சங்கீதா ஈஸ்வரன்
சங்கீத கலாநிதி டாக்டர் எஸ். ராமநாதன் அவர்களின் நினைவைப் போற்றும் நிகழ்ச்சி சமீபத்தில் நாரத கான சபாவின் சிற்றரங்கில் நடந்தது. இதையொட்டி வித்தியாசமான ஒரு நடன நிகழ்ச்சி நடந்தது. பொதுவாக பக்தியும் சிருங்காரமும் மட்டுமே நாட்டிய நிகழ்ச்சிகளுக்கான கருவாக இருக்கும். அன்று நடந்த நிகழ்ச்சியில் சித்தர்களின் சில பாடல்களுக்கு எளிய விளக்கத்துடன் பரதநாட்டியம் ஆடினார் சங்கீதா ஈஸ்வரன்
சித்தர்களைப் பற்றிய அரிய பல தகவல்களை தன்னுடைய சிற்றுரையில் மிக நேர்த்தியாகக் கூறினார் பேராசிரியர் ரகுராமன். “இறையை வெளியில் தேடாமல் தங்களின் உள்ளே தேடியவர்கள் தான் சித்தர்கள். இதற்குப் பெயரே அகத்தியம். உலகைப் போற்றியவர்கள் சித்தர்கள். தொடக்கத்தில் பதினென் சித்தர்கள் என்பது வழக்கத்தில் இருந்தாலும், பின்னாளில் 72 என்று அறியப்பட்டார்கள்” என்றார்.
`உப்பிட்ட பாண்டம் உடைந்து கருக்கொள்ளும் முன்னே அப்பிட்ட வேணியனுக்கு ஆட்படுவது எக்காலம்…’ என்னும் பத்திரகிரியாரின் பாடல். உலக வாழ்வு நிலையற்றது. பிறந்தவர் இறப்பார் என்பது உறுதி. இந்த நிலையாமை தத்துவத்தை, தன்னுடைய நடனத்தின் வழியாக அரங்கத்தில் அமர்ந்திருப்பவர் களுக்கு கடத்தியது நடனத்தின் உணர்ச்சிமிகு காட்சிகள்.
`ஒரு மடமாதும் ஒருவனும் ஆகி’ என்னும் பட்டினத்தார் பாடலை விளக்க, மேடையில் ஒரு மனிதனின் வாழ்க்கைச் சக்கரமே நம் கண்முன் ஓடியதுபோல் இருந்தது. பிறவி எங்கு தொடங்குகிறது? ஆண், பெண் சேர்க்கையில் கருவாய், உருவாய் புலனோடு கூடிய குழந்தையாய், பிள்ளையாய், வாலிப பருவத்தினனாய் வளர்ந்து வாழ்ந்து வயோதிகம் அடைந்து, உற்ற உறவும் கட்டிய மனைவியும் பெற்ற பிள்ளைகளும் தவிக்க மரணம் அடைந்து இறுதியில் விறகினைக் கொண்டு உடலினை மூடி எரித்ததன் பின் எதற்கும் பயனாகாத நீறாய் மாறும் இவ்வுடலை, நம்பிப் பயன் என்ன? இதுவே உலக வாழ்வின் விடை. இந்த வரிகளுக்கு அருமையான காட்சி வடிவம் கொடுத்திருந்தார் சங்கீதா.
சாதிச் சண்டை எதற்கு?
‘கோவிலாவது ஏதடா குளங்களாவது ஏதடா?’ என்னும் சிவவாக்கியரின் பாடல், நிலையாமையை உணர்ந்தபின் எதற்காக சாதிச் சண்டை, ஏன் உயர்வு தாழ்வு, இறைவனைத் தேடிக் கோயில் கோயிலாகச் செல்வதும், குளம் குளமாக நீராடுவதும், கோயில் என்பதும் குளம் என்பதும் அவரவர் மனமே. மானுடம் என்பதே உயர்ந்தது. மானுடம் சிறக்கவே வாழ்வு என்பதை உணர்த்தியது.
பொருளே வாழ்வா?
`காசாசை கொண்டு திரிவதினால் கபருக்கு துணைவருமோ றகுமானே…’ என்னும் குணங்குடியார் பாடலில், வாழ்வதற்குப் பொருள் தேவை. ஆனால் பொருளை சேர்ப்பதற்குத்தான் வாழ்க்கை என்பது எப்படி சரியாகும்? என்னும் கேள்வியை எழுப்பியிருப்பார்.
நாமே சிவமாவது எப்படி?
இறுதியாக, `அன்பும் சிவமும் இரண்டு என்பார்
அறியார் அறிவிலார்…
உள்ளம் பெருங்கோயில்
ஊன் உடம்பு ஆலயம்’
- என்னும் திருமூலரின் வாக்கை நடனத்தின் தில்லானாவாக்குப் பயன்படுத்திக் கொண்டனர்.
உலக வாழ்வு உபயோகமானதாக இருக்க வேண்டுமெனில் மனமே கோவில். சத்தியமே இறைவனைக் காணும் பாதை, புலன்களே விளக்கு. நம்முள் தோன்றும் தெளிவே இறைவன். அவனை அன்பால் உணர்ந்து அவ்வன்பே அவன் என்றறிந்து வாழ்ந்தால், நாம் காட்டும் அன்பே நம்மை சிவமாய் இவ்வுலகினில் நிலைநிறுத்தும் என்பதை ஆடியோ விஷூவலாக நமக்கு விருந்தாக்கியது அந்த நிகழ்ச்சி.
பேராசிரியர் ரகுராமன்
நன்றி :- தி இந்து
0 comments:
Post a Comment