Monday, October 12, 2015

திருநெல்வேலி நகரத்தின் மையப் பகுதியில் சுவாமி நெல்லையப்பர் கோயில் உள்ளது. இக்கோயில் 1300ஆண்டுகள் பழமை வாய்ந்தது!
 இந்த ஆலயம் தல புராணப்படி முதலில் மணவை என்றழைக்கப்பட்ட மணபடை வீட்டினை ஆட்சி செய்த "முழுதுங்கண்ட இராமக்கோன்' என்ற பாண்டிய மன்னராலும், பின்னர் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் கொற்கையை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த "நின்ற சீர் நெடுமாற பாண்டியன்' (கூன் பாண்டியன்) என்ற மன்னராலும் கட்டப்பட்டது. அதன் பின்னரும் இப்பகுதியை ஆண்ட பல மன்னர்களும், மற்றும் தனவான்களும் பல புதிய மண்டபங்களைக் கட்டியதுடன், கோயிலைப் புனரமைத்தும் உள்ளனர்.
 ஆரம்பத்தில் சுவாமி நெல்லையப்பர் கோயில், காந்திமதி அம்மன் கோயில், என்று இரண்டும் தனித்தனியாக விளங்கின. பின்னர் 1647இல் "வடமலையப்ப பிள்ளையன்' என்பவரால் சங்கிலி மண்டபம் கட்டப்பட்டு இரண்டும் இணைக்கப்பட்டது.
 850அடி நீளமும் 756 அடி அகலமும் கொண்டு 14 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. சுவாமி சந்நிதியில் 3 பிரகாரங்களும் அம்மன் சந்நிதியில் 1 பிரகாரமும் உள்ளது. முதலாம் மாறவர்மன் குலசேகரன் (கி.பி.1258-1308) என்ற மன்னன் கோயிலின் மதில் சுவரை கட்டியுள்ளார். நடராஜருக்கு உரிய ஐந்து சபைகளில் தாமிர சபை இந்த ஆலயத்திற்குள் அமைந்துள்ளது. பிரகாரங்களில் மேலும் பல சந்நிதிகளும் உள்ளன.
 இங்குள்ள இசைத்தூண்களும், சிற்பங்களும், கற்தூண்களும், அலங்கார மரவேலைப்பாடுகளும், மற்றும் பெரிய நந்தியும் பண்டைய பெருமையை பறைசாற்றுபவை ஆகும்.
 
இசைத்தூண்கள்!
 சுவாமி கோயிலில் நெல்லையப்பர் சன்னிதிக்கு செல்லும் வழியில் "மணி மண்டபம்' அமைந்துள்ளது! இந்த மண்டபம் நின்ற சீர் நெடுமாற பாண்டியனால் கட்டப்பட்டது. இங்குதான் தட்டினால் பலவகை இசைக்கருவிகளின் ஓசை வரும் கற்தூண்கள் உள்ளன.
 இந்த மண்டபத்தில் 10 தூண் கூட்டங்கள் உள்ளன. ஒரு தூண் கூட்டம் என்பது ஒரே பெரிய கல்லில் செய்யப்பட்டது! மத்தியில் ஒரு பெரிய தூணும், சுற்றிலும் உருவத்திலும் உயரத்திலும் மாறுபட்ட பல சிறிய தூண்களும் கொண்ட தொகுப்பாக இருக்கும்! இந்த சிறிய தூண்களைத் தட்டினால், ஒவ்வொரு தூணிலும் ஒவ்வொரு வகையான வாத்ய ஒலி  வரும்! தூண்கள்தோறும் ஸ்வரங்கள் மாறுபட்டு இருக்கும்! அனைத்துத் தூண்களும் அலங்கார சிற்ப வேலைப்பாடுகளுடன் கருமை நிறத்தில் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும்!
 இவற்றில் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள இரண்டு தூண் கூட்டங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை! இந்த தூண்கூட்டத்தின் நடுவில் ஒரு பெரிய தூணும் சுற்றிலும் 48 சிறிய தூண்களும் உள்ளன! இவை மற்றவைகளைவிட அற்புதமான சிற்ப வேலைப்பாடுகளுடன் இனிமையான ஓசையையும் தருபவையாகும்!  
 இந்த மண்டபத்தில் மொத்தம் 161 சிறிய தூண்கள் உள்ளது. பலவகையான வாத்யங்களின் ஓசையை உண்டாக்கும் தூண்கள் உள்ளன. இது "சர்வ வாத்ய மண்டபம்' என்றும் அழைக்கப்படுகிறது!
 இத்தகைய தூண்களின் தொகுப்புத் தூண்கள் அம்மன் கோயிலிலும் இரண்டு உள்ளது. இவை நம் முன்னோர்களின் சிற்பத் திறனுக்கும், இசைத்திறனுக்கும் ஒருமித்த சான்றாக உள்ளது!

சிற்பங்கள்!
முழுதும் கண்ட  ராமக்கோன் சிலை
 
 சுவாமி கோயிலில் நந்தி மண்டபத்தை சுற்றி அமைந்துள்ள ரதி,மன்மதன், குறவன்,குறத்தி, பவளக்கொடி, வீரபத்திரர், அர்ச்சுனன் ஆகிய சிலைகளும், சங்கிலி மண்டபத்தில் உள்ள வாலி, சுக்ரீவன், பீமன், அர்ச்சுனன், புருஷாமிருகம், குரங்கு ஆகிய சிற்பங்களும், "மூன்றாவது பிரகாரம்' எனப்படும் வெளி பிரகாரத்தில் எதற்கு பகுதியில் உள்ள தூண்களில் காணப்படும் இந்த கோயிலை கட்டிய பல மன்னர்களில் சிலைகளும், இந்தக் கோயிலில் உள்ள பல சிற்பங்களில் குறிப்பிட்டு சொல்லத்தக்கவையாகும்.

மண்டபங்களும், கற்தூண்களும்!
சங்கிலி மண்டபம்
 
 இக்கோயிலில் ஊஞ்சல் மண்டபம், மகா மண்டபம், நவகிரக மண்டபம், சீவலி மண்டபம், சோமவார மண்டபம், நடராஜர் நடன மண்டபம், வசந்த மண்டபம், என பல மண்டபங்கள் உள்ளன. இம்மண்டபங்களில் பல வகைகளில்  அமைந்த நூற்றுக்கணக்கான தூண்கள் உள்ளன. அவற்றில் சோம வார மண்டபத்தில் உள்ள 78 திண்ணிய தூண்கள் உள்ளன. இவை  மிகுந்த வேலைப்பாடுடன் கூடியவை. இங்கு கல் உத்திரங்களும், வளைவுகளும் மிகவும் சிறப்பானவை. மர உத்திரங்களில் காணப்படும் கவின் மிகு அழகினை இந்த கல் உத்திரங்களில் காணமுடியும்! இம்மண்டப முகப்பில் கோபுர வடிவிலான அழகிய தூண்களும் உள்ளது.
 நடராஜர் நடன மண்டபத்தின் மேல் கூரையில் அமைந்துள்ள கல் வளைவுகளும், யானைமேல் இருப்பது போன்ற தூண்களும் வியப்பளிக்கிறது!
 சங்கிலி மண்டபம், நந்தி மண்டபம், ஊஞ்சல் மண்டபம், மகா மண்டபத்திலும் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய பெரிய தூண்கள் காணப்படுகின்றன.

அலங்கார மர வேலைப்பாடுகள்!
 சுவாமி கோயில், அம்மன் கோயில் இரண்டிலும் முகப்பில் உள்ள அம்பலங்களும் மர அலங்கார வேலைப்பாடுகள் மிகுந்தவை! சித்திர வேலைப்பாடமைந்த மரச்சிற்பங்களை தட்சிணாமூர்த்தி சந்நிதி முகப்பிலும் காணலாம்.
 தாமிர சபையில் நடன மண்டபத்தில் மரத்தினால் சித்தரிக்கப்பட்ட வேலைப்பாடுகள் உள்ளன.
இசைத்தூண்கள்
 
மாகாளை(பெரிய நந்தி)!
சுவாமி கோயிலில் சுதையினால் அமைந்திருக்கும் பெரிய ரிஷபம் மிகுந்த அழகுடன் தோற்றமளிக்கிறது!

மூன்றாம் பிரகாரம் எனப்படும் பெரிய பிரகாரம்!
பிரகாரம்
 
மிகவும் அழகானது! தெற்கு வடக்காக 387 அடி நீளமும், 42 அடி அகலமும் கொண்டது! கிழக்கு மேற்காக 295அடி நீளமும் 40அடி அகலமும் கொண்டது! நடுவில் 17 அடி அகலத்தில் நடைபாதையும், அதன் இருபுறமும் தாழ்வாரங்களும் உள்ளன! இந்நடைபாதையில் நடக்கும் அனைவரும் நிச்சயம் பண்டைய மக்களின் கடின உழைப்பையும் திறமையையும் நினைக்காமல் இருக்க முடியாது!
நெல்லையப்பர்
 
பெரியநந்கி
 நம் நாட்டில் வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத, கண்களால் கண்டு உணர வேண்டிய அற்புதமான வேலைப்பாடுகளுடன் கூடிய பல சிற்பங்களும், கட்டிடங்களும் அலங்கார வேலைப்பாடுகளும் பரவலாக பல இடங்களில் உள்ளன! அவற்றில் நெல்லையப்பர் கோயிலும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்! படித்து உணர முடியாத கண்டு களிக்க வேண்டிய அழகிய கலைப்பொக்கிஷங்கள் இங்கு உள்ளன!
நன்றி :- தினமணி

0 comments:

Post a Comment