Friday, February 28, 2014

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் வட்டத்தில் தென்பெண்ணை ஆற்றங்கரையின் தெற்கு திசையில் உள்ளது மாரங்கியூர் கிராமம். இங்கே கோயில்கொண்டு அருள்புரிகிறார் ஸ்ரீபர்வதவர்தனி சமேத ஸ்ரீராமலிங்கேஸ்வரர். பத்தாம் நூற்றாண்டில் கிளியூரை ஆட்சி புரிந்த மலையமான் வம்சத்தினரால் கட்டப்பட்டது இந்த ஆலயம்.

இவ்வாலயத்தின் புராண வரலாறு சுவாரஸ்யமானது. ராவணனிடமிருந்து சீதையை மீட்பதற்கு முன்பு... ராமேஸ்வரம் சென்று ஈஸ்வரனை வழிபட பலநாட்களாகும் என்று எண்ணினார் ராமபிரான். எனவே தனது மனதிலேயே ராமலிங்கனை உருகப்படுத்தி, மாரங்கியூர் பெண்ணை ஆற்றங்கரையில் லிங்கம் ஒன்றினை பிரதிஷ்டை செய்தார். தினமும் வழிபட்டார். அவரே ஸ்ரீராமலிங்கேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

மேலும் அமாவாசை தினங்களில் தனது தந்தைக்கு ஆற்ற வேண்டிய பித்ரு கடன்களையும் ஆற்றிவந்தார் ஸ்ரீராமர். எனவே அமாவாசை அன்று இவ்வாலயத்தில் ராமலிங்கேஸ்வரரை வழிபட்டால் இறந்த முன்னோர்களின் நல்லாசி கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. மேலும் இங்கு வீற்றிருக்கும் ஸ்ரீபர்வதவர்தனி அம்மனை வழிபட்டால் காஞ்சி காமாட்சியை தரிசித்த பலனை அடையலாம் என்பது வரலாறு.

இவ்வாலயம் கல்வெட்டுகள் நிறைந்ததாகக் காணப்படுகிறது. அவற்றில் நிலதானம், பசு தானம், விளக்கு தானம் போன்றவை அளிக்கப்பட்ட செய்திகளும், இந்த தானங்களை வழங்கியவர்களின் பெயர்களும், இறைச்சிற்பங்களையும், மண்டபங்களையும் எழுப்பிய விவரமும், ஊர்களின் பெயர்களும் உள்ளன. நாள், கோள்களின் பெயர்களும் காணப்படுகின்றன. மேலும் இவ்வாலயம் சங்க காலத்திலேயே சிறப்புற்றிருந்ததற்கான சான்றுகளும் உள்ளன. முதலாம் இராஜராஜ சோழன் ஸ்ரீராமலிங்கேஸ்வரரை வழிபட்டதோடு அழகிய கற்றளியையும் எழுப்பியுள்ளார்.

இவ்வாலயத்தில் காணப்படும் பல்லவர்கால மூத்ததேவி(ஜேயேஷ்டா தேவி) சிற்பம் சிறப்பான வழிபாட்டிற்கு உரியது. மூத்த மகனோ மூத்த மகளோ இந்த தேவியை வியாழன் அன்று வணங்கினால் அவர்களின் குடும்பத்தில் அநேக நன்மைகளும் உண்டாகும். ஏனெனில் தாமரை மலர் மீதமர்ந்து காட்சியளிக்கும் மூத்த தேவி சிற்பம் இவ்வாலயத்தைப் போன்று சில ஆலயங்களிலேயே காணப்படுகிறது.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த இவ்வாலயம் காலப்போக்கில் சிதிலமடைந்தது. தற்போது இவ்வாலத்திற்கான திருப்பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன.

தகவலுக்கு: 97519 66768

வெள்ளிமணி , தினமணி

0 comments:

Post a Comment