Thursday, November 12, 2015


சூரபதுமன் என்ற அரக்கன் சிறந்த சிவ பக்தன். அவன் மிகப் பெரிய யாகங்கள், தவங்கள் ஆகியவற்றைச் செய்து சிவ பெருமானின் நன்மதிப்பைப் பெற்றான். அவனுக்கு வரமளிக்க விரும்பினார் சிவன். எனவே வேண்டும் வரமென்ன என்று கேட்டறிந்தார். ஈசன் உட்பட யாருக்கும் தன்னைக் கொல்ல வல்லமை இருக்கக் கூடாது என்று வேண்டினான் சூரன்.

இதனைக் கேட்ட சிவன் தன் பக்தன் ஆயிற்றே, தானே கொல்லவா போகிறோம் என்று எண்ணி அவன் கேட்ட வரத்தை அளித்தார். உடனடியாக முப்பத்துமூன்று கோடி தேவர்களுக்கும் சூரபதுமனைக் கொல்லும் வல்லமை அற்றுப் போனது.

சூரபதுமனுக்கு அகங்காரம் கூடியது. முப்பத்துமூவர் உட்பட முனிவர்களுக்கும் மனிதர்களுக்கும் பொறுக்க முடியாத தொந்தரவுகளைச் செய்யத் தொடங்கினான். அனைவரும் சிவனையே சரணடைந்தனர் காப்பாற்றக் கோரி. சிவனாலும், அவரது வரத்தினால் அது இயலாதே.
இந்த நேரத்தில் அவரது அதோமுகம் விழித்து எழுந்தது. அதிலிருந்து ஆறு தீப்பொறிகள் தோன்றின. பின்னர் அதோமுகம் மறைந்தது. அப்பொறிகளில் இருந்து உடனடியாக ஆறு தெய்வக் குழந்தைகள் தோன்றின. அவை சரவணப் பொய்கையில், ஆறு தாமரை மலர்களில், மலருக்கு ஒன்றாக ஆசனம் பெற்றன.

அத்திருக்குளத்திற்கு புனித நீராட வந்த தேவதைகளான ஆறு கார்த்திகை பெண்கள் அக்குழந்தைகளை ஆளுக்கு ஒன்றாக எடுத்து வாரி அணைத்தனர். சிறிது காலத்திற்குப் பிறகு சிவ பெருமான் அக்குழந்தைகளை ஒன்றிணைத்தார். இதனால் ஆறு தலைகள் கொண்ட ஆறுமுகன் தோன்றினான். தீமையை வெல்லும் புனிதம் படைக்கப்பட்டது.

சக்தி தேவி தனது பலத்தை எல்லாம் ஒன்று திரட்டி, வேல் ஒன்றை அளித்தாள். சக்திவேல் ஆனான் குமரன். சூரபதுமனை அழிக்க உருவெடுத்தான் அந்தக் கந்தன். தனித் தமிழ் கடவுள் என்ற சிறப்பு பெற்றான் முருகன். முருகு என்றால் அழகு, அழகன் சூரனை அழிக்கத் தோன்றினான்.
வேலனுக்கும் சூரபதுமனுக்கும் போர் மூண்டது. எந்த சிவனுக்கு பக்தனாக இருந்தானோ அந்த சூரன், அச்சிவனின் மைந்தனுக்கே பகைவன் ஆனான். தனது தளபதி வீரபாகுவுடன் களமிறங்கினான் முருகன். சக்தி தந்த வேல் எடுத்து வீசினான் சூரபதுமனை நோக்கி, மாயாவியாய் உருவெடுத்து மாமரமாய் மாறினான் சூரன்.

ஒரு மாமரமே அடர்ந்த காடு போல் இருந்தது. சூரைக்காற்றில் தலைக்கிளை விரித்து ஆடி, சிறுவன் முருகனை பயமுறுத்தியது. பயமின்றி அம்மரம் நோக்கி வேலை எறிந்தான் வேலன். இரண்டாய் பிளந்த சூரன் மயிலாகவும், சேவலாகவும் மாறி, வேலனைக் கொத்தித் தின்ன வந்தான்.
மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் கொண்டு வெற்றி முழக்கமிட்டான் முருகன். இந்த நிகழ்ச்சியை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சூரசம்ஹார நிகழ்ச்சியாக பல திருத்தலங்களில் நடைபெறுகிறது. திருச்செந்தூர் கடற்கரையில் சூரசம்ஹாரம் நிகழ்ந்ததால், அங்கு இப்பொழுதும் இந்நிகழ்ச்சி பல்லாயிரக்கணக்கானோர் முன்னிலையில் ஆண்டுதோறும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என்ற கோஷம் விண்ணை முட்டுகிறது.

இந்நிகழ்ச்சியைக் கண்டாலும், கேட்டாலும் சத்ரு பயமின்றி வாழலாம் என்ற நம்பிக்கை நிலவுகிறது. முருகனின் பிரசாதமாக வழங்கப்படுவதும் திருநீறு. மந்திரமாவது நீறு என்பது திருமூலர் வாக்கு.  (  திருஞான சம்பந்தர் வாக்கு என்பதே சரியானது.  இந்துவிற்கு  12-11-2015-இல் மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது )
அதோமுகம்

ஆறுமுகக் கடவுளை தோற்றுவிக்க எழுந்தது அதோமுகம். அதோமுகம் என்பது சிவனின் ஆறாவது முகம் என்று திருமூலர் தமது திருமந்திரத்தில் குறிக்கிறார். சிவன், ஈசானம், தற்புருடம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம் ஆகிய ஐந்து முகங்களைத் திருவானைக்காவல் திருத்தலத்தில் காட்டி அருளுகிறார். ஆறாம் முகமான அதோமுகம் சூட்சுமமாகக் கண்களுக்குப் புலப்படாமல் மறைந்து அகமுகமாகவே இருக்கும்.

ஆனால் சூரபதுமனை வெல்வதற்காகத் திருமுருகனைத் தோற்றுவிக்கத் தீப்பொறியைத் தெரிக்க எழுந்தபொழுது காட்சியானது அதோமுகம். இம்முகம் பூலோக இறுதியில் ஊழியின் முடிவில் மீண்டும் தோன்றும் என்கிறது திருமந்திரம். உக்கிரத்தை வெளிப்படுத்தும் அதோமுகம் சனகாதி முனிவர்களுக்குக் காட்சி அளிக்கும்போது மட்டும் சாந்த சொரூபமாக இருந்ததாம்.


நன்றி :- தி இந்து

0 comments:

Post a Comment