கன்னியாகுமரி மாவட்டத்தில் சைவ, வைணவ ஒற்றுமையை பறைசாற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க சிவாலய ஓட்டத்துக்கு பக்தர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சிவராத்திரி நாளில் பக்தர்கள் இறைவனின் அருள் வேண்டி முன்சிறை அருகேயுள்ள திருமலை மகாதேவர் கோயிலில் இருந்து தொடங்கி, திக்குறிச்சி மகாதேவர் கோயில், திற்பரப்பு வீரபத்திரர் கோயில், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோயில், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோயில், திருப்பன்னிப்பாகம் சிவன் கோயில், கல்குளம் நீலகண்டசுவாமி கோயில், மேலாங்கோடு சிவன் கோயில், திருவிடைக்கோடு மகாதேவர் கோயில், திருவிதாங்கோடு மகாதேவர் கோயில், திருப்பன்றிகோடு மகாதேவர் கோயில், திருநட்டாலம் சங்கரநாராயணர் கோயில் என 12 சிவாலயங்களில் ஓட்டமாகச் சென்று வழிபடுவதே சிவாலய ஓட்டமாகும்.
இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் குமரி மாவட்டத்தில் பல நூற்றாண்டுகளாக நடைபெறும் இந்த ஓட்டம் ஒரு முக்கிய நிகழ்வாகும்.
விரதம்: சிவாலய ஓட்டத்தில் பங்கேற்கும் பக்தர்கள் மாசி மாதம் ஏகாதசி நாளில் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்குகின்றனர். இவர்கள் காலை, மாலை வேளைகளில் குளித்து, சிவன் கோயில்களுக்குச் சென்று சிவநாமங்களை உச்சரித்து வழிபடுவர். சைவ வகை உணவுகளை மட்டுமே உட்கொள்வர். சிவராத்திரி தினத்துக்கு முந்தைய நாளில் காவி உடை தரித்து, கையில் விசிறியுடன் கோபாலா... கோவிந்தா... என்ற நாம கோஷத்துடன் திருமலை மகாதேவர் கோயிலில் தொடங்கி ஒவ்வொரு கோயிலாக ஓடியவாறு சென்று சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
110 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த நீண்ட ஓட்டத்தில் தற்போது பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என ஏராளமானோர் பங்கேற்கின்றனர். கேரள மாநிலத்திலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் வருகை தருகின்றனர்.
இவர்களில் பெரும்பாலானோர் இருசக்கர வாகனங்கள் மற்றும் வேன், பஸ் போன்ற வாகனங்களிலும் ஒவ்வொரு கோயிலாகச் சென்று வழிபடுகின்றனர்.
பக்தர்கள் கோயில் குளத்தில் குளித்துவிட்டு கோயிலுக்குள் செல்ல வேண்டுமென்பதும், தங்கள் கையில் வைத்திருக்கும் விசிறியால் சுவாமிக்கு வீசிக் கொடுக்க வேண்டுமென்பதும் ஐதீகம்.
சிவாலய ஓட்டத்தின் கதை: சிவாலய ஓட்டம் தொடர்பாக மக்கள் மத்தியில் இரண்டுவிதமான தொன்மங்கள் பரவலாக நிலவி வருகின்றன. இதில், மகாபாரதத்துடன் தொடர்புடையதான, தருமரின் யாகம் ஒன்றிற்கு புருஷா மிருகத்தின் பால் பெற பீமன் சென்ற கதை மற்றும் சூண்டோதரன் என்ற அரக்கன் தவம் செய்து சிவபெருமானிடம் வரம் பெற்று, பின்னர் அந்த வரத்தை சிவபெருமானிடமே சோதித்துப் பார்க்க முயலும்போது சிவபெருமான் கோபாலா.. கோவிந்தா என்று விளித்தவாறு ஓடியதும், இறுதியில் விஷ்ணு, மோகினி அவதாரமெடுத்து சூண்டோதரனை அழிப்பதுமான கதை.
இதில் புருஷா மிருகத்தின் பால் பெற சென்ற பீமன், கிருஷ்ணனின் உபதேசப்படி உத்திராட்ச கொட்டைகளைப் போட்ட இடங்களே சிவத் தலங்களாயிற்று என்றும், சூண்டோதரன் கதையில் சிவபெருமான் பதுங்கி மறைவாகி இருந்த இடங்களே சிவத் தலங்களாயிற்று என்றும் மக்கள் மத்தியில் நம்பிக்கை உள்ளது.
திருவட்டாறு கோயில்: இதுதவிர, திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் தலபுராண வரலாறும் சிவாலய ஓட்டத்துடன் தொடர்புடையதாக உள்ளது. இப்புராணம், அரக்கனான கேசனை மகாவிஷ்ணு ஆதிசேடனால் சுற்றி வளைத்து வீழ்த்தியபோது, கேசன் தனது நெடிய 12 கைகளால் மனித உயிர்களை வதம் செய்தபோது அதனைத் தடுக்கும் வகையில் சிவ பக்தனான கேசனின் 12 கைகளிலும் 12 சிவலிங்கங்களைக் கொடுத்தாகவும், அதனால் கேசன் அடங்கியதாவும் கூறுகிறது. இப்புராணத்தின்படியே திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலை மையமாகக் கொண்டு 12 சிவத் திருத்தலங்களும் உள்ளதாகவும் நம்பிக்கை உள்ளது.
பிப். 26-ல் சிவாலய ஓட்டம் தொடங்கும்: சிவராத்திரி தினம் பிப். 27ஆம் தேதியாக உள்ள நிலையில், பக்தர்கள் சிவாலய ஓட்டத்தை 26ஆம் தேதி பிற்பகலில் தொடங்கி 28ஆம் தேதி நிறைவுசெய்கின்றனர். சைக்கிள், மோட்டார்சைக்கிள் மற்றும் இதர வாகனங்களில் செல்லும் பக்தர்கள் 27ஆம் தேதி காலையில் தொடங்கி 28ஆம் தேதி அதிகாலையில் நிறைவு செய்கின்றனர்.
முதல்வருக்கு நன்றி: குமரி மாவட்டத்தில் சிவராத்திரி தினத்தன்று உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டுமென்று பக்தர்கள் மற்றும் இந்து அமைப்புகள், மக்கள் பிரதிநிதிகள் நீண்ட காலமாக கோரிக்கைவிடுத்து வந்தனர். இந்நிலையில், தமிழக முதல்வர் நிகழாண்டுமுதல் மகா சிவராத்திரி நாளில் குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளித்துள்ளார். தமிழக முதல்வரின் இந்த அறிவிப்பு பக்தர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. இதனால் பக்தர்களும் இந்து அமைப்புகளும், மக்கள் பிரதிநிதிகளும் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
சிறப்பு வசதிகள் வேண்டும்: சிவாலய ஓட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரும் நிலையில் மருத்துவ வசதி, பாதுகாப்பு, தெருவிளக்கு, சாலை வசதி மற்றும் அடிப்படை வசதிகளைச் செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி
0 comments:
Post a Comment