Tuesday, November 17, 2015


சபரிமலை: சபரிமலை கோவிலில் கார்த்திகை மகர விளக்கு பூஜையை ஒட்டி நடை திறக்கப்பட்டதையடுத்து சரணம் கோஷம் முழங்க பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி நடை திறக்கப்பட்டு, கார்த்திகை 1 ஆம் தேதி முதல் 60 தினங்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.இதையொட்டி ஐய்யப்ப பக்தர்கள் கார்த்திகை முதல் நாளில் மாலை அணிந்து விரதம் தொடங்கி, இருமுடி கட்டி ஐய்யப்பன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்துவார்கள். அதன்படி சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் அடுத்த மாதம் 27 ஆம் தேதி மண்டல பூஜையும், ஜனவரி 15 ஆம் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெறுகிறது.
மண்டல பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் நடை திறப்பதையொட்டி, ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி வந்தனர்.  இந்த ஆண்டின் மண்டல பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.  கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல் சாந்தி கிருஷ்ணதாஸ் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைத்து தீபாராதனை காட்டினார். அதைத்தொடர்ந்து 18 ஆம் படிக்கு கீழ் உள்ள நெருப்பு ஆழியில் கற்பூரம் வைத்து தீ மூட்டப்பட்டது.
நேற்று முதல் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், அதைத்தொடர்ந்து 11.30 மணி வரை நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜைக்கு பின் பகல் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். மீண்டும் மாலையில் 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும். இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம், 10 மணிக்கு நடைபெறும் அத்தாள பூஜைக்கு பின் இரவு 10.30 மணிக்கு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு நடை சாத்தப்படும். பக்தர்களின் வருகை அதிகமானால், அவர்களின் தரிசனத்திற்கு வசதியாக, கோவில் நடை திறக்கப்படும் நேரங்களில் மாறுதல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினபூமி

0 comments:

Post a Comment