தல வரலாறு: பார்வதிதேவி சிவனிடம், சிவாயநம என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தின் பொருளை உபதேசிக்கும்படி வேண்டினாள். சிவனும் உபதேசித்தார். அவ்வேளையில் மயில் ஒன்று நடன மாடவே, அதன் அழகில் மயங்கிய அம்பிகை உபதேசத்தை கவனிக்காமல் வேடிக்கை பார்த்தாள். பாடத்தைக் கவனிக்காத மாணவர்களுக்கு குரு தண்டனை கொடுப்பார். இப்போது குருவான சிவன், மாணவியான அம்பிகையை, எதன் அழகில் மயங்கினாயோ அதுவாகவே பிற என்று மயிலாக மாறும்படி செய்து விட்டார். அம்பிகை தன் குற்றத்திற்கு விமோசனம் கேட்டாள். பூலோகத்தில் தன்னை மயில் வடிவில் வழிபட்டுவர விமோசனம் கிடைக்கும் என்றார் சிவன். அதன்படி அம்பிகை மயில் வடிவில் இத்தலம் வந்தாள். சிவனை வணங்கி விமோசனம் பெற்றாள். இருவரும் இங்கேயே கோயில் கொண்டனர். பார்வதி மயில் உருவில் இத்தலத்தில் இறைவனை பூஜை செய்ததால் இத்தலம் இத்தலம் திருமயிலாப்பூர் என்றும், திருமயிலை என்றும் வழங்கப்படுகிறது.
மயிலார்ப்பு என்பதற்கு பொருள் ‘மயிலாதல்’- உமை மயிலாலாக ஆகியதால் மயிலார்ப்பு-ஊர் என்பது மயிலாப்பூர் ஆனது என்பர்.
5ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமழிசை ஆழ்வாரின் நான்முகம் திருவந்தாதியில்
……………………………………. நீளோ தம்
வந்தலைக்கும் மாமயிலை மாவல்லிக்கேணியான்
6ம் ஊற்றாண்டில் வாழ்ந்த ஐயட்ட்கள் காடவர் கோன் என்னும் பல்லவ அரசர் பாடிய சிவத்தளி வெண்பாவில்
மயிலைத்
திருப்புன்னை யங்கானல் சிந்தியா யாகில்
இருப்பின்னை யன்காந் திளைத்து என இக்கோயிலைப் பாடியுள்ளார். இவரே மூன்றாம் சிம்மவர்மன் என்பர் ஆய்வாளர்.
புன்னைவனம், வேதநகர், சுக்கிரபுரி, பிரம்புரம், சுந்தரபுரி, கபாலீச்சரம், கபாலி மாநகர் போன்ற வேறு பெயர்களால் பாடப்பட்டுள்ளது. பிரம்மதேவன் சிவபெருமானைப் போல தனக்கும் 5 தலைகள் உண்டு என்று செருக்கடைந்த போது அவனுடைய நடு தலையை கிள்ளி கபாலத்தை ஏந்திய காரணத்தால் ஈசுவரன், கபாலீசுவரன் என அழைக்கப்பட்டதாகவும் வரலாறு தெரிவிக்கிறது.
1. இது, வாயிலார் நாயனார் அவதாரஞ்செய்தத் திருப்பதி;
“துறைக்கொண்ட செம்பவள இருளகற்றுஞ் சோதித்
தொன்மயிலை வாயிலா னடியார்க்கு மடியேன்” என்று பணிவார் சுந்தரமூர்த்தி நாயனார்.
வாயிலார் சந்நிதி கற்பகம்பாள் சந்நிதிக்கு எதிரில் வடக்குப் பார்த்த தனி ஆலயமாக உள்ளது.
2. வைஷ்ணவ ச்ரி கருட புராணத்தில், பிருந்தாரண்ய க்ஷேத்திர மகாத்மியத்தில் மயுரபுரி மகாத்மியம் விளக்கப்படுகின்றது
3. இத்தலத்தின் புராணம் வடமொழியில் சைவ மகாபுராணத்து, கோடி ருத்ர ஸம்ஹிதையில், உத்க்ருஷ்ட ச்வக்ஷேத ப்ரகரணத்தில் 11 அத்யாயம் கொண்ட கபாலீச ஸ்தல மாஹாத்ம்யம் கலி 5023-ல் அச்சிடப்பட்டுள்ளது. குன்றக்குடி ஆதீனத்தின் மயிலைக் கிளை மடத்தின் ஸ்ரீமத் அமிர்தலிங்கத் தம்பிரான் சுவாமிகள் இயற்றிய தலபுராணம் கலி 4995-ல் வெளிடப்பட்டது. சமீப காலத்தில் “திருமயிலைத் தலபுராணம்” என்ற பெயரால் மயிலை நாதமுனி முதலியாரால் எழுதப்பட்டுள்ளது
பூம்பாவை திருஞானசம்பந்தர் உயிர்ப்பித்த கோயில்
திருமயிலை தலத்தில் சிவநேசர் எனபவர் வாழ்ந்து வந்தார். சிவபெருமான் மீது அளவு கடந்த பக்தியுடைய அவருக்கு பூம்பாவை என்ற ஒரு மகள் இருந்தாள். திருஞானசம்பந்தரைப் பற்றியும் அவரின் சைவ சமய தொண்டைப் பற்றியும் கேள்விப்பட்ட சிவநேசர் தன் மகள் பூம்பாவையை சம்பந்தருக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற உறுதியுடன் இருந்தார். அவ்வாறு இருக்கையில் ஒரு சமயம் பூம்பாவை தோட்டத்தில் தன் தோழிகளுடன் மலர் பறித்துக் கொண்டு இருந்த போது பாம்பு தீண்டி இறந்து விடுகிறாள். மகள் இறந்து விட்ட போதிலும் அவள் சம்பந்தருக்கு உரியவள் என்ற எண்ணம் சிவநேசருக்கு வர மகளின் அஸ்தி மற்றும் எலும்புகளை ஒரு குடத்திலிட்டு கன்னி மாடத்தில் பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்தார்.
திருவொற்றியூர் வந்த சம்பந்தரைச் சந்தித்த சிவநேசர் அவரை வலம் வந்து தொழுதார். கன்னி மாடத்தில் வைத்திருந்த குடத்தைக் கொண்டு வந்து சம்பந்தர் முன் வைத்து பூம்பாவை பற்றிய விபரங்களைச் சொல்லி அழுதார்.
சம்பந்தர் திருமயிலை கபாலீஸ்வரரை தியானித்து “மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலை” என்று தொடங்கும் பதிகம் பாடினார். பதிகம் பாடி முடித்ததும் குடத்தை உடைத்துக் கொண்டு வெளியே வந்த பூம்பாவை சம்பந்தரை வணங்கினாள். சிவநேசர் சம்பந்தரை வணங்கி பூம்பாவையை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினார். விஷம் தீண்டி இறந்த பூம்பாவைக்கு உயிர் கொடுத்ததின் மூலம் அவள் எனக்கு மகள் ஆகின்றாள் என்று கூறிய சம்பந்தர் சிவநேசரின் கோரிக்கையை நிராகரித்து விடுகிறார். பூம்பாவை தன் வாழ்நாள் முழுவதும் கன்னியாகவே இருந்து இறைவன் தொண்டு செய்து வந்தாள். இக்கோயில் மேற்கு கோபுரம் அருகில் பூம்பாவைக்கு சந்நிதி இருக்கிறது.
திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் இரண்டாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. மூவரால் பாடப்பட்ட தேவாரப் பாடல்களில், சுவாமி மற்றும் தலத்தின் பெருமைகளை குறிப்பிட்டுத்தான் பெரும்பாலும் பதிகம் பாடப்பட்டுள்ளது. ஆனால், இத்தலம் வந்த சம்பந்தர், பூம்பாவையை உயிர்ப்பிக்க இக்கோயிலில் நடக்கும் திருவிழாக்களின் சிறப்புக்களை குறிப்பிட்டு 11 பதிகங்கள் பாடினார். சம்பந்தர் பாடிய பதிகத்தில் திருமயிலை கோவிலைப் பற்றியும், இங்கு சிறப்பாக நடக்கும் விழாக்களைப் பற்றியும் குறிப்பிட்டு இவைகளை எல்லாம் பார்த்து அனுபவிக்காமல் நீ இறந்து போகலாமா பூம்பாவை என்று தன் பதிகத்தில் பாடுகிறார். இவ்வாறு திருவிழா குறித்து பதிகம் பெற்ற பெருமையுடைய தலம் இது.
சம்பந்தர் தனது பதிகத்தில் 6-வது பாடலில் கடலாட்டு விழாவைப் பற்றியும், பக்தர்கள் கடலாடுவதை இறைவன் பார்த்தபடி இருப்பதையும் குறிப்பிடுவதால் தேவார காலத்தில் இத்தலம் கடலருகே இருந்தது என்பது தெரிய வருகிறது. திருஞானசம்பந்தர் என்பைப் பெண்ணாக்கிய இடமும் கடற்கரை சாந்தோமிலிருந்த கோயில் என்பது அவர் அங்கம் பூம்பாவைப் பாடலிருந்து தெரிகிறது. சாதாரணமாக குளமும் ஸ்வாமி சன்னதியும் கிழக்கு நோக்கியே இருக்கும். ஆனால், கபாலீஸ்வரர் மேற்கு நோக்கி இருக்கிறார். குளமும் மேற்கே தான்.
ஊர்திரை வேலை உலாவும் உயர் மயிலைக்
கூர்தரு வேல் வல்லார் கொற்றங் கொள் சேரிதனில்
கார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஆர்திரை நாள் காணாதே போதியோ பூம்பாவாய்.
கடலின் அலைகளானது ஊரில் உலாவரும் உயர்ந்த மயிலையில், கூரிய வேல்வல்லவர்களால் காவல் காக்கப்பட்ட பகுதியில், கரிய சோலைகள் சூழ்ந்த திருக்கபாலீச்சரத்து அமர்ந்த பிரானின் ஆதிரைத் திருநாள் காணாது, பூம்பாவையே, போவாயோ!
1. திருவாதிரைத் திருநாளும் புராணங்களிலும் சங்க இலக்கியங்களிலும் போற்றப்படும் விரதமாகும். இறைவன் ஆடல் வல்லானாகக் காட்சி அளித்த கருணை கருதி ஆதிரையன் எனத் திருமுறைகள் பலவிடத்தும் விளிக்கும்.அட்ட மாவிரதங்களில் ஒன்றான திருவாதிரைச் சிறப்பு
2. ஊர் திரை வேலை உலாவும் உயர் மயிலை -திருமயிலாப்பூர்க் கபாலீச்சரம், திருஞானசம்பந்தப் பெருமான் காலத்தில் கடற்கரையிலேயே இருந்தது. (மாசிக் கடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான் – சம்பந்தர்)
3. திரை – அலை; வேலை – கடல்; கொற்றம் – காவல்;சேரி – இருப்பிடம்; கார் – கருமை.
மயிலாப்பூர் (பழமையான) கபாலீச்சுவரர் கோயில் பற்றிய குறிப்பு :
- பழைய கோயில் இப்போது உள்ள Santhome Catherdral Church உள்ள இடத்திலுருந்தது. அருணகிரிநாதர் காலம் வரையில் (கி.பி.1450) கடற்கரையிலுருந்தது. “கடலக் கரைதிரை யருகேசூழ் மயிலைப் பதிதனில் உறைவோனே” என்ற திருப்புகழ்ப் பகுதியால் துலங்கும்.
- கி.பி.1516-ல் மயிலாப்பூர் போர்த்துகீசியர் கையில் சிக்கியது. சில ஆண்டுகளுக்குள் ஆவர்கள் ஆலயத்தைத் தகர்த்துக், கோட்டையும், தங்கள் தொழுகைக்கு இடமும் கட்டிக்கொண்டார்கள். கி.பி.1672-க்கு முன்பு இப்போதுள்ள இடத்தில் இப்போதுள்ள ஆலயம் கட்டப்பட்டிருக்கிறது. இவ்வாண்டில் பிரெஞ்சுக்காரருக்கும் மூர் துருக்கருக்கும் நடந்த போரில் பிரெஞ்சு சேனையின் ஒரு பகுதி இப்போதுள்ள ஆலயத்தில் பதுங்கியிருந்த செய்தி, Vestiges of Old Madras என்ற நூலில் Vol.-I, Chap.24, பக்கம் 321, 322-ல் காணப்படுகிறது.
- Santhome Cathedral பழுது பார்க்க நிலத்தை அகழ்ந்தபோது பழைய சிவாலயத்தின் கற்களும் கல்வெட்டுக்களும் கிடைத்துள்ளன. அவை அரசாங்கத்தினரால் 215 – 223/1923 என்று குறிக்கப்பட்டுள்ளன. இவற்றுள், “Found on stone excavated below the Cathedral at Santhome” என்பன போன்ற குறிப்புக்கள் காணப்படுகின்றன.
அவைகளில் தமிழ் கல்வெட்டுக்களில் ஒன்றில் கூத்தாடு தேவர் (நடராஜர்) சன்னிதியில் தீபம் வைப்பதற்குச் செய்த தானமும், 2.மற்றொன்றில் முதல் இராஜராஜன் மெய்க்கீர்த்தியாகிய “திருமகள்போல” என்ற தொடக்கமும், மூன்றாவதில் பூம்பாவை என்ற திருப்பெயரும் குறிக்கப்பட்டுள்ளன.
- இக்கல்வெட்டுக்கள் ஒன்பது நூற்றாண்டுகளுக்கு முந்தியவை என அறியலாம்.
- ஈழ நாட்டுத் திருக்கோணமலை, துளுவ நாட்டுக் கோவை (Gova) முதலிய இடங்களில் பரங்கியர்கள் 400 ஆண்டுகளுக்கு முன் செய்த வண்ணமே இம்மயிலையிலும் பரங்கியர்கள் கோயிலையும், மனைகளையும் இடித்துப் பள்ளியும் கோட்டையும் கட்டியிருக்கக் கூடும் என்பது திண்ணம்.
- H.D. Love என்பவர் எழுதிய சென்னைச் சரித்திரத்தில் 1516 முதல் போர்த்துக்கீசியர், துருக்க மூர்கள் பிரெஞ்சுக்காரர், டச்சுக்காரர் முதலியவர்கள் அடிக்கடி மாறிமாறி இவ்வூரைப் பிடித்துத் தம் வசப்படுத்திக் கொண்டு இருந்தார்கள் என அறியலாம். அந்நூலின்படி (Volume – I பக்கம் 321 – 322) பிரெஞ்சுக்காரருக்கும் துருக்கருக்கும் 1672-ல் ஒரு போர் நடந்தது. அப்போது பிரெஞ்சு சேனையின் ஒரு பகுதி கபாலீஸுவரர் சன்னிதியில் ஒளிந்து கொண்டதாம். ஆகவே, தற்கால கபாலீசுவரம் 1672லேயே இருந்தது எனலாம்.
- “துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித் தொல்மயிலை….” என்று ஆரூரர் திருவாய் மலர்வதுபோல், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் டாலமி (Ptolemy) என்ற கிரேக்க ஆசிரியர் இயற்றிய பூகோள நூலில் Malliarpha எனப்படுவதே மயிலாப்பூர் என்று Vestiges of Old Madras Vol. – I chapter 23-ல் ஆசிரியர் H.D. Love கூறுகிறார். இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்
- 11-வது நூற்றாண்டின் கல்வெட்டு ஒன்றில் (256 / 1912) மயிலார்ப்பில் பல நானாதேசிகள் கூடிச் சில தீர்மானங்கள் செய்தனர் என்று காணப்படுகிறது.
- துறைமுகப் பட்டினமாகிய ஒரு வியாபாரத் தலத்தில்தான், பல தேசத்து மக்கள் கூடுவர். எனவே, டாலமி காலம் முதல் கல்வெட்டுக் காலம் வரையில் மயிலாப்பூர் ஒரு துறைமுகமாக இருந்திருக்கிறது. போர்த்துக்கீசியர் காலத்திலும் இத்துறைமுகம் சிறந்து விளங்கியுள்ளது. இத்துறைமுகத்திற்கும், ஆங்கிலேயர் துறைமுகமாகிய சென்னையின் வடபாதிக்கும் ஓயாமல் வியாபாரப் போட்டியும், கடும்போரும் இருந்து வந்த செய்தி Vestiges of Old Madras Vol. – I என்ற நூலில் நன்கு விளங்கும்.
- சங்க பல்லவன் கம்பவர்மன் காலத்திய கல்வெட்டொன்று (189/1912) மயிலாப்பூரில் அரச குடும்பத்தினர் வசித்ததைக் குறிக்கின்றது.
- மயிலை வாசிகளாயிருந்த பல வியாபாரிகள் வேறு பல தலங்களைத் தரிசித்தபோது சந்தி விளக்கு, நந்தா விளக்குகட்குத் தானம் செய்த வரலாறுகள், பல கல்வெட்டுக்களால் அறியப்படுவதிலிருந்து, அவர்கள் சென்ற இடங்களிலெல்லம் தானம் செய்யக்கூடிய செல்வமும், புண்ணியமும் பெற்றிருந்தனர் என்பது புலனாகும்.
- திருநாவுக்கரசர் தேவாரத்தில் மூன்றிடங்களில் மயிலாப்பு கூறப்பெறுகின்றது. திருவொற்றியூர் திருத்தாண்டகத்து ஆறாவது திருப்பாடலில் “வடிவுடைய மங்கையும் தாமும் எல்லாம் வருவாரை எதிர்கண்டோம் மயில்லப் புள்ளே” என்ற தொடர் சுவாமிகள் மயிலையிலிருந்தே ஒற்றியூர் சென்றார் என்று சேக்கிழார் கூறுவதற்கு அகச்சான்றாகின்றது. “மங்குன் மதி மாடவீதி மயிலாப்பிலுள்ளார்” (6-2-1) என்று அப்பர் பெருமான் மயிலையின் மாடவீதி அழகைப் புகழ்ந்துப்பாடுகிறார். “மயிலாப்பில்மன்னினார் மன்னி ஏத்தும்” (6-7-12) என்ற இடத்தில் மயிலையைக் காப்புத் தலங்களுள் வைத்துப் பாடுகிறார். மேற்சொன்ன மூன்றிடங்களிலும் அப்பர் பெருமான் மயில்லாப்பூரை மயிலாப்பு என்றே கூறுகிறார். சில கல்வெட்டுக்களிலும் (261/1910, 189/1912) மயிலாப்பில் என்றே காணப்படுகிறது. வேறு சில கல்வெட்டுக்களில்மயிலார்ப்பில் என்று “ரகர” ஒற்றுடன் காணப்படுகிறது(256/1912). டாலமியும் மல்லிஆர்பா என்பதில் “ரகர” ஒற்றுடன் கூறுகிறார்.
மயிலாப்பூர் பற்றிய சரித்திரக் குறிப்புகள் :
- 1798-ல் எழுதப்பட்ட சென்னை நகரப் (Map of Chennai) படத்தில் மயிலைத் திருக்குளம் காட்டப்பட்டிருக்கிறது.
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சாந்தோமில் கண்டெடுத்த புதைபொருள்களிலிருந்து பழைய கோயில் சாந்தோம் கடற்கரை என எண்ண வேண்டியிருக்கிறது. பழைய கபாலிசுவரர் கோயிலலின் இடிபாடுகள் இப்போதுள்ள கோயிலுக்குச் சிறிது தொலைவில் கிழக்கு திசையில் சாந்தோம் கடற்கரையருகே கண்டு எடுக்கப்பட்டதேஇதற்குக் காரணமாகும்.
1923இல் தொல்பொருள் ஆய்வுத் துறையினர் சாந்தோம் கதிட்ரலில் நிகழ்த்திய அகழ்வாராய்ச்சிகளால் கல்வெட்டுகளும், தூண்களும், சிலைகளும் கண்டெடுக்கப்பட்டன. கல்வெட்டுகள் சிவன் கோயிலைக் குறிக்கின்றன. கற்றூண்களிலும் கல்வெட்டுகள் காணப்பெறுகின்றன.
மயிலோடு கூடிய முருகர் சிலையும் கண்டெடுக்கப்பட்டது.
1921இல் மறைத்திரு ஹோஸ்டன், சாந்தோம் கதிட்ரலில் கண்டெடுத்த வடமொழிக் கல்வெட்டு “கருவறை உட்பட எல்லாக் கட்டிடங்களும் மயிலாப்பூரிலுள்ள புகழ்பெற்ற சிவனுக்கும் பார்வதிக்கும் உரியவையாகும்” என்று குறிப்பிடுபகிறது.
மற்றொரு தானக் கல்வெட்டில், “திருமயிலாப்பில் பூம்பாவை” என்று குறிப்பிடுப்படுவதாலும், பழைய கபாலிசுவரர் கோயில் கடற்கரையருகே இருந்திருக்க வேண்டும் .
இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்புத்துறை வெளியிட்டசென்னை மாநிலக் கோயில்கள் (Temples of Madas State) என்னும் நூலில் காணப்படும் கருத்துக்கள் :-“கி.பி. 16ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சாந்தோம் கடற்கரையிலிருந்த கோயில் போர்த்துக்கீசியர்களால் அழிக்கப் பட்டிருக்க வேண்டும் என்று கூறுகிறது. இந்நூல் கூறும் புதிய செய்தி,இப்போதுள்ள கபாலிசுவரர் கோயிலும் குளமும் முந்நூறு ஆண்டுகளுக்கு முன், மயிலை நாட்டு முத்தையப்ப முதலியாராலும் அவருடைய வாரிசுகளிலாலும் கட்டப்பட்டது என்பதேயாகும்.” Census of India-1961; Temples of Madras State, 1 Chingleput District and Madras City, P.204
போர்த்துக்கீசியர்கள் இந்துக் கோயில்களை அழித்த செய்தியைக் கேள்விப்பட்டு இராமராயர் கி.பி. 1558இல், சாந்தோம் மீது படை எடுத்துப் போர்த்துக்கீசியரைப் பணிய வைத்துப் பின்னர்ப் பழுதுபட்ட கோயில்களைப் பழுதுபார்க்க ஆணையில்ட்ட செய்தியாலும் பழைய கபாலிசுவரர் கோயில் போர்த்துக்கீசியர்களால் . S.Kalyanasundaram- A Short History of Mylapore page-8) அழிக்கப் பட்டது
பழைய கபாலிசுவரர் கோயில், கடற்கரையருகே இருந்ததென்பதையும், கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் போர்த்துக்கீசியரால் அழிக்கப் பட்டதென்பதையும், கி.பி. பதினாறாம் நுற்றாண்டில் இப்போதுள்ள இடத்தில் புதிய கோயில், மயிலை நாட்டு நயினியப்ப முத்தையப்ப முதலியார் மகன் முதலியாரால் கட்டப் பெற்றது.
போர்ச்சுகீசியர் கிறிஸ்துவ புராண நாயகன் இயேசுவின் சீடர்களில் ஒருவர் எனப்படும் தாமஸ் என்பவர் இந்தியா வந்த்தாகவும் கல்லறை இது என கதை கட்டி முன் கபாலிஸ்வரர் கோயில் இருந்த இடத்தில் சாந்தோம் சர்ச் எனக் கட்டியுள்ளது. பழைய கபாலிசுவரர் கோயில், சாந்தோம் கடற்கரையருகே இருந்தது.
உதவியவை- http://www.shaivam.org
திருமயிலைத் திருத்தலம்- இலக்கிய, வரலாற்றுப் பார்வை, பேராசிரியர்.Dr.சு.ராஜசேகரன்.,1989,
http://ankaraikrishnan.wordpress.com/
0 comments:
Post a Comment