Friday, February 7, 2014

இன்று எல்லா தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் காலை நேரத்தில் ஆன்மிக நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. தல புராணங்கள், பக்திப் பாடல்கள், அபிஷேக ஆராதனைகள், குடமுழுக்கு நேரடி வர்ணனை போன்றவற்றோடு ஆன்மிகச் சொற்பொழிவாளர்களும் நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்கிறார்கள்.

ஆன்மிகச் சொற்பொழிவுகளுக்கு முன்பை விட இப்போது அதிகமாக கூட்டம் வருகிறது. சில தொலைக்காட்சிகள் இந்தச் சொற்பொழிவுகளின் பதிவை நேரடியாக மக்கள் முன்னிலையில் நிகழ்த்தும்போது ஏதோ திருவிழாபோல் அந்த அரங்குகளில் மக்கள் வெள்ளம் பெருக்கெடுக்கிறது.

ஆனால் இந்தச் சொற்பொழிவுகள் மக்களிடையே உண்மையான பக்தி உணர்வையும் தத்துவச் சிந்தனையையும் தோற்றுவிக்கின்றனவா என்பது கேள்விக்குறியே. ஒரு சிலர் தங்களின் கருத்தாழம் நிறைந்த உரைகளால் சிறந்த ஆன்மிகத் தொண்டாற்றி வருகிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. என்றாலும் பொதுவாக ஆன்மிகச் சொற்பொழிவுத் துறையில் கடைப்பிடிக்க வேண்டிய சில அடிப்படைக் கோட்பாடுகளை எல்லா சொற்பொழிவாளர்களும் கடைப்பிடிக்கிறார்களா என்றால் இல்லை என்பதே பதில்.

முக்கியமாக, கருத்தை எடுத்துச் சொல்லும் முறை, பக்தி உணர்வுடையவர்களின் நெஞ்சங்களில் பக்தி அலையை எழுப்ப வேண்டும் என்பதே ஆன்மிக சொற்பொழிவுகளின் நோக்கமாக இருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலும் அப்படி இருப்பதில்லை.

ஒரு சொற்பொழிவாளர் பாற்கடலில் பரந்தாமனுக்கு ஸ்ரீதேவியும் பூதேவியும் கால்பிடித்து பாதசேவை செய்யும் காட்சியை வர்ணிக்கும்போது, ""அவர்கள் திருமாலுக்கு "மசாஜ்' செய்தார்கள்'' என்று பேசினார். எந்த இடத்தில் எந்தச் சொல்லைப் பயன்படுத்துவது என்பதில் ஒரு தேர்வு இருக்க வேண்டாமா? தன் பாதங்களில் சரணடைபவர்களை பிறவிப் பெருங்கடலிலிருந்து கரைசேர்க்கும் பரமனைப் பற்றிப் பேசும்போது இப்படியா கொச்சை மொழியைப் பயன்படுத்துவது?

இன்னொரு சொற்பொழிவாளர் "அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்' என்ற கம்பராமாயணக் காட்சியை விவரிக்கும்போது, ""ராமனும் சீதையும் ஒருவரையொருவர் "சைட்' அடித்துக் கொண்டார்கள்'' என்று பேசினார்.

வேறொரு சொற்பொழிவாளர் தான் நாத்திகனா ஆத்திகனா என்று தனக்கே தெரியவில்லை என்று தனது சொற்பொழிவின் இடையே குறிப்பிட்டார். இப்படி ஒரு சந்தேகம் அவருக்கே இருக்கும்போது அவர் ஆன்மிக மேடைகளுக்கு வருவானேன்? முதலில் தன்னைத் தெளிவுபடுத்திக் கொண்டு தன் இயல்புக்கேற்ற மேடைகளில் அவர் பேசலாமே!

ஆன்மிகத்தின் மிக முக்கியமான நோக்கங்களில் ஒன்று தனிமனித ஒழுக்கத்தை வளர்ப்பது. தனிமனித ஒழுக்கமில்லாதவர்கள் ஆன்மிக மேடைகளைத் தவிர்ப்பதே நல்லது. ஆன்மிகச் சொற்பொழிவாளர்களை கடவுளாகவே காணும் மக்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள். அவர்களை ஏமாற்றுவது சரியல்ல.

"இப்படியெல்லாம் பேசக் கூடாது என்று சொன்னால் எப்படியெல்லாம் பேச வேண்டும்' என்ற கேள்வியும் எழும். அதற்கு, "கிருபானந்த வாரியார் போன்றோர் எப்படிப் பேசினார்களோ அப்படி' என்பதுதான் பதில்.

வாரியார் பாமரர்க்கும் புரியக் கூடிய மொழியில் சொற்பொழிவாற்றுவார். சொல்லழகும் பொருளழகும் நிறைந்து மக்களைக் கவர்ந்தன அவரது உரைகள். அவை இப்போதும் ஒலிப்பேழைகளாக கிடைக்கின்றன. அவற்றை வாங்கிக் கேட்டு இன்றைய ஆன்மிகச் சொற்பொழிவாளர்கள் பயனடையலாம்.

தாங்கள் பின்பற்றாத கோட்பாடுகளை மற்றவர்களைப் பின்பற்றச் சொல்லும் ஆன்மிகச் சொற்பொழிவாளர்களைப் பற்றி ராமகிருஷ்ண பரமஹம்சர் ஒருமுறை கூறினார்: "பஞ்சாங்கத்தில் மழை எப்போது வரும் என்று போட்டிருக்கும். ஆனால் பஞ்சாங்கத்தைப் பிழிந்தால் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட வராது'.

பரமஹம்சரே ஒரு மிகச் சிறந்த ஆன்மிகச் சொற்பொழிவாளர்தான். அவரது உரைகளால் கவரப்பட்டுத்தான் விவேகானந்தர் மற்றும் மகேந்திரர் போன்ற உன்னத ஆன்மிகவாதிகள் உருவானார்கள்.

தமிழில் ஆன்மிகச் சொற்பொழிவுத் துறையை வளர்த்த முன்னோடிகளில் ஒருவர் வள்ளலார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். வள்ளலார் மரபில் ஆன்மிகச் சொற்பொழிவுத்துறை வளர வேண்டும்.

அரசியல், சினிமா, இலக்கியம் போன்ற துறைகளில் கபட வேடதாரிகள் அனுமதிக்கப்படலாம் (சினிமாத்துறை வேடதாரிகளுக்கென்றே உருவானது). ஆனால் ஆன்மிகத் துறையில் அவர்களை அனுமதிக்கக் கூடாது.

அப்படி அனுமதித்தால் கடும் துயரங்களுக்கு ஆட்பட்டு ஆன்மிகத்தில் சரணடைய விரும்பும் அன்பர்கள் தவறாக வழிநடத்தப்படும் அபாயம் இருக்கிறது. இதை உணரவேண்டிய காலகட்டம் இது.

தினமணி

0 comments:

Post a Comment