சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்கில் தீட்சிதர்களுக்கு வெற்றி
சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகத்தை, பொது தீட்சிதர்களே நிர்வகிக்கலாம். அந்த கோவிலில், தமிழக அரசு, இந்து சமய அறநிலையத் துறை மூலம் நியமித்த, செயல் அலுவலர் நியமனம் செல்லாது என, சுப்ரீம் கோர்ட் நேற்று, தீர்ப்பளித்துள்ளது.
தமிழகத்தின் மிகத் தொன்மையான கோவிலான, சிதம்பரம் நடராஜர் கோவிலை, இந்து சமய அறநிலையத் துறை தனது கட்டுப்பாட்டின் கீழ் எடுப்பதற்காக, 1987ல் செயல் அலுவலர் ஒருவரை, அந்தக் கோவிலில் நியமித்தது. அதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. நீண்ட காலம் கிடப்பில் கிடந்த அந்த வழக்கு, தி.மு.க., ஆட்சிக் காலத்தில், 2006ல் மீண்டும் தூசி தட்டப்பட்டு, விசாரணை தொடர்ந்தது.
அதிகாரியை நியமித்த அரசு உத்தரவு சுப்ரீம் கோர்ட் ரத்து
கடந்த, 2009ம் ஆண்டு, சென்னை ஐகோர்ட், அந்த வழக்கில் அளித்த தீர்ப்பின்படி, சிதம்பரம் நடராஜர் கோவிலில், அறநிலையத்துறை சார்பில், மீண்டும் செயல் அலுவலர் நியமிக்கப்பட்டார்.அந்த நியமனத்தை எதிர்த்து, பொது தீட்சிதர்கள் மற்றும் பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி சார்பில் தனித் தனி மனுக்கள், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.
விசாரணை:@@அவற்றை, நீதிபதிகள் பி.எஸ். சவுகான் மற்றும் எஸ்.ஏ.பாப்டே அடங்கிய பெஞ்ச் கடந்த ஆண்டு, நவ., 26ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.தமிழக அரசு சார்பில், செயல் அலுவலர் நியமனம் சரியே என, வாதம் செய்யப்பட்டது. விசாரணை, கடந்த ஆண்டு டிச., 5ம் தேதி முடிவடைந்தது. அதையடுத்து, தீர்ப்பை, ஜனவரி மாதத்திற்கு, நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.அதன்படி, நேற்று, அந்த வழக்கில், நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.
தீர்ப்பின் சாராம்சம்:
*கடந்த 1951ம் ஆண்டு, சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்கில், சென்னை ஐகோர்ட் அளித்த தீர்ப்பில் குறிப்பிட்டபடி, பொது தீட்சிதர்கள், மத சீர்மரபினர் (ரிலீஜியஸ் டினாமினேஷன்) என்பது மீண்டும் உறுதி செய்யப்படுகிறது.
*மத சீர்மரபினருக்கு, அரசியல் சாசனப் பிரிவு, 26ன் கீழ் வழங்கப்படும் பாதுகாப்பு, பொது தீட்சிதர்களுக்கும் பொருந்தும். அதனால், அவர்களே, சிதம்பரம் நடராஜர் கோவிலை நிர்வகிக்கலாம்.
*நடராஜர் கோவில் நிர்வாகம் என்பது, பல நூற்றாண்டுகளாக, அவர்கள் அனுபவித்து வரும் சிறப்பு உரிமை. அது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
*தமிழக அரசின், செயல் அலுவலர் நியமனம் ரத்து செய்யப்படுகிறது. அறநிலையத் துறை சட்டத்தின் கீழ், நடராஜர் கோவில் வராது.
*ஒரு கோவில் அல்லது அறக்கட்டளையில் ஏற்படும் சிறிய அல்லது மிகச் சிறிய நிர்வாகத் தவறுகளை, அரசு, சீர் செய்ய வேண்டுமே தவிர, அவற்றை தனது நிர்வாகத்தின் கீழ் எடுத்துக் கொள்ள முடியாது.
*அதேநேரம் சீர் செய்தல் என்ற பெயரில், அடிப்படை உரிமைகளை அரசு பறித்து விட முடியாது.
இவ்வாறு அந்த தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அந்த தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், 1951ல் சென்னை ஐகோர்ட் அளித்த தீர்ப்பை, மீண்டும் மறு விசாரணை செய்வதற்கு, சென்னை ஐகோர்ட்டிற்கு அதிகாரம் இல்லை என்றும், அவர்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
பக்தர்கள் விருப்பம் நிறைவேறியது:
தீர்ப்பு வெளியான தகவல் அறிந்ததும், சிதம்பரத்தில், தீட்சிதர்கள், வெடி வெடித்து கொண்டாடினர். பொது தீட்சிதர்கள் அமைப்பின் செயலர் காசிராஜ தீட்சிதர் கூறுகையில், நாங்கள் நடராஜருக்கு செய்த உண்மையான பூஜைக்கு, அவர் எங்களுக்கு கொடுத்த பரிசு, இந்த தீர்ப்பு, என்றார்.
பொது தீட்சிதர்கள் அமைப்பைச் சேர்ந்த வெங்கடேச தீட்சிதர் கூறுகையில், தமிழகத்தின் கோடிக்கணக்கான பக்தர்களின் விருப்பத்தை தான் சுப்ரீம் கோர்ட் நிறைவேற்றியுள்ளது. தீர்ப்பு வெளியானது குறித்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம், என்றார்.
இதுகுறித்து, அறநிலையத் துறை உயரதிகாரிகளிடம் கேட்டபோது, பதிலளிக்க மறுத்து விட் டனர்.
தீட்சிதர்கள் கொண்டாட்டம்:
சிதம்பரம் நடராஜர் கோவிலை, நிர்வகிக்க செயல் அலுவலர் நியமித்தது சரி என, 2009ல், சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது. அதையடுத்து, கோவிலில், ஒன்பது இடங்களில் உண்டியல் வைக்கப்பட்டது. தீட்சிதர்கள், சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்தனர்.இவ் வழக்கில், நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்பில், சென்னை ஐகோர்ட் உத்தரவை ரத்து செய்தும், செயல் அதிகாரி செயல்படவும் நிரந்தர தடை விதிக்கப்பட்டது.தீர்ப்பு வெளியானதையடுத்து, தீட்சிதர்கள் கோவில் உள்ளே, பட்டாசு வெடித்து கொண்டாடினர். இந்து ஆலய பாதுகாப்புக் குழுவினர், கீழ வீதியில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கினர்.
தீர்ப்புக்கு எதிர்ப்பு
மனித உரிமைகள் பாதுகாப்பு மையம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி உள்ளிட்டோர், தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 60 பேரை, போலீசார் கைது செய்துள்ளனர்.
நன்றி : tamilspeak.com
0 comments:
Post a Comment