Thursday, January 9, 2014

‘அண்டமுற நிமிர்ந்தாடும் பெருமானாய்’

காட்சித் தரும் திருவாலங்காடு


திருவாலங்காடு

பஞ்ச சபைகளுள் இரத்தினசபை இத்தலம். இத்திருத்தலம் 'வடாரண்யம் ' எனவும் பெயர் பெற்றது. இறைவன் காளியுடன் நடனமாடிய தலம். தலையால் நடந்து வந்த காரைக்கால் அம்மையாருக்கு நடராஜ பெருமான் காட்சி தந்த தலம். நடராசப்பெருமான் ஊர்த்தவ தாண்டவமாக இரத்தின சபையில் அருள்கிறார். நடராசர் ‘அண்டமுற நிமிர்ந்தாடும் பெருமான்’, 'இரத்ன சபாபதி ' என்று அழைக்கப்படுகிறார்.

‘அண்டமுற நிமிர்ந்தாடும் பெருமானாய்’ காட்சித் தரும் திருவாலங்காடு ஊர்த்துவதாண்டவம்

திருவாலங்காட்டில் அரக்கர்களை அழித்து அவர்களின் குருதியை குடிக்கிறாள் காளி. அதனால் அசுரர்களின் பண்பு பெற்று தவம் செய்து கொண்டிருத்த முனிவர்களைத் துன்புறுத்துகிறாள். முனிவர்கள் ஈசனிடம் முறையிட, ஈசன் அகோர வடிவம் கொண்டு காளிமுன் தோன்றுகிறார். காளி ஈசனை நடனப் போட்டிக்கு அழைக்கிறாள்.
இருவரும் நடனமாடும் போது சிவன் காதில் அணிந்திருந்த குழை கீழே விழ, ஆட்டத்தை நிறுத்தாமல் குழையைக் காலால் எடுத்துக் காலைக் காதுவரை உயர்த்திப் பொருத்துகிறார். காளியால் அதை செய்ய இயலவில்லை.போட்டியில் காளி தோற்கிறாள். காளியின் ஆணவம் அழிகிறது. ஈசனின் இந்த நடனம் ஊர்த்துவதாண்டவம் என்று அழைக்கப்படுகிறது.

இரத்தின சபை

இரத்தின சபையில் பெரிய ஸ்படிக லிங்கமும், சிறிய மரகதலிங்கமும்; திருமுறைபேழையும் உள்ளன.இரத்தின சபையின் விமானம் செப்புத் தகடு வேயப்பட்டு, ஐந்து கலசங்களுடன் விளங்குகிறது.
இத்தலம் தொண்டை மண்டலத்தின் பாடல் பெற்ற 15 தலங்களில் ஒன்று. திருஞானசம்பந்தர் , அப்பர் , சுந்தரர் , அருணகிரி நாதர், கச்சியப்ப சிவாச்சாரியார், இராமலிங்க அடிகள் ஆகியோர்கள் வழிபட்ட திருத்தலம்.

வழிபாடுகள்

நாள்தோறும் நான்கு கால வழிபாடுகள், நடராசருக்கு ஆறு அபிஷேகங்கள் செய்யப்படுகிறது. பங்குனியில் பெருவிழா, ஆடி அமாவாசை கழிந்த செவ்வாய் முதல் அடுத்த செவ்வாய் வரை பத்ரகாளியம்மனுக்கு திருவிழா நடைபெறும். வடாரண்யேஸ்வரரை ஐப்பசி மாதம் பௌர்ணமி நாளில் தரிசனம் செய்தால் எல்ல வகையான இன்பங்களும் கிடைக்கும்.

கோவில் நடை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தொடர்ந்து தரிசனத்திற்காக திறந்திருக்கும்.


கோவில் அமைவிடம்:

சென்னையிலிருந்து திருவள்ளுர் வழியாக அரக்கோணம் செல்லும் பேருந்துப் பாதையில் இத்தலம் உள்ளது.

சென்னையிலிருந்து திருவள்ளூர் அரக்கோணம் வழியாகச் சோளிங்கர் செல்லும் பேருந்தும் இவ்வூர் வழியாகச் செல்கிறது.

காஞ்சியிலிருந்தும், அரக்கோணத்திலிருந்தும், திருவள்ளுரிலிருந்தும் இவ்வூர்க்குப் பேருந்துகள் உள்ளன.
சிதம்பரம்- தரிசிக்க முக்தி தரும் தலம்
திருச்சிற்றம்பலம்
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
சிதம்பரம்- தரிசிக்க முக்தி தரும் தலம்


பஞ்ச சபைகள்:
1) சிதம்பரம் - கனகசபை
2) திருவாலங்காடு - இரத்தினசபை
3) மதுரை - வெள்ளிசபை
4) திருநெல்வேலி - தாமிரசபை
5) திருக்குற்றாலம் - சித்திரசபை.

சிதம்பரம்:

பண்டையகாலத்தில் சிதம்பரத்துக்குப் பெரும்பற்றப்புலியூர் என்று பெயர். புலிக்கால் முனிவராகிய வியாக்கிரபாதர் பூசை பண்ணியதால் அதற்குப் புலியூர் என்றும். கோயிலுக்குச் சிதம்பரம் என்றும் அழைக்கப்பட்டது.(“சித் - ஞானம்”, “அம்பரம் - ஆகாசம்”). தில்லை என்றும் இக்கோவில் அழைக்கப்பட்டு வருகிறது.

சபைகள்:

சிதம்பரம் நடராஜர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களுள் ஒன்று. இந்தக் கோவில் ஆகாயத்தை குறிக்கிறது. இக்கோவிலின் முலவர் நடராஜர். இங்கு மூலவர் சிலை இருக்கும், இடம் கனகசபை என்றும். பொன்னம்பலம் எனவும்அழைக்கப்படுகிறது..

இக்கோவிலில் நடராஜப் பெருமானுக்கு ஐந்து சபைகள் உள்ளன.

அவைகள் சிற்சபை, கனகசபை, ராஜசபை , தேவசபை ,நிருத்தசபை.

சிவனின் வடிவம்: சிவன் மற்ற கோவில்களை போல் லிங்க வடிவில் இல்லாமல் பூதத்தை மிதித்துக்கொண்டு, கையில் தீயுடன், ஒரு கையையும், காலையும் தூக்கி, ஒரு கையில் மத்தளத்தை ஏந்தி காட்சியளிக்கிறார்.

கோவில் கோபுரங்கள்: கோவிலுக்கு செல்ல மொத்தம் ஒன்பது வழிகள் உள்ளன, அவற்றில் நான்கு திசைகளிலும் ஏழு அடுக்குகளுடைய கோபுரம் உள்ளது. மேற்கு மற்றும் கிழக்கு கோபுரங்கள் 160 அடி உயரம் கொண்டவை.

இதில் கிழக்கு கோபுரத்தில் பரதநாட்டியத்தில் குறிப்பிடப்படும் 108 வகையான தோற்றங்களும் செதுக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு கோபுரமும் ஒவ்வொரு மன்னனால் கட்டப்பட்டது. தெற்கு கோபுரம் பாண்டிய மன்னனாலும், மேற்கு கோபுரம் கிருஷ்ணதேவராயராலும், கிழக்கு கோபுரம் பல்லவன் இரண்டாம் கோப்பெருசிங்கனாலும், வடக்கு கோபுரம் முதலாம் சுந்தர பாண்டியனாலும் கட்டப்பட்டாதாகவும் வரலாற்றுச் சின்னங்கள் தெரியப்படுத்துகின்றன.

மேற்குக் கோபுரம் வழியாக திருநாவுக்கரசர், தெற்குக் கோபுரம் வழியாக திருஞானசம்பந்தர், வடக்கு கோபுரம் வழியாக சுந்தரர், கிழக்குக் கோபுரம் வழியாக மாணிக்கவாசகரும் வந்து சிவபெருமானை வழிபட்டுள்ளதாகவும் வரலாறு கூறுகிறது.

சிதம்பர ரகசியம்:

சிற்சபையில் சபாநாயகரின் வலது பக்கத்தில் உள்ள ஒரு சிறு வாயிலில் உள்ள திரை அகற்றப்படும்போது கற்பூர ஆரத்தி காட்டப்பெறும். இதனுள்ளே தங்கத்தாலான வில்வ தள மாலை ஒன்று சுவரில் தொங்கவிடப்பட்டுக் காட்சி அளிக்கும். மூர்த்தி ஏதும் இல்லாமலேயே வில்வதள மாலை தொங்கும். இதன் ரகசியம், இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கின்றார் என்பதை உணர்த்துவதேயாகும்.

சிதம்பரம் நடராஜர் கோயில் இருக்கும் அறிவியல் குறித்த தகவல்கள்:

மனிதரின் உடம்பும் கோயில் என்பதனை விளக்கும் வகையில் சிதம்பரம் நடராசர் கோயில் அமைந்துள்ளது.. மனிதருக்கு இதயம் இடப்புறம் அமைந்திருக்கிறது. அதேபோல அக்கோயிலில் மூலவர் இருக்கும் கருவறை கோயிலின் நடுப்புள்ளியில் இல்லை. இடதுபுறமாகச் சற்று நகர்ந்து இருக்கிறது.

மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.

விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது 

இதயத்தின் துடிப்பே நடராசரின் நடனமாக உருவகிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.


பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன,

 இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது. இது 64 கலைகளை குறிக்கின்றது,

இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள், மனித உடலில் ஓடும் பல ரத்த நாளங்களைக் குறிக்கின்றது.

பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.

அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,

அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.

சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று அழைக்கபடுகின்றது.

சிதம்பரம் நாட்டியாஞ்சலி விழா: நாட்டியக்கலைக்கு முதற்கடவுளாக நடராசர் விளங்குகிறார் 

நடனக்கலைகளின் தந்தையான சிவபெருமானின் நடனமாடும் தோற்றம்   நடராசன் எனவும் அழைக்கப்படுகிறது.

சிவபெருமானில் பலவகையான நடனங்களில் இத்தலத்தில் ஆனந்த தாண்டவம் நிகழ்கின்றது.

சிதம்பரம் கோவிலில், நாட்டியாஞ்சலி என்ற நாட்டிய விழா ஒவ்வொரு வருடமும் நடைபெறுகிறது. 

இங்கு உலகில் பல்வேறு இடங்களில் நாட்டியம் பயிலும் கலைஞர்கள், தங்களுடைய நாட்டியத்தை அர்ப்பணமாக வழங்குகின்றனர். கலைஞர்கள் இங்கு வந்து நாட்டியார்ப்பணம் செய்வதை ஒரு பெருமையாக கருதுகின்றனர்.


கோவில் நடை திறந்திருக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் பகல் 12 மணி மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை.

1)சிதம்பரத்திற்கு கடலூர், சென்னை, மயிலாடுதுறை போன்ற பல இடங்களில் இருந்து பேருந்துகள் உண்டு.

2)சிதம்பரத்தில் ரயில் நிலையமும் உண்டு. சிதம்பரத்திற்கு செல்லும் ரயில்கள் எண்கள்: 6701, 6702, 2794, 6175, 6854, 6853.

3)சிதம்பரத்திற்கு அருகில் உள்ள விமான நிலையம் - திருச்சி (195 கி.மீ)

http://tamizhulagam.com/

0 comments:

Post a Comment