Sunday, June 29, 2014




இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் நினைவுச் சின்னம்

புதுவைக்கு 45 கி.மீ. தொலைவில் உள்ளது கடப்பாக்கம். துறைமுகம் உள்ள சிறிய நகரம் இது. ஊருக்கும் கடலுக்கும் இடையே அகண்டதோர் உப்பங்கழி உள்ளது. இந்த உப்பங்கழியை இன்றும் காணலாம். அந்த இடைக்கழியைக் கருத்தில் கொண்டே அப்பகுதி "இடைக்கழிநாடு' என்று முற்காலம் முதல் இன்றுவரை வழங்கப்படுகிறது. அங்குள்ள சிற்றூராகிய நல்லூரில் பிறந்து வாழ்ந்தவர்தான் புலவர் நத்தத்தனார். இதனால் இவர் "இடைக்கழிநாட்டு' நல்லூர் நத்தத்தனார் என்றே அழைக்கப்பட்டார்.

இந்த இடைக்கழி நாட்டுக்கு மேற்கே இருந்தது ஓய்மா நாடு. இதை குறுநில மன்னனான நல்லியக்கோடன் ஆண்டு வந்தான். நல்லியக்கோடன் கடையெழு வள்ளல்களுக்கு ஒப்பாக பாணர்களுக்கும், புலவர்களுக்கும் வரையாறு வாரி வழங்கும் வள்ளலாகத் திகழ்ந்தான்.

புலவர் நத்தத்தனார் இசை நூல்களை நன்கு கற்றறிந்தவர். யாழ் போன்ற இசைக் கருவிகளின் நுணுக்கங்களைப் பயின்றவர். ஒரு நாள் ஓய்மா நாட்டுக்குச் சென்று, வேந்தன் நல்லியக்கோடனைப் புகழ்ந்துபாடி பரிசில் பெற்று வந்தார். திரும்பி வரும் வழியில் எதிர்ப்பட்ட ஒரு பாணனை ஆற்றுவிக்கும் வண்ணம் அவர் பாடிய அரிய பாடல்களைக் கொண்டதே, சிறுபாணாற்றுப்படை!

அந்த நல்லூர் நன்மக்கள் தங்கள் புலவருக்கு சிலை எடுத்து ஒரு சிறிய குடிலில் வைத்து வழபடலாயினர். இரண்டு அடி உயரமுள்ள இந்தப் புராதனமான கற்சிலை துவக்கக் காலத்தில் செய்யப்பட்டதாகத் தெரிகிறது. பின்னாளில் அதற்கொரு குடிலைக் கட்டி மக்கள் திறப்பு விழா எடுத்துள்ளனர்.

தமிழக அரசு அந்தக் குடிலையொட்டி ஓர் அழகிய நினைவுச் சின்னத்தையும் அமைத்துள்ளது. புலவர் தம் பாடல்களில் மூவேந்தர்களைப் போற்றியுள்ளதைக் குறிப்பிடும் வகையில் வில், அம்பு, புலி மற்றும் மீன்கொடிச் சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. 1992-ஆம் ஆண்டு இந்த நினைவுச் சின்னம் முனைவர் ஒüவை நடராசனார் தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அரிதாகக் கிடைத்திருக்கும் சங்கப் புலவரான இடைக்கழிநாட்டு நல்லூர் நத்ததனார் சிலையும் நினைவுச் சின்னமும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியவை. இந்த இடம் போதிய பாதுகாப்பு இன்றி விடப்பட்டுள்ளதால், தமிழ்நாடு தொல்லியல் துறை விரைவில் இந்த இடத்தைப் பாதுகாக்க முன்வர வேண்டும் என்பது நல்லூர் மக்களின் வேண்டுகோள். 

தமிழ்மணி, தினமணி, 29-06-2014

0 comments:

Post a Comment