தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது கழுகுமலை என்னும் மிகப் பழமையான ஊர். அங்குள்ள மலையில் அமைந்துள்ள 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையானது இந்தக் கோயில். இது உள்ளூர் மக்களால் வெட்டுவாங்கோயில் என அழைக்கப்படுகிறது. பாண்டிய மன்னர்களால் இக்கோயில் கட்டப்பட்டதாக வரலாறு உள்ளது. 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வரகுணபாண்டியன் காலத்தில் இக்கோயில் செதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவர்தான் கட்டினார் என்பதற்கு ஆதாரங்கள் எதுவும் இல்லை. மாமல்லபுரத்தில் உள்ள பஞ்சபாண்டவர் கல்ரதங்கள் போல இது முழுவதுமாக மலைப் பாறையைக் குடைந்து உருவாக்கப்பட்டுள்ளது. தமிழர் கட்டடக்கலையின் சிறப்பை உணர்த்தும் வகையில் இக்கோயில் உள்ளது. ஆனால் இது முழுமையடையாமல் உள்ளது. சிற்பங்கள் முகமில்லாமலும், கை கால்கள் இல்லாமலும் உள்ளன.
இதற்குக் காரணம் என்ன எனத் தெரியவில்லை. ஆனால் அது குறித்த ஒரு வாய் வழிக் கதை இப்பகுதியில் காலம் காலமாகச் சொல்லப்பட்டு வருகிறது. கழுகுமலையில் சமணப் பள்ளி ஒன்று உள்ளது. இங்கு சமண மதம் செல்வாக்குடன் இருந்ததற்கு இது மிகப் பெரிய ஆதாரமாக உள்ளது. இங்குள்ள சமணப் பள்ளிச் சிற்பங்களைத் தந்தை ஒருவன் உருவாக்கியிருக்கிறான். இந்த வெட்டுவாங்கோயிலை அவரது மகன் உருவாக்கியிருக்கிறான். மகன் உருவாக்கிய சிற்பங்கள், தான் உருவாக்கிய சிற்பங்களைவிட சிறப்பாக இருந்துள்ளது. இதனால் பொறாமை கொண்ட தந்தை மகனை வெட்டிக் கொன்றுவிட்டான். இதனால்தான் இங்குள்ள சிற்பங்கள் முழுமையடையாமல் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
வெட்டுவான் கோயிலுக்கு ‘தென்னக எல்லோரா’ என்ற சிறப்புப் பெயரும் உள்ளது. இது இந்துக் கோயிலைப் போல பிரகாரம், அதிட்டானம், விமானம், கருவறை, அர்த்த மண்டபம், தெய்வங்கள் ஆகிய அம்சங்கள் உள்ளன. கற்கோயிலுக்கும், மலைக்கும் இடையிலுள்ள குடைந்தெடுக்கப்பட்ட பகுதி கோயிலின் சுற்றுப் பிரகாரமாக உள்ளது. கருவறையும், அர்த்த மண்டபமும், மலையின் உட்பகுதி குடையப்பட்டு அமைக்கப்பட்டுள்ளன.
விமானத்தின் அடிப்பகுதியும், அர்த்தமண்டபமும் முற்றுப்பெறா நிலையில் உள்ளன. விமானத்தின் உச்சிப்பகுதி முற்றுப்பெற்று அழகுடன் காட்சியளிக்கிறது. விமானத்தின் உச்சிப்பகுதியில் நான்கு பக்கங்களிலும் சுமார் 100 சிற்பங்கள் உள்ளன. கோபுரங்களில் பொதுவாகக் காணப்படும் சுதைச் சிற்பங்கள் இங்கு கருங்கல்லில் வடிக்கப்பட்டுள்ளன. இங்குக் காணப்படும் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, சிவன் ஆகிய திருவுருவங்கள், நந்தியின் உருவங்கள் ஆகியவை இக்கோவில் சிவனுக்காக வடிக்கப்பட்டதைக் காட்டுகிறது. யாளிகள், பூதகணங்கள், நடனமாதர் உருவங்கள், தாமரை மலரின் விரிந்த உருவம் ஆகியவை விமானத்தில் காணப்படும் அழகிய இதர சிற்பங்கள். தற்போது இதன் கருவறையில் கணபதியின் தற்காலச் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
- க. முருகன், கழுகுமலை
தி இந்து
0 comments:
Post a Comment