Thursday, March 13, 2014


சேக்கிழார் பிறந்த குன்றத்தூரில் அவருக்காக அமைக்கப்பட்ட மணிமண்டபத்துக்கு நாள்தோறும் ஏராளமானோர் வருகைப் புரிந்து வருகின்றனர்.

கி.பி.12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் சேக்கிழார். குன்றத்தூரில் பிறந்த இவர், சோழமன்னன் இரண்டாம் குலோத்துங்கனின் ஆட்சிக்காலத்தில் சோழநாட்டின் தலைமை அமைச்சராக இருந்தவர்.

இவர் தமிழில் உள்ள புகழ்பெற்ற நூல்களில் ஒன்றாக விளங்கும் பெரியபுராணத்தை இயற்றியவர்.

சேக்கிழாரைச் சிறப்பிக்கும் வகையில் சேக்கிழார் பிறந்த குன்றத்தூரில் கடந்த 2011-ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் ஒரு ஏக்கர் பரப்பளவில் ரூ.2 கோடி செலவில் சேக்கிழார் மணிமண்டபம், தியான மண்டபம், நூலகம் ஆகியவை அமைக்கப்பட்டது.

குன்றத்தூர் தெய்வ சேக்கிழார் அறக்கட்டளை, இந்த மணிமண்டபத்தை தற்போது பராமரித்து வருகிறது.

மணிமண்டபம் அமைந்துள்ள வளாகம் முழுவதும் அழகிய செடிகளாலும், பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள மணிமண்டபத்தில் சேக்கிழார் உருவச் சிலை மற்றும் அவரது வாழ்க்கை குறிப்புகளும் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.

இங்கு தினமும் தேவார திருமுறைப் பாடல்கள் ஒலிக்கப்பட்டும், கண்கவர் பூக்களால் அலங்கரிக்கப்பட்டும் உள்ளதால் இங்கு வந்தால் மன அமைதி கிடைப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக, இந்த மணிமண்டபத்துக்கு வரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து உள்ளது.

மணிமண்டபம் அருகில் உள்ள தியானமண்டபத்தில் தினமும் காலை, மாலை எனஇரு வேளைகளில் வேதாந்திர மகரிஷியின் தியானம் மற்றும் உடற்பயிற்சிகள் இலவசமாகக்  கற்றுக்கொடுக்கப்படுகின்றன.

இந்த மணிமண்டபம் காலை 5 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மற்றும் மாலை 4.30 மணிமுதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கிறது. 

தினமணி 

0 comments:

Post a Comment