Sunday, June 29, 2014



பேழ் கணித்தல்  - பொன். பழனிசாமி

மனிதனின் நெஞ்சாங் கூட்டில் இறை ஒளி விளங்குகின்ற போது அருட்கவிதை சுரக்கின்றது. மெய்யடியார்கள் ஆயினும் அவர்கள் உள்ளத்தில் எப்போதும் அருள் ஊறும் கவிதைகள் சுரப்பதில்லை. உலக வாழ்க்கை முயற்சிகளில் தோய்ந்து, பசிக்கும் பிணிக்கும் ஆட்பட்டு உடல் ஓம்புங்காலங்களில் மனத்தில் அருட்கவிதைகள் பீறிட்டு வருவது அரிதாகும். இறை ஒளி அவர்கள் உள்ளத்தில் நிறைந்திருக்க வேண்டும். அவர்கள் உள்ளம் இறைவனைப் பற்றிநிற்க வேண்டும். இரண்டும் ஒத்த காலத்தே அருட்கவிதைகள் ஊறிவரும்.

சமயக் கோட்பாட்டின் வழி நின்று கூறுவதானால், ஆன்ம உணர்வு மறைந்து இறையுணர்வு மேல் எழும் போது, சிவனும் சீவனும் இரண்டறக் கலப்பில் ஆழ்ந்துவிடும் அநுபூதி நிலையில் அருட்கவிதைகள் பிரவகிக்கும். இத்தகைய அநுபூதி நிலையில் வெளிப்பட்ட அருட்கவிதைகள்தாம் அனைவரது சிந்தைக்கினிய செவிக்கினிய திருவாசகம் ஆகும்.

திருவாசகத்தின் அருட்கவிதைகள் ஊனில் ஊடுருவி உயிரில் கலந்து தெவிட்டாத மெய்யின்பம் நல்குகின்றன. திருவாசகம் ஒரு மெய்ஞ்ஞான சாதனமாகும். திருவாசகத்தின் 45-ஆவது பதிகம், "யாத்திரைப் பத்து'. இப்பதிகத்தின் ஏழாம் பாடலில் பயின்று வரும் அரிய சொல்லே "பேழ் கணித்தல்' எனும் சொல்லாகும்.

ஒரு சமயம் திருவாதவூரடிகள் தில்லையில் எழுந்தருளியிருந்த காலத்து, தம்மைப் போன்று சிவன்பால் சித்தம் போக்கிக் கனி(சி)ந்துருகும் அடியார்கள் பலரையும் கனிவுடன் அழைத்து "இப்பொல்லாத மாயப் பிறவியைவிட்டு எம்பெருமான் திருவடியை அடையுங்காலம் கனிந்துவிட்டது; வாருங்கள்' என்று அழைக்கும் பாவனையில் இப்பதிகத்தை அருளிச் செய்துள்ளார்.


""நிற்பார் நிற்க நில்லா உலகில்
நில்லோம் இனி நாம் செல்வோமே
பொற்பால் ஒப்பாம் திருமேனிப்
புயங்கன் ஆழ்வான் பொன்னடிக்கே
நிற்பீர் எல்லாம் தாழாதே
நிற்கும் பரிசே ஒருப்படுமின்
பிற்பால் நின்று பேழ் கணித்தால்
பெறுதற்கு அரியன் பெருமானே!''

பாடலின் பொருள்: நிலைபேறில்லாத இந்த மண்ணுலகத்தில் வாழவிரும்புகின்றவர்கள் இங்கேயே இருங்கள்; நாம் இனி நிற்க மாட்டோம்; அழகால் தனக்குத்தானே ஒப்பாகிய திருவுருவத்தை உடைய புயங்கனும் எம்மை ஆள்பவனுமாகிய சிவபெருமானின் பொன் போன்ற திருவடியை அடைவதற்காக நிற்கின்ற நீங்கள் அனைவரும் காலம் தாழ்த்தாமல் நின்ற நிலையிலேயே என்னுடன் புறப்படுங்கள்; வீணாகப் பலவாறாக எண்ணி மயங்கி நின்று காலம் தாழ்த்துவீர்களானால், பின் எங்கள் பெருமானின் கழல் இணைகளைப் பற்றுவது மிகவும் கடினமாகிவிடும்.

சொல்லின் பொருள்: "பேழ் கணித்தல்' என்னும் சொல் மிகவும் அரிதானதாகக் காணப்படுகின்றது. இச்சொல்லின் பொருள் "காலம் தாழ்த்துதல்' என்பதாகும். திருவாசகத்தின் பழைய உரை இச்சொல்லுக்குத் "தன்னை மிகவும் மதித்தல்' என்று பொருள் கூறுகிறது. தன்னை மிகவும் அதிகமாக வியந்து கொள்ளும் ஒருவன், இறைவன்பால் உள்ளம் செலுத்துதல் முடியாத ஒன்று என்பதே அதன் உட்பொருள்.

திருவாதவூர் வள்ளலும் தில்லைக் கூத்தனும் "நீயும் நானுமாய் ஏக போகமாய்' இருந்த அநுபூதி நிலையில் வெளிப்பட்ட அருட்கவிதை ஒன்றில் இடம்பிடித்த அரிய சொல் "பேழ் கணித்தல்'. இது பொருளடக்கம் மிகுந்து சொல்லின்பம் நல்லி நம்மை இறையின்பத்தில் திளைக்க வைக்கிறது எனின் மிகையன்று.

தமிழ்மணி, தினமணி, 29-06-2014




0 comments:

Post a Comment