Saturday, January 18, 2014



சங்கர நயினார் கோயில்

பூகைலாயம், புன்னைவனம், சீராசபுரம், சீராசை, வாராசைபுரம், கூழைநகர் எனப் பெயர் பெற்ற சங்கரன்கோவில் என்னும் ஊர், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது. இங்கு கோமதி அம்மன் உடனுறை சங்கரநயினார் கோயில் கொண்டுள்ளார். இவர் மனோன்மணி என்னும் சக்தியையுடைய சங்கரலிங்கர் எனவும் புற்றிலிருந்து வெளிப்பட்டதால் வான்மீகநாதர் எனவும் அழைக்கப்படுகிறார். அக்கோயிலுக்கு ஒன்பது நிலைமாடங்களும் 125 அடி உயரமும் உள்ள ராஜகோபுரத்தை 900 ஆண்டுகளுக்கு முன்னர் உக்கிரமப் பாண்டியர் கட்டியிருக்கிறார். கோயிலின் கிழக்குப் பிரகாரத்தில் வலது தூணில் உக்கிரமப் பாண்டியன் சிலையும் இடது தூணில் உமாபதி சிவாச்சாரியார் சிலையும் உள்ளன. மகாமண்டபத்தைச் சுற்றி சிற்பச் செறிவுமிக்க சிறுசிறு உருவங்கள் உள்ளன.

சங்கன், பதுமன் என்னும் பாம்பு அரசர்கள் இருவர் அரி பெரியவரா, அரன் பெரியவரா எனச் சண்டையிட்டனர். அவர்களுக்கு அரியும் அரனும் ஒன்றே என விளக்க சங்கரரும் நாராயணரும் ஒற்றை உடம்பில் தோன்றினர். அவரே சங்கர நாராயணர் என இவ்வூரில் வணங்கப்படுகிறார். இறைவனின் சங்கரநாராயணத் தோற்றத்தைக் காண விரும்பிய பார்வதி ஆடி மாதத்தில் இவ்வூரில் தவம் புரிந்தாள். அதுவே ஆடித் தபசாக இப்பொழுதுக் கொண்டாட்டப்படுகிறது. பார்வதி தவமிருக்கும் பொழுது இவ்வூரில் தேவர்கள் புன்னை மரங்களாக நின்று பூமாரிப் பொழிந்தனர். தேவப்பெண்கள் பசுவாக வந்து பால்மாரிப் பெய்து அம்மையப்பனை வழிபட்டனர். இவ்வாறு ஆ என்னும் பசுகள் சூழ அம்மையும் அப்பனும் இருப்பதால் ஆவுடையம்மன், ஆவுடையப்பன் என இறைவியும் இறைவனும் அழைக்கப்படுகின்றனர். கோ என்னும் பசு சூழ இருந்ததால் அம்மை கோமதி அம்மன் என அழைக்கப்படுகிறார். இறைவன், இறைவி, தேவர், தேவப்பெண்கள் என கைலாயத்தில் உள்ள அனைவரும் இங்கு எழுந்தருளி இருப்பதால், இவ்வூர் பூகைலாயம் எனப்படுகிறது என்கிறது இவ்வூர் தலபுராணம்.

கோழி தனது இறகுகளுக்குள் தன் குஞ்சுகளை மறைத்து, கழுகிடமிருந்து அவற்றைக் காப்பதுபோல, 

எமனிடமிருந்து கோமதி அம்மை தம்மைக் காக்க வேண்டும் என்கிறார் அழகிய சொக்கநாதர் பின்வரும் பாடலில்:

கேடாவரும் நமனைக்கிட் டவரா தேதூரப்
போடாயென் றோட்டியுன்றன் பொற்கமலத் தாள்நிழற்கீழ்
வாடாவென அழைத்துவாழ் வித்தாலம் மாயுனைக்
கூடாதென் றார்தடுப்பார் கோமதித்தாய் ஈஸ்வரியே.

சுகி.சிவம்

0 comments:

Post a Comment