Wednesday, October 1, 2014




திருமூலரில் தொடங்கி கோரக்கர் வரை தமிழகத்தில் பல மகிமைகளைப் புரிந்த சித்தர்களைப் பதினெண் சித்தர்கள் என்று அழைப்பார்கள். அந்த பதினெட்டுச் சித்தர்களில் ஒருவர் பாம்பாட்டிச் சித்தர். கோவை மருதமலை முருகன் கோவிலில் பாம்பாட்டிச் சித்தரின் மகிமைகள் இன்றளவும் போற்றப்படுகின்றன.

சிறு வயதிலேயே பாம்பைப் பிடிப்பதும், அதன் விஷத்தைச் சேமித்து விற்பனை செய்வதையும் தொழிலாகக் கொண்டவர். இதனாலேயே பாம்பாட்டி என்று அழைக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள். விஷத்தை முறிக்கும் மூலிகை வைத்தியராகவும் இருந்தவர். இவர் தமிழகத்தில் ஏறி இறங்காத மலைப் பகுதிகளே இல்லை.

ஒருமுறை மருதமலைப் பகுதியில் நாகரத்தினம் கக்கும் பாம்பைப் பிடிக்கச் சென்றபோது சட்டை முனிச் சித்தரின் அருள் கிடைத்ததாகக் கூறுகிறார்கள். ‘உனக்குள்ளேயே நவரத்தின பாம்பை வைத்துக்கொண்டு வெளியே ஏன் தேடுகிறாய். உனக்குள் இருக்கும் குண்டலினி என்ற பாம்பைத் தேடு’ என்று கூறிவிட்டு அவர் மறைந்துவிட்டாராம்.

இதன் பிறகு கடவுளை அடைய யோகம் செய்துவர பாம்பாட்டிச் சித்தருக்கு குண்டலினி சக்தி கிடைத்ததாகக் கூறுகிறார்கள். இதன் பிறகு அவர் பல சித்துக்களைச் செய்து மக்களின் நோய்களையும், அவர்களின் பிரச்சினைகளையும் தீர்த்ததாகவும் நம்பப்படுகிறது.

யோக நெறியில் சமாதி நிலை அடைந்த பாம்பாட்டிச் சித்தர், சமாதியிலிருந்து மீண்டும் எழுந்து, கூடு விட்டுக் கூடுபாயும் வித்தையில் கைதேர்ந்தவராக இருந்தார் என்று இவரது மகிமைகளை அறிந்தவர்கள் கூறுகிறார்கள். இறந்து கிடந்த பாம்பை உயிர் பெற்று எழச்செய்து ஆடவைத்துக் காட்டியதால் இவருக்குப் பாம்பாட்டிச் சித்தர் என்ற பெயர் ஏற்பட்டதாக இவரது பெயருக்கு இன்னொரு காரணமும் கூறப்படுகிறது.

மருதமலையில் பாம்பாட்டிச் சித்தரை வழிபடும் பக்தர்களுக்கு விஷத்தினால் வரக்கூடிய தோஷங்கள் நிவர்த்தியடைவதுடன், தோல் நோய்களும் சரியாகும் என்பது மக்களின் நம்பிக்கை. இவர் ஞானப் பாடல்களையும் எழுதியிருக்கிறார். சித்தா ரூடம் என்ற விஷ வைத்திய நூல்களையும் எழுதினார்.

பாம்பாட்டிச் சித்தர் மருதமலையில் இன்றும் சக்தி வடிவாகவும், பக்தர்களை ஈர்க்கும் சக்தியாகவும் விளங்கி வருகிறார்.

0 comments:

Post a Comment