கடவுளரை உருவாக்கும்
By சாருகேசி
First Published : 26 July 2015 04:31 PM IST
சென்ற வாரம் ஒரிசா மாநிலம் புரி புண்ணிய úக்ஷத்திரத்தில், வழக்கம் போல ரத யாத்திரை விழா நடைபெற்றது. கோயில் வடிவில் அமைக்கப்பட்ட மூன்று தேர்கள், கிராண்ட் ரோடில் உலா வந்தன. ஜகந்நாதர், அவருடைய உடன்பிறப்புகளான பலபத்ராவுடனும், தேவி சுபத்ராவுடனும் கோயிலில் இருந்து புறப்பட்டு, தங்கள் அத்தை வீட்டுக்குத் தத்தம் ரதங்களில் யாத்திரை போகிற நிகழ்ச்சி. புரி ஜகந்நாதர் கோயில் 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
திருத்தேர்களின் விவரங்களைச் சற்றுப் பார்ப்போம்:
ஜகந்நாதரின் தேர் 45 அடி உயரம். சுபத்ராவின் தேர் 43 அடி உயரம். பலபத்ராவின் தேர் 44 அடி உயரம். இந்த மூன்று தேர்களும் முக்கிய விசுவகர்மாக்கள் எனப்படும் 75 தெய்வத் திருப்பணித் தச்சர்களால் உருவாக்கப்படுகின்றன. இவர்களை மேற்பார்வை செய்யும் மகா கலைஞர்கள் பெயர்: பிஜய் மொஹாபாத்ரா, கிருஷ்ண சந்திர மஹாராணா மற்றும் நிருசிங்க மொஹாபாத்ரா. அக்ஷய திருதியை அன்று பணியைத் தொடங்கி, ஐம்பத்தெட்டே நாட்களில் தேர்களை முடித்தாக வேண்டும்
இந்தத் தலைமைத் தச்சர்கள், பல தலைமுறைகளாகத் தொடர்ந்து இந்தப் பணியைச் செய்து வருகிறார்கள். அவர்கள் வேலையே இதுதான். மூன்று முக்கிய தச்சர்கள் ஒவ்வொருவரின் கீழும் 25 தச்சர்கள் பணி செய்வார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஜகந்நாதரின் பெரிய தேரை உருவாக்கும் பொறுப்பை பிஜய் ஏற்றுக்கொள்வார். இந்தத் தேரின் பெயர் நந்திகோஷ. நிருசிங்கரிடம் வேலை செய்பவர்கள் பலபத்ராவின் தாளத்வஜ தேரை உருவாக்குகிறார்கள்.
எண்பத்து மூன்று வயதான மூத்த தச்சுக் கலைஞரின் குழு, தேவி சுபத்ராவின் தேவதலான தேரை உருவாக்குகிறார்கள். புரி கோயிலுக்குள்ளேயும் இந்த மூன்று கலைஞர்களும்தாம் இந்தக் கடவுளரின் மரச் சிற்பங்களை வழிபாட்டுக்கு உருவாக்கியிருக்கிறார்கள்.
ரத யாத்திரையின் வயது பல நூற்றாண்டுகள் என்றாலும், பாரம்பரியமாகத் தேர் உருவாக்கும் வழிமுறை மாறவே இல்லை. "" இந்த ஆண்டு ரத யாத்திரை மிகச் சிறப்பானது. ஏனென்றால், நவகளேபரா எனப்படும் புதிய மரச் சிற்பங்களைத் தயாரித்திருக்கிறோம். முன்பெல்லாம், தேர்களின் சில பாகங்களை மறுபடி பயன்படுத்த வைத்திருப்போம். மீதி பாகங்களை பக்தர்களுக்கு விற்றுவிடுவோம். இந்த ஆண்டு இந்தத் தேர்களை, எந்தப் பழைய பாகங்களும் சேர்க்காமல், முற்றிலும் புதிதாக உருவாக்கினோம். ஏனென்றால், பழைய சிலைகளோடு சேர்த்து, பழைய தேர்களின் சில பாகங்களையும் புரி ஜகந்நாதர் கோயிலுக்குள், பிரம்ம பாவர்த்தன் சடங்குக்குப் பின்னர் புதைத்துவிட்டோம்'' என்கிறார் கிருஷ்ணா.
இவர் 15 வயதாக இருக்கும்போதே தன் தந்தையிடமிருந்து இந்தக் கலையைக் கற்றார். இந்த ஆண்டு திருத்தேரின் முட்டுக்கட்டைகள் முன்பு இருந்ததைவிடப் பெரிதாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. லட்சக் கணக்கான பக்தர்கள் இழுக்கும் மரத்தால் ஆன தேருக்கு, ஒரு பெரிய கட்டைதான் "பிரேக்'.
""இந்தத் தடவை 17 அடி உயரமும், 16 அங்குல அகலமும் கொண்ட மரக் கட்டைதான் மூன்று தேர்களுக்கும் பிரேக்குகளாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த பிரம்மாண்டமான தேர்களைத் தடுத்து நிறுத்த இந்தக் கட்டைகள் போதாது என்று பல தடவை கவனித்தோம். ஒரு தடவை வேகமாக தேரை இழுத்துக்கொண்டிருந்த போது, தடுத்து நிறுத்த வைக்கப் பட்ட கட்டை பயன் தராமல், ராட்சச சக்கரங்கள் அந்தக் கட்டை மீதே ஏறிவிட்டன. நல்ல காலமாக, யாருக்கும் அடிபடவில்லை. இந்த ஆண்டு இன்னும் அதிக மக்கள் நவகளேபர ரத யாத்திரையைக் கண்டு களிக்க வருவதால், நாங்கள் மூன்று தேர்களுக்கும் பெரிய பிரேக்குகளைச் செய்ய வேண்டியதாகிவிட்டது'' என்றார் 55 வயது பிஜய்.
இவர் நந்திகோஷ தேரை உருவாக்குவதில் தம் 11ஆவது வயதிலிருந்தே ஈடுபட்டு வருபவர்.
இந்தத் தேர்களில் என்ன விசேஷம் என்றால், இவற்றின் நீள, அகலங்களைக் கைகளாலேயே அளந்து கொண்டுவிடுகிறார்கள். ""நாங்கள் ஸ்கேலையோ, இஞ்ச் டேப்பையோ உபயோகிப்பதில்லை. எங்கள் முன்னோர்களும் அப்படித்தான் தம் கைகளாலேயே அளவெடுத்துத் தேர்களை உருவாக்கினார்கள்'' என்கிறார் பிஜய்.
""நந்திகோஷத் தேருக்கு 16 சக்கரங்கள். தாளத்வஜத் தேருக்கு 14 சக்கரங்கள், தேவதலான தேருக்கு 12 சக்கரங்கள் என்று இந்த மூன்று தேர்களுக்கும் மொத்தம் 42 சக்கரங்கள் தேவைப்படுகின்றன. இந்தச் சக்கரங்களை உருவாக்குவதும் மிக முக்கியமான பணி'' என்கிறார் நிருசிங்கா.
இந்தத் திருத்தேர்களை பாஸி மரத்தால் உருவாக்குகிறார்கள். ""கிட்டத்தட்ட 5000 மரக் கட்டைகள் தேவைப்படுகின்றன. "ரத கலா' எனப்படும் தேர் உருவாக்கும் பட்டறைக்கு இவை வந்துவிட்டால், நாங்கள் 70 தச்சர்களைத் தேர்ந்தெடுப்போம். அவர்கள் தேருக்கு ஏற்றபடி அவற்றை வெட்டிக் கொள்வார்கள். நாங்கள் தேர்ச் சக்கரங்களை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்துவோம். ஏனென்றால் அவை சரியான அளவுக்கு அமையாவிட்டால், பத்திரமாக நகராது'' என்கிறார் 14 வருடங்களாகத் தேர்களை உருவாக்கிவரும் நிருசிங்கா.
ஒடிசா கோயில் சிற்பக்கலையை ஒட்டி, தோன் உருவமும், சக்கரங்களும் கலைவடிவோடு உருவாக்கப்படுகின்றன. பச்சை, கறுப்பு, மஞ்சள் மற்றும் சிவப்புத் துணிகளால் எம்ப்ராய்டரி முறையில் தேரின் வெளியுருவை அலங்கரிக்கிறார்கள். பின்னர் ஒடிசாவுக்கே உரிய "பிப்ளி' வகை திரைச்சீலைகளால் அலங்கரித்து பித்தளை ப்ரேம்களைப் பொருத்துகிறார்கள்.
தங்கள் வாரிசுகள் இந்தப் பணியை மேற்கொள்ளு முன், பிஜய்யும், நிருசிங்கவும் குறைந்த பட்சம் 10 ரத யாத்திரைகளுக்காவது தேரை உருவாக்கப் போகிறார்களாம். கிருஷ்ணா சமாசாரம் வேறு. அவர் இப்போதே தம் நான்கு பேரப் பிள்ளைகளுக்குப் பயிற்சி கொடுக்க ஆரம்பித்து உள்ளார்.
""இது பாரம்பரியக் கலை. என்னவானாலும், இது தொடர வேண்டும். நாங்கள் பகவான் ஜகந்நாதன் விருப்பத்துக்குக் கட்டுப்பட்டவர்கள்'' என்கிறார்கள், கடவுளரை உருவாக்கும் இந்தக் கலைஞர்கள்.
நன்றி: டயானா சாஹு : (சன்டே எக்ஸ்பிரஸ்)
Videoslots.com.ng - YouTube Video and audio
ReplyDeleteVideoslots.com.ng · Videoslots.com.ng · Videoslots.com.ng · best youtube to mp3 converter online Videoslots.com.ng. · Videoslots.com.ng.