Monday, February 17, 2014



ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழாவில் சினிமா நடிகைகள் உள்பட லட்சக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டு வழிபட்டனர் - 

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு நடிகைகளும் கலந்து கொண்டனர்

பெண்களின் சபரிமலை’’ என்றழைக்கப்படும் திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பொங்கல் விழாவில் லட்சக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டு வழிபாடு நடத்துவது வழக்கம்.

ஒரே நேரத்தில் அதிக பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டு வழிபாடு நடத்துவதில், இந்த விழா கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. அதன் அடிப்படையில் இந்த ஆண்டுக்கான பொங்கல் விழா, கடந்த 8–ந்தேதி தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் வழிபாடு நேற்று நடைபெற்றது.

அதன்படி காலையில் கோவிலில் வழக்கமான பூஜை, வழிபாடுகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து 10.30 மணிக்கு கோவில் முன் அமைக்கப்பட்டிருந்த அடுப்பில் மேல்சாந்தி நீலகண்டன் நம்பூதிரி தீ மூட்டினார். அப்போது மாநில மந்திரி வி.எஸ்.சிவகுமார் உள்பட முக்கிய பிரமுகர்கள் உடன் இருந்தனர்.

அதைத் தொடர்ந்து செண்டை மேளமும், வானை பிளக்கும் வெடி முழக்கமும் ஆங்காங்கே ஒலித்தது. பின்னர் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் அடுப்புகள் மற்றும் தளவாடங்களுடன் தயாராக இருந்த பெண்கள், அடுப்புகளில் தீ மூட்டி பொங்கலிட்டனர்.

இதனால் சிறிது நேரத்தில் நகரம் முழுவதும் ஒரே புகை மண்டலமாக காட்சி அளித்தது. அப்போது வானில் பறந்த ஹெலிகாப்டர் முக்கிய இடங்களில் பூக்களை தூவியது.

வழக்கம்போல் இந்த ஆண்டும் கோவில் மற்றும் சுமார் 7 கிலோ மீட்டர் சுற்றளவில், சுமார் 40 லட்சம் பெண்கள் பக்திப்பரவசத்துடன் பொங்கலிட்டு, வழிபாடு நடத்தி அம்மனின் அருள் பெற்றனர்.

அதை தொடர்ந்து சாலைகளின் சந்திப்புகளில் பொதுமக்கள், நிறுவனங்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம், குடிநீர், மோர், சர்பத் போன்றவை வழங்கப்பட்டன.

பிற்பகல் 2.30 மணிக்கு பொங்கல் பானைகளுக்கு புனித நீர் தெளித்து நிவேத்யம் செய்யப்பட்டது. இதில் 300–க்கும் மேற்பட்ட பூசாரிகள் ஈடுபட்டனர். பின்னர் பொங்கல் பானைகளை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு பெண் பக்தர்கள் மற்றும் குடும்பத்தினர் சாரை சாரையாக தங்கள் ஊர்களுக்கு திரும்பினர்.

தொடர்ந்து ஆற்றுக்கால் அம்மன் கோவில் பொங்கல் அன்று நடத்தப்படும் தாலப்பொலி வழிபாடு நடந்தது. இதில் 12 வயதுக்குட்பட்ட ஆயிரக்கணக்கான பெண் குழந்தைகள் மேள–தாளம் முழங்க தட்டுகளில் பூக்கள் மற்றும் மங்கல பொருட்கள் வைத்து ஊர்வலமாக சென்றனர்.

பின்னர், விழா நாட்களில் கோவிலில் தங்கியிருந்து விரதம் கடைப்பிடித்த சிறுவர்களின் குத்தியோட்டம் என்ற வழிபாடு மற்றும் அம்மன் பவனி ஆகியவை நடைபெற்றன.

இந்த பொங்கல் வழிபாட்டில் ஐ.பி.எஸ். அதிகாரி ஸ்ரீலேகா, தமிழ், மலையாள திரைப்பட நடிகைகளான பிரியங்கா, அஞ்சு, மலையாள திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகைகள் சிப்பி, அபர்ணா உள்பட பலர் கலந்து கொண்டு பொங்கல் வைத்தனர்.

இந்த விழாவையொட்டி திருவனந்தபுரத்துக்கு சிறப்பு பஸ்கள் மற்றும் ரெயில்கள் இயக்கப்பட்டிருந்தன. மேலும் பெண்கள் பாதுகாப்புக்காக பல இடங்களிலும் பெண் போலீசார் உள்பட கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

செய்தி : அலை செய்திகள்


   

0 comments:

Post a Comment