மாணிக்கவாசகர் - செய்யுள் கல்வெட்டு
புதுக்கோட்டை மாவட்டம், திருப்பெருந்துறையில் அமைந்துள்ள ஆத்மநாதேஸ்வரர் கோவில் என்று அழைக்கப்படும் ஆவுடையார் திருக்கோவில், சைவ சமயக் குரவர் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகரால் கட்டப்பட்டது என்பதை நிரூபிக்கும் செய்யுள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு அண்மையில் கண்டறியப்பட்டுள்ளது.
ஆங்கிலேயரான ஜி.யு. போப்பை, தீந்தமிழின் அன்பராக, அறிஞராக மாற்றிய பெருமை, மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்துக்கு உண்டு. "திருவாசகத்துக்கு உருகார் ஒருவாசகத்துக்கும் உருகார்' என்ற வாக்குக்கு ஜி.யு. போப் ஒரு சான்று.
அந்தத் திருவாசகத்தில் "சீரார் பெருந்துறை நம்தேவனடி போற்றி' என்று திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானைப் போற்றுகிறார் மாணிக்கவாசகர். தற்போது ஆத்மநாதேஸ்வரர் கோவில் என்றும் ஆவுடையார் கோவில் என்றும் அழைக்கப்படும் இந்தத் திருப்பெருந்துறை
ஆலயத்தை மாணிக்கவாசகர்தான் கட்டினார் என்பது செவிவழி வரலாறு.
கி.பி. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மாணிக்கவாசகர், மதுரையை ஆண்ட அரிமர்த்தன பாண்டியன் எனப்படும் சுந்தர பாண்டியனிடம் அமைச்சராகப் பணியாற்றியவர். சிறந்த சிவபக்தரான மாணிக்கவாசகர், ஒருமுறை பாண்டிய மன்னனுக்காக குதிரை வாங்கிவரச் சென்றபோது, அந்தப் பணத்தைக்கொண்டு திருப்பெருந்துறையில் இறைவன் ஆலயத்தை எழுப்பிவிட்டார்.
பின்னர் என்ன செய்வது என்று அவர் திகைத்து நின்றபோது, சிவபெருமானே நரிகளைப் பரிகளாக்கி (குதிரைகளாக்கி) பாண்டிய மன்னனிடம் வழங்கியதாகவும், பின்னர் அந்தக் குதிரைகள் மீண்டும் நரிகளாக மாறி ஓடியதாகவும் திருவிளையாடல் புராணத்தின் நரியைப் பரியாக்கிய படலம் வர்ணிக்கிறது.
அவ்வாறாக மாணிக்கவாசகர் எழுப்பிய ஆலயம், தற்போது புதுக்கோட்டை மாவட்டம், திருப்பெருந்துறையில் உள்ள ஆவுடையார் கோவில்தான் என்கிறது ஸ்தலபுராணம். இது பக்தர்தம் நம்பிக்கை மாத்திரமே, வரலாற்று ரீதியில் உண்மையல்ல என ஒரு சாராரிடம் நிலவிய கருத்து தற்போது ஒரு கல்வெட்டுச் செய்யுள் மூலம் தகர்ந்துள்ளது.
இதுகுறித்து திருச்சி மண்டல தொல்லியல் ஆய்வுத் துறை பதிவு அலுவலர் கோ. முத்துசாமி கூறிய தகவலாவது:
""ஆவுடையார் கோவிலில் காணப்படும் 200-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் அண்மையில் படியெடுக்கப்பட்டன. அவற்றில் 6 கல்வெட்டுகள் செய்யுள் வடிவில் அமைந்ததாகும்.
அதில் "உதிக்கும் சகாத்தமிங் கொன்றரை யாயிரம்' எனத் தொடங்கும் ஒரு கல்வெட்டுச் செய்யுள், இந்தக் கோவில் மாணிக்கவாசகரால் கட்டப்பட்டது என்பதையும், இந்த ஆலயத்தில்தான் அவர் திருவாசகத்தை இயற்றினார் என்பதையும் நிறுவுகிறது. மேலும், இந்தக் கோவிலில் உள்ள கனகசபை மண்டபத்தில் திருவாசகச் செய்யுள்கள் பொறிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கிறது.
இந்த ஆலயத்தில் உள்ள 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பஞ்சாட்சர மண்டபத்தில் இந்தக் கல்வெட்டு காணப்படுகிறது. இந்தக் கல்வெட்டுச் செய்யுள் மூலம், மாணிக்கவாசகர் காலத்தில் இந்தக் கோவில் கருவறையும், கனகசபை மண்டபமும் கட்டப்பட்டதும், கோவில் மண்டபத்தில் திருவாசகப் பாடல்கள் கல்வெட்டுகளாய் பொறிக்கப்பட்ட செய்தியும் உறுதி செய்யப்படுகின்றன'' என்றார்.
தினமணி
0 comments:
Post a Comment