Sunday, August 28, 2016






திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழாவின் 6-ஆம் நாளான சனிக்கிழமை, சுவாமி வெள்ளி ரதத்திலும் வள்ளியம்மன் இந்திர வாகனத்திலும் வீதியுலா வந்து அருள்பாலித்தனர்.

கடந்த 22-ஆம் தேதி தொடங்கிய இந்தத் திருவிழாவில், தினமும் காலை, மாலை சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருதல் நடைபெற்று வருகிறது.

முக்கிய நிகழ்ச்சியாக, 6-ஆம் திருநாளான சனிக்கிழமை காலையில் கோ ரதம் வீதியுலா நடைபெற்றது. இரவில் வள்ளி, தெய்வானையுடன் சுவாமி குமரவிடங்கப்பெருமான் திருவாவடுதுறை ஆதீன மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி, சுவாமி வெள்ளி ரதத்திலும் வள்ளியம்மன் இந்திர வாகனத்திலும் வீதியுலா வந்தனர்.

நிகழ்ச்சியில், திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சார்ய சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீன முதன்மை மேலாளர் கே.கே. சுப்பிரமணியன், தென்மண்டல மேலாளர் ராமச்சந்திரன், திருச்செந்தூர் கண்காணிப்பாளர் தா.சோணாச்சலம், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

7-ஆம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை சண்முகப்பெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெறும். காலை 8.30-க்கு ஆறுமுகப்பெருமான் வெட்டிவேர் சப்பரத்தில் பக்தர்களுக்கு தரிசனம் தந்து, பிள்ளையன்கட்டளை மண்டபத்தைச் சேர்கிறார். மாலை 4 மணிக்கு சுவாமி தங்கச் சப்பரத்தில் சிவப்பு சாத்தி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

8-ஆம் திருவிழான திங்கள்கிழமை காலை 5 மணிக்கு பெரிய வெள்ளிச் சப்பரத்தில் வெள்ளைச் சாத்தி சுவாமி வீதியுலா வந்து மேலக்கோயில் சேர்கிறார். பின்னர், பகல் 12.05 மணிக்கு மேல் பச்சைக் கடைசல் சப்பரத்தில் சுவாமி பச்சை சாத்தி எழுந்தருளி வீதியுலா வந்து கோயில் சேர்கிறார். 9-ஆம் திருவிழாவான செவ்வாய்க்கிழமை இரவு சுவாமி தங்கக் கைலாய பர்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக் கமல வாகனத்திலும் வீதியுலா வருவர்.

தேரோட்டம்: திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 31-ஆம் நடைபெறுகிறது. அன்று காலை 6 மணிக்கு தேரோட்டம் தொடங்குகிறது. பிள்ளையார் ரதம், சுவாமி, அம்மன் தேர்கள் வீதிவலம் வந்து நிலை சேர்கின்றன.

நன்றி :- தினமணி

0 comments:

Post a Comment