கும்பாபிஷேகத்திற்காக சிறப்பு பூஜைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. 




யாகசாலை பூஜையைப் பார்த்துவிட்டு கருவறைத் திருச்சுற்றில் வரும்போது மந்திரங்கள் ஓதிக்கொண்டிருப்பதைக் கண்டோம். 

கருவறை விமானத்தைப் பார்த்துவிட்டு அங்கிருந்து அம்மன் சன்னதிக்குச் சென்றோம். இறைவி அமுதவல்லியைக்கண்டோம். பின்னர் கோயிலுக்கு வெளியே வந்தோம். முன்னரை விட கூட்டம் அதிகமாகவே கோயிலுக்கு அருகே மகாமகக்குளக்கரையின் படிக்கட்டின் ராஜகோபுரம் தெரியும் வகையில்  அமர்ந்தோம். குளத்தைச் சுற்றி அனைத்துத் திசைகளிலிருந்தும் கும்பாபிஷேகத்தைக் காண பக்தர்கள் காத்திருப்பதைக் கண்டோம். 

சிறுவர்கள் மகாமகக்குளத்தில் நீச்சலடித்துக்கொண்டிருப்பதைக் கண்டோம். அனைவருடைய கண்களும் ராஜகோபுரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது குளிக்கும் சிறுவர்களோ கையில் பெரிய குச்சியை வைத்துக்கொண்டு போட்டி போட்டுக்கொண்டு மண்டபத்திலிருந்து குதித்து மகிழ்ச்சியோடு விளையாடிக் கொண்டிருந்தார்கள். 



ராஜகோபுரத்திற்கு மேலே சூரியன் அழகாக ஒளிவீசிக்கொண்டிருக்க கும்பாபிஷேக  நிகழ்வுகள் தொடர்ந்தன. சிறிது நேரத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது. இறைவன் திருநாமத்தை உச்சரித்தோம். சிறிது நேரம் கோயிலில் இருந்துவிட்டு அங்கிருந்து மன நிறைவோடு கிளம்பினோம். கும்பகோணத்தில் இதே நாளில் கும்பாபிஷேகம் கண்ட பிற கோயில்களுக்கு தொடர்ந்து செல்வோம்.
--------------------------------------------------------------------------------------------------
மகாமகத்தில் தீர்த்தவாரி கொடுக்கும் சைவக்கோயில்கள்
  • காசி விஸ்வநாதர் கோயில் (நவகன்னியர் அருள்பாலிக்கும் இடம்)
  • கும்பேஸ்வரர் கோயில் (அமிர்தகலசத்திலிருந்து குடமூக்கு தங்கிய இடம்)
  • நாகேஸ்வரர் கோயில் (வில்வம் விழுந்த இடம்)
  • சோமேஸ்வரர் கோயில் (உறி விழுந்த இடம்)
  • கோடீஸ்வரர் கோயில், கொட்டையூர் (அமிர்தத் துளிகள் விழுந்த இடம்)
  • காளஹஸ்தீஸ்வரர் கோயில் (சந்தனம் விழுந்த இடம்)
  • கௌதமேஸ்வரர் கோயில் (பூணூல் விழுந்த இடம்)
  • அமிர்தகலசநாதர் கோயில், சாக்கோட்டை (கலச நடுப்பாகம் விழுந்த இடம்)
  • பாணபுரீஸ்வரர் கோயில் (வேடுவ உருவில் சிவன், பாணம் எய்த இடம்)
  • அபிமுகேஸ்வரர் கோயில் (தேங்காய் விழுந்த இடம்)
  • கம்பட்ட விஸ்வநாதர் கோயில் (புஷ்பங்கள் விழுந்த இடம்)
  • ஏகாம்பரேஸ்வரர் கோயில் (மற்ற உதிரி பாகங்கள் விழுந்த இடம்)
--------------------------------------------------------------------------------------------------
துணை நின்றவை
மகாமகப்பெருவிழா 2004 கும்பகோணம், இந்து சமய அறநிலையத்துறை,தமிழ்நாடு அரசு

0 comments:

Post a Comment