தீபமேற்றும் சிறுமிகள்! படிமீதமர்ந்து திருவருட் பதிகமோதும்
மூதாட்டி! மோன நிலையில் அமைதியெனுமமுதம் பருகித் திளைக்கும் வயோதிகப் பெரியோர்! கொடிமரத்தடியில்
எண்சாண் உடம்பும் மண்ணில் பரவ, பணிந்து வணங்கும் வாலிபர்கள்! நெற்றியில் நீறு
தரித்து, முன்பல்லிரண்டும் விழுந்தின்னும் முளைக்காத இளம் வாயால் தூரத்து
ஒலிபெருக்கியில் மெலிதாய் இசைக்கும் தேவாரப் பண்ணைத் தன் நாவும் இசைக்க, ஆலயவலம் வந்தவாறே
நமை நோக்கிப் புன்முறுவல் பூக்கும் சிறுபாலகன்! குருவிகளின் ‘கீச்’ ‘கூ’ எனும் கிறக்கம்
தரும் ராக மழை! முகம் வருடும் காற்று! நெய் மணக்கும் சூழல்!! ஆகா! நம்மெய்மறக்கச்
செய்து அமைதியெனும் அருமருந்தை நம் ஆழ்மனத்தின் மேல்தடவும், ஆலயம்!
பெருகி வதைக்கும் கொதிப்புகள் மறைந்து, அலைகளற்ற ஆழியாய்ச் சட்டென
அமைதியுறுகிறது உள்ளம்!
இன்றைய பரபரக்கும் சூழலில் நம் மனக்கொதிப்பாற்றுவதே பெரும்
வேலை! மனக்கொதிப்பு ஆறி அது அமைதியுறல் சாத்தியாமாயின், அதன் பின்னர் நடப்பன
யாவும் நல்லனவே!
உடல் தூய்மை, உள்ளத் தூய்மையின் வாசல்! உடலும் உள்ளமும்
அவற்றின் அழுக்குகள் களையப்பெற்றுத் தூய்மையுற்றால், பின் ஆங்கே நறுமணம் கமழ்கின்ற
நற்பண்புகளை விதைத்தல் என்பது இலகுவாகிறது!
உடல் தூய்மையோடு ஆலயமுட்புகுந்தால், அதன் சூழல் நம்முள்
உள்ளத்தூய்மையை உரு ஆக்கும். இறைவனையும் அவர்கட்குத் தொண்டாற்றும் அடியார்களையும்
பணிதல், நம்முள் அப்பண்பை ஆழமாய் விதைக்கும்! பின் அது பயிராக, அதுதரும் விளைச்சல்
அற்புதமானது! அளவிடற்கரியது!!
இறைவரடியைப் போற்றி, கசிந்து உள்ளுருகிப் பாடினத் திருப் பதிகங்களை
வாசித்தல், நார் பெற்ற பூவால், நாரும் மணம் நாறுதற்போல, நம் மனமும் கசிந்து உருகி,
இளக்கமாவதற்கு வழி செய்யும்.
அடியார்கள் வாழ்வினை, அவற்றினுள் இலங்கும் “மறை”பொருளை,
பெரியோர்வழி கேட்”டுணர்தல்”, நம் செயல்களில் ஊட்டமாய் உட்புகுந்து, செய்வன யாவும்
நல்வினையாய் மாறும் திறம் பெருக்கும்.
அக்காலத்தில் ஆக்கப்பெற்ற ஆலயங்கள் வெறும் காட்சிப்
பொருளன்று! அவை நம் ஆழ்மனத்தை நன்குழுது நன்செய் நிலமாய் ஆக்குதற்கே ஆக்கம்
பெற்றன.
அவற்றின் அற்புதம் உணர்ந்தவர்கள், அவற்றால் பயன்
கொண்டவர்கள், தம்மோடு நில்லாமல் தம்மைச் சார்ந்தவர்கட்கும் அதன் அற்புதத்தை ஊட்டி
உடனிருந்து உணரவைத்தார்கள். அவ்விதம் அத்தன்மையரால் ஊட்டப் பெற்று, ஊட்டம் பெற்று
வளர்ந்தவர்கள் இன்று (மன)வளம் பெற்று வாழ்கிறார்கள் என்பது கண்கூடு!
ஆலயங்கள், நன்வழி மூலத்தை அறிவதற்கான பாலபாடம்
பயிற்றுவிப்பன! ஆலயங்கள், ஆண்டவன் ‘வடிவை’யும், அவன் எத்தகையோன் எனும் இயல்பினையும் நாம் உணருதற்கு
ஊக்கம் தருவன.
ஆலயங்கள், இறைவனின் பெருமையென்ன...அத்தனைப் பெரிதோ-வென
வினவுவார்க்கு, அவர்தம் சிறுமையை எடுத்துக் காட்டி விளங்கச் செய்யும் வழிவகுப்பன.
ஆலயம் என்பன, நம் அகக்கண்மேல் படிந்திருக்கும் அழுக்கைக்
கழுவும் ஊற்று! நம் மனத்தோடு உறவாடி ‘உரை’ஆடி மணம் சேர்க்கும் சந்தனக்கோல்! அன்பெனும் பால் தரும்
பசு! பண்பெனும் பதம் தரும் அரசு! இறைமை என்பது இத்தகையது என அளவிடற்கரியது. அதனை
ஆழ்ந்து உணர்தற்கு உன்னத முனைப்பு வேண்டும். அவற்றைத் தூண்டும் கோலாய் ஆலயங்கள்
இருக்குமென்பது வெளிப்படை. எனவே இறைமையை மறுப்பவர்களும், அதன்மேல் விருப்புடன்
இருப்பவர்களும் ஆலயமதன் அரும் திறம் உணர்ந்து பயன்கொள்ளல் மிகவும் சீரிய
செயலாகும்! அவ்விதம் பயன் கொண்டோர் தமைச் சார்ந்தவர்க்கும் அவ்வழியை
எடுத்துரைத்தல் மிக்க சிறந்ததோற் சேவை என்பதையும் கொள்க.
இறைவன் இருக்கிறானா இல்லையா எனும் பட்டிமண்டபங்கள்
இன்றளவும் என்றளவும் நடந்தவாறே தானிருக்கும். அவை நடக்கட்டும்! இறைவன் எத்தன்மையன்
என்பதை நாமறிவதும் அப்பாலிருக்கட்டும். நம்மை அறிவோம் முதலில்! அதற்கு ஆலயங்கள்
உற்ற துணைவனாய் இருக்கும். இறைவனை ஆராதிப்பதுங்கூட அவசியமில்லை. ஆலயம் செல்வீர்!
அதன் அமைதியின்கண் மனம் கொள்வீர்! பின் மனம் தெளியும்!! தெளிந்த ஓடையில் எல்லாம்
தெரியும் தெளிவாய்!!
தெளிந்த ஓடையில் எல்லாம் தெரியும் தெளிவாய்!! பின் தானே
தெரிவான் இறைவனும்!!
அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்
0 comments:
Post a Comment