Wednesday, November 25, 2015


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகைதீப திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 2,668 அடி உயர மலை உச்சியில் மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது. இதனை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்குவது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில். இங்கு நடைபெறும் கார்த்திகைதீப திருவிழா தமிழ்நாட்டில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றாகும். முக்கியத்துவம் வாய்ந்த இந்த திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான கார்த்திகைதீப திருவிழா கடந்த 16–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கார்த்திகைதீப திருவிழாவை முன்னிட்டு கிராமங்களில் இருந்தும், வெளிமாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து குவிந்தனர். இதனால் திருவண்ணாமலையில் உள்ள மடங்கள், சத்திரங்கள், தங்கும் விடுதிகள் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பியது.

கார்த்திகைதீப திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகாதீபம் இன்று ஏற்றப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் அதில் இருந்து பஞ்சமுகதீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து பக்தர்களின் தரிசனத்திற்காக பரணி தீபம் வெளியே எடுத்து வரப்பட்டது. அப்போது கோவில் வளாகத்தில் கூடியிருந்த பக்தர்கள் ‘அண்ணாமலைக்கு அரோகரா’ என்று பக்தி கோஷம் எழுப்பினர். தொடர்ந்து கோவில் பிரகாரத்தை சுற்றி எடுத்துவந்து வைகுந்த வாயில் வழியாக மலைக்கு பரணிதீபம் காட்சி கொடுத்தது. அதன்பின்னர் அம்மன் சன்னதியிலும் பஞ்சமுக தீபம் ஏற்றப்பட்டது. 

பின்னர் கோவில் வளாகத்தில் கூடியிருந்த பக்தர்களின் தரிசனத்திற்காக பரணி தீபம் எடுத்து வரப்பட்டு கால பைரவர் சன்னதியில் வைக்கப்பட்டது. பரணிதீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து மாலையில் மகாதீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கின. மகாதீப தரிசனத்திற்கு அனுமதி பெற்ற பக்தர்கள் பகல் 2 மணி முதல் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதேநேரத்தில் காலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர். இதனால் கிரிவலப்பாதை முழுவதும் பக்தர்கள் தலையாகவே காட்சியளித்தது. 

கிரிவல பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானமும் வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் மகாதீபத்தை நேரில் தரிசிப்பதற்காக மலை உச்சிக்கு ஏறிய வண்ணம் இருந்தனர். அங்கு பக்தர்களின் பாதுகாப்புக்காக கமாண்டோ படைவீரர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். ஆளில்லாத குட்டி விமானம் மூலம் பக்தர்கள் கூட்டம் கண்காணிக்கப்பட்டது. கோவிலில் குவிந்திருந்த பக்தர்கள் மகா தீபத்தை காண ஆவலுடன் காத்திருந்தனர். கோவிலில் இருந்து மாலை 5.30 மணிக்கு மேல் பஞ்சமூர்த்திகள் வெளியே வரத்தொடங்கினர். விநாயகர், முருகர், அண்ணாமலையார், அம்மன், சண்டிகேஸ்வரர் என ஒவ்வொருவராக சன்னதியில் இருந்து தீப மண்டபத்தில் எழுந்தருளினர்.

அதைத்தொடர்ந்து வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே காட்சியளிக்கும் அர்த்தநாரீஸ்வரர் வருகையை பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். கிரிவலம் சென்ற பக்தர்களும் மலையை நோக்கி நின்றனர். சரியாக மாலை 5.55 மணிக்கு அர்த்தநாரீஸ்வரர் ஆடியபடியே வெளியேவந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். உடனே சாமி சன்னதி முன்பு அகண்ட தீபம் ஏற்றப்பட்டது. அதே நேரத்தில் 2, 668 அடி உயர மலை உச்சியில் சரியாக மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்பட்டது. அப்போது கோவிலில் கூடியிருந்த பக்தர்களும், கிரிவலப்பாதையில் இருந்த பக்தர்களும் ‘அண்ணாமலைக்கு அரோகரா’ என்று கோஷமிட்டனர். 

கோஷம் திருவண்ணாமலை நகரம் முழுவதுமே எதிரொலித்தது. மகாதீபம் ஏற்றப்பட்டதும் கிரிவலம் சென்ற பக்தர்கள் தாங்கள் நின்ற இடத்திலேயே கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். பொதுமக்கள் தங்கள் வீட்டு மாடிகளில் மலையை நோக்கி நின்று விளக்கு ஏற்றி தேங்காய் உடைத்து வழிபட்டனர். வீடுகளின் முன்பும் அகல்விளக்கு ஏற்றினர். திருவண்ணாமலை நகரமே ஒளிவெள்ளத்தில் ஜொலித்தது.

தினத்தந்தி

0 comments:

Post a Comment