Tuesday, October 6, 2015

2012 ஜனவரி-12 அன்று தினத்தந்தி நாளிதழ் தலையங்கம் தமிழகத்தின் கோயில் சொத்துகளை கமுக்கமாகத் தின்று கொழுத்து அது குறித்த எந்தக் குற்ற உணர்வும் இன்றி வாழ்பவர்களைச் சாடியுள்ளது. இத்தகையோர் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளது.
கோயில்கள் நமது பண்பாட்டுச் சின்னங்கள், அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்ற உண்மையான அக்கறையுடன் இது குறித்து எழுதிய தினத்தந்திக்கு நமது பாராட்டுக்கள்.

எல்லா கோவில்களிலும் செய்யுங்கள்

தமிழ்நாடு பகுத்தறிவு பாசறை என்று சொல்வார் உண்டு. ஆனால் பக்தியுள்ளவர்கள் நிறைந்த பூமி தமிழ்நாடு என்பதை யாரும் மறுக்கமுடியாது. பண்டைய காலத்திலேயே `கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்றும், `கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்று சொல்வார்கள். அந்த வகையில், ஒவ்வொரு ஊரிலும் ஒரு கோவில் மட்டும் அல்ல, சிறிதும் பெரிதுமாக பல கோவில்கள் இருக்கின்றன. மூதாதையர்கள் எல்லாம் கோவில்களை தங்கள் சொந்த வீடு போலவும், அங்கு குடியிருக்கும் தெய்வங்களை தங்களை வழி நடத்தும் குடும்ப பெரியவர்கள் போலவுமே கருதினர். அம்மனுக்கு நகை செய்து போட்டுப்பார்ப்பதில் பெரும் ஆனந்தம் கொண்டனர். தங்கள் சொத்துக்களில் ஒரு பகுதியை கோவில்களுக்கு எழுதி வைத்தனர். ஆனால் அவர்களெல்லாம் என்ன நோக்கத்துக்காக இந்த சொத்துக்களையெல்லாம் எழுதி வைத்தார்களோ, அந்த நோக்கம் பல கோவில்களில் நிறைவேறவில்லை என்பதுதான் வேதனைக்குரியதாக இருக்கிறது.

பல கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பில் இருக்கின்றன. பல நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டு, குத்தகை பாக்கியால் கோவில்கள் வருமானம் இல்லாமல் தவித்துக்கொண்டிருக்கிறது. கோவில் கட்டிடங்களை வாடகைக்கு எடுத்தவர்கள், வாடகையை கொடுக்காமல் டிமிக்கி கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆக, அந்தகாலத்து பெரியவர்கள் எதற்காக கோவிலுக்கு தங்களது சொத்துக்களை எழுதி வைத்தார்களோ, அந்த நோக்கம் இப்போது நிறைவேறவில்லை. தமிழ்நாட்டில் திருக்கோவில்கள், மடங்களை சேர்த்து, 38 ஆயிரத்து 481 இந்து சமய மற்றும் சமண, சமய அறநிறுவனங்கள் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கின்றன. இந்த கோவில்கள் மற்றும் மடங்களுக்கு, 4 லட்சத்து 78 ஆயிரத்து 462 ஏக்கர் நஞ்சை, புஞ்சை, மானாவாரி நிலங்களும், 22 ஆயிரத்து 599 கட்டிடங்களும், 33 ஆயிரத்து 627 மனைகளும் உள்ளன. இவைகளெல்லாம் வாடகைக்கும், குத்தகைக்குமே விடப்பட்டுள்ளன.

என்னதான் `சிவன் சொத்து குலநாசம்’ என்று சொன்னாலும், என்னதான் `அரசன் அன்றுகொல்வான், தெய்வம் நின்று கொல்லும்’ என்று சொன்னாலும், கோவில்களுக்கு சொந்தமான நிலங்களுக்கு மட்டும், குத்தகையும் சரியாக வருவதில்லை, வாடகைகளும் சரியாக வழங்கப்படுவதில்லை. இந்து சமய அறநிலையத்துறை என்னென்னவோ முயற்சிகள் எடுத்தும், எதுவும் சரியாக இல்லை. கட்டிடங்கள், மனைகளின் வாடகையை கேட்டால் தலை சுற்றுகிறது. இந்த வாடகைக்கும், இவ்வளவு குறைந்த குத்தகைக்கும் விடுவதற்கு பதிலாக, தர்மத்துக்கே விட்டுவிடலாம். அந்த அளவுக்கு குறைவான வாடகையும், குத்தகையும் இருந்தாலும், அதைக்கூட, சரியாக செலுத்தாதவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நல்லமுறையை செயல்படுத்துகிறார்கள். வாடகை பாக்கி வைத்திருப்பவர்களின் பெயர்களோடு, அவர்கள் எவ்வளவு பாக்கி வைத்திருக்கிறார்கள்? என்ற விவரங்களையெல்லாம் கோவிலில் பெரிய போர்டு வைத்திருக்கிறார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்கள் எல்லாம் இந்த போர்டை பார்த்து, `அடப்பாவமே’ இவ்வளவு குறைந்த வாடகையா? அதைக்கூட கொடுக்காமல் பாக்கியா? என்று கோபத்தோடு கூறிவிட்டு செல்கிறார்கள்.
இதே முறையை எல்லா கோவில்களிலும் நடைமுறைபடுத்தவேண்டும். கோவில் சொத்துக்களில் யார், யார்? பாக்கி வைத்திருக்கிறார்கள் என்பதை எல்லா கோவில் முகப்பிலும் பெரிய பட்டியலாக வைத்து விளம்பரப்படுத்த வேண்டும். அரசுக்கு சொந்தமான இந்து சமய அறநிலையத்துறை இந்த பாக்கி விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து, நியாயமான வாடகை, நியாயமான குத்தகையை நிர்ணயிக்க வேண்டும். கோவில் நிலங்கள் மற்றும் கோவில் கட்டிடங்கள் விஷயத்தில் நீங்கள் எடுக்கும் எல்லா நடவடிக்கைக்கும், பக்தர்கள் உங்களோடு நிற்கிறார்கள் என்று கோவில் கட்டிடங்களின் வாடகையை பார்த்து மனம் வெதும்பிய பக்தர் ஒருவர் கூறினார்.

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில் நிலங்கள் நமக்கு தெரிகிறது. ஆனால், இந்த கட்டுப்பாட்டிலே இல்லாத எண்ணற்ற கிராமிய கோவில்களின் பெயரில், முன்னோர்கள் எழுதி வைத்த சொத்துக்களையெல்லாம் இன்று யார், யாரோ அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். அவைகளையும் உடனடியாக கணக்கெடுத்து, அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இறை பக்தி உள்ள முதல்-அமைச்சர் ஜெயலலிதா நிச்சயமாக இதற்கு உத்தரவிடுவார். இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் மூ.ராசாராம் அதை உறுதியாக செயல்படுத்துவார் என்ற நம்பிக்கை பக்தர்களுக்கு இருக்கிறது. கோவில் நிலம், கட்டிடங்கள் என்றால் இளக்காரமாக யாரும் இனி நினைக்கக்கூடாது. 


0 comments:

Post a Comment