ஒரிஸ்ஸா மாநிலத்தில், மஹேந்திரகிரி என்னும் இடத்தில் அமைந்துள்ளது புவனேஸ்வரி தேவியின் ஆலயம். சக்தி பீட வரிசையில் 23வது பீடமாக விளங்கும் இது, அன்னையின் உடற்கூறுகளில் மூளைப் பகுதி விழுந்த இடமாகக் கருதப்படுகிறது. மஹேந்திரகிரியில் காட்சியளிக்கும் அன்னையின் திருநாமம் புவனேஸ்வரி.
சென்னை - கொல்கத்தா ரயில் தடத்தில் மந்தஸô ரயில் நிலையத்திலிருந்து வடமேற்கே மலையடிவாரத்தில் காட்சி அளிக்கின்றது இத்திருத்தலம். இந்த மலையின் உயரம் சுமார் 1,501 மீட்டர். இங்கிருந்து கிழக்கில் 26 கி.மீ தொலைவில் கடல் பரப்பு தென்படுகிறது. இந்தக் குன்றில் குந்திதேவி, யுதிஷ்டிரர், அர்ஜுனன், பீமன் ஆகியோருக்கு தனிக் கோயில்கள் உள்ளன. குந்திதேவி கோயிலில் கோகர்கணேஸ்வரர் என்ற ஓர் அதிசய லிங்கத்தையும் தரிசிக்கலாம்.
வட கர்நாடகத்தின் கோகர்ணத்தில் உள்ள ஆத்மலிங்கம் போல் இந்த லிங்கத்தின் முடிபாகம் சற்றே சாய்ந்து கோணலாக பசுவின் காது போல் உள்ளது. இதன் துளையில் குடம் குடமாக நீரை விட்டாலும் நிரம்புவதில்லை. நீர் போகும் வழியும் தெரிவதில்லை. மகாசிவராத்திரியை ஒட்டி இங்குள்ள மலைவாழ் மக்கள், பெருந்திருவிழா ஒன்றை நடத்தி ஈசனை வழிபடுகின்றனர்.
மலை உச்சியில் இப்படி பல சந்நிதிகள் இருந்தும், தேவி தொடர்புடைய பீடம் அங்கு இல்லை. எனவே முன்னொரு காலத்தில் இங்கே தேவியின் ஆலயம் தோன்றி, மறைந்து போனதாக வரலாறு கூறுகிறது. மஹேந்திரகிரியின் சிகரத்தில் அம்மனின் மூளைப் பகுதி விழுந்த மலையடிவாரத்தில் முற்காலத்தில் தேவி கோயில் ஒன்று எழுப்பப்பட்டதாம். அதில் குடிகொண்டு இருந்த அன்னையின் திருநாமம் புவனேஸ்வரி. இந்தக் காட்டுக் கோயில், காலவெள்ளத்தால் சிதைந்து புதர் மண்டி, முற்றிலுமாக மறைந்துவிட்டது. எனினும் அங்குள்ள பழங்குடி மக்கள் அந்த தேவியை ஸ்தம்பேஸ்வரி மற்றும் கம்பேஸ்வரி என்ற பெயர்களில் வழிபட்டனர்.
ஒருமுறை அசுரர்களை வென்ற தேவர்கள் வெற்றி மிதப்பில் இருந்தபோது, பூமிக்கும் ஆகாயத்துக்கும் இடையே பிரகாசமான ஒளி தோன்றியது. தேவர்கள் அந்தப் போரொளியை அருகில் சென்று கவனித்தனர். அதற்குள் அந்த ஒளி ஒரு தேஜோமய உருவமாகி, ஒரு சிறு துரும்பைக் கிள்ளிப்போட்டு அதை இயன்றால் அழிக்கச் சொன்னது. வாயுவினால் அதை அசைக்கக்கூட முடியவில்லை.
அக்னியால் எரிக்க முடியவில்லை. முடிவில் அவர்கள் தங்கள் தலைவன் தேவேந்திரனை அனுப்பி வைத்தனர். தேவேந்திரன் மிக்க பணிவுடன், தாங்கள் யார் என்று தெரியவில்லையே என்று கேட்டான். அப்போது அழகான பெண்ணுருவம் ஒன்று அவன் முன் தோன்றியது. அவள் இந்திரனிடம் நீங்கள் கண்ட ஒளி பிரம்ம ஸ்வரூபம். இந்தப் பிரபஞ்சத்துக்கும் எல்லாவற்றுக்கும் ஆதாரமாக இருப்பது பிரம்ம ஸ்வரூபம் தான் என்றாள். அன்னை இப்படி தன்னை வெளிக்காட்டிய ரூபமே தேவி புவனேஸ்வரி.
வெள்ளிமணி , தினமணி
0 comments:
Post a Comment