Sunday, August 28, 2016






பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்திப் பெருவிழாவை முன்னிட்டு, சனிக்கிழமை நடைபெற்ற கொடியேற்ற விழா.
சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவையொட்டி, காலை 10.15 மணிக்கு மூஷிக வாகனம் பொறிக்கப்பட்டுள்ள வெண்கொடி கோயிலை வலம் வந்து கொடிமரத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, சிறப்பு பூஜை நடைபெற்று கொடியேற்றப்பட்டது.

விழாவில், தினமும் உற்சவ விநாயகர் பல்வேறு வாகனங்களில் திருவீதி வலம் வருவார். 2-ஆம் நாள் திருவிழா முதல் 8-ஆம் நாள் திருவிழா வரை தினமும் காலையில் வெள்ளிக் கேடகத்தில் சுவாமி திருவீதி புறப்பாடு நடைபெறவுள்ளது.

செப்டம்பர் 1-ஆம் தேதி (6-ஆம் நாள் விழா) மாலை 6 மணியளவில் கஜமுகாசுர சம்ஹாரமும், இரவு திருவீதி உலாவும் நடைபெறும். செப்டம்பர் 2-ஆம் தேதி மயில் வாகனத்திலும், 3-ஆம் தேதி குதிரை வாகனத்திலும் சுவாமி திருவீதி உலா நடைபெற உளன. 4-ஆம் தேதி காலை சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறும். அன்று மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை சந்தனக்காப்பு அலங்காரத்தில் கற்பக விநாயகர் மூலவர் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். மாலை 4 மணியளவில் பக்தர்கள் திருத்தேர் வடம் பிடிக்கத் தேரோட்டம் நடைபெறும். இரவு யானை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெறும்.

பத்தாம் திருநாளான 5-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று காலை 9 மணியளவில் கோயில் திருக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், பகல் 12 மணியளவில் மூலவருக்கு ராட்ஷச கொழுக்கட்டை படைத்து சிறப்பு அலங்கார தீபாராதனையும், இரவு 11 மணியளவில் ஐம்பெரும் மூர்த்திகள் திருவீதி உலாவும் நடைபெற உள்ளன.

நன்றி :- தினமணி

0 comments:

Post a Comment