Saturday, October 5, 2013



காக்காயோ, குருவியோ சாதாரணமாக மனிதர்களைக் கண்டால் என்ன செய்யும்? மனிதர்கள் தங்களை நெருங்கி வருவதை உணர்ந்த உடனே பெரும்பாலான பறவைகள் செய்யும் முதல் வேலை, சட்டென்று மனிதர்கள் நெருங்க முடியாத தொலைவுக்குப் பறந்து போவதுதான். 

ஆனால், திருநெல்வேலிக்குச் செல்பவர்கள், அப்படியே நாங்குநேரி தாலுகாவில் இருக்கும் கூந்தங்குளத்துக்கும் ஒரு முறை சென்று வாருங்கள். பிறகு பறவைகளைப் பற்றிய உங்கள் பார்வையும்,

 பறவைகளை மனிதர்கள் நடத்தும் விதம் சம்பந்தமான பார்வையும் தலைகீழாக மாறிவிடும். 

பறவைகளை விட்டுவிட்டுக் கூந்தங்குளம் கிராமத்தை கற்பனை செய்ய முடியாது. கிராமத்துக்குள் நுழைந்த உடனே கருவை, வேப்ப மரங்களில் மஞ்சள்மூக்கு நாரைகள் (Painted stork), நம் தலைக்கு கொஞ்சம் மேலே கை எட்டும் தூரத்தில் கூடு கட்டியிருப்பதையும், எந்த அச்சமும் இல்லாமல் தாய்ப்பறவைகள் குஞ்சுகளை பராமரிக்கும் காட்சியும் உத்தரவாதம்.

ஊரின் எந்தப் பக்கம் திரும்பினாலும், அளவில் பெரிய நீர்ப்பறவைகள் மரங்களில் உட்கார்ந்திருப்பதையும், கூடுகட்டி இனப்பெருக்கம் செய்வதையும் பார்க்கலாம்.

இப்படி மனிதர்களைக் கண்டு சற்றும் அஞ்சாமல், தொந்தரவாகக் கருதாமல் நண்பர்களாக அந்தப் பறவைகள் பாவிப்பதற்குக் காரணம், கூந்தங்குளம் கிராம மக்கள். மனிதர்களைக் கண்டு விலகிப் பறக்காத பண்பு ஒன்றே, பறவைகள் அந்த மக்களை எவ்வளவு தூரம் நம்புகின்றன என்பதற்கு நல்ல அத்தாட்சி.

அந்த ஊர் மக்கள் பறவைகளைத் தொல்லையாக நினைக்கவில்லை. பறவைகள் எழுப்பும் சப்தங்கள், இடும் எச்சம், கூட்டிலிருந்து தவறி விழும் மீன், நத்தை போன்ற அவற்றின் உணவு, பறவைக் கூடுகளில் இருந்து இயல்பாகவே வரும் ஒருவித துர்நாற்றம் போன்ற அனைத்தையும் இந்த மக்கள் தொந்தரவாகவே எடுத்துக்கொள்வதில்லை. 

"கிட்டத்தட்ட 300 வருடங்களாக எங்கள் ஊருக்கு பறவை வரத்து அதிகமாக இருக்கிறது. பறவைகள் வந்தால் மழை பெய்யும். ஊர் செழிப்பாக இருக்கும் என்பது எங்கள் ஊர் மக்களிடம் உள்ள பாரம்பரிய நம்பிக்கை” என்கிறார் 

கூந்தங்குளம் பறவைகள் சரணாலயத்தின் காப்பாளராக இருந்த பால்பாண்டி. கூந்தங்குளம் பறவை சரணாலயம் பிரபலமானதற்கு பால்பாண்டியும் ஒரு முக்கியக் காரணம். மரத்தில் இருந்து கீழே தவறி விழும் குஞ்சுப் பறவைகளை, இவர் பராமரித்து வளர்க்கிறார். 

கிராமத்துக்குள் மட்டும் 4,000 பறவைக் கூடுகள் இருக்கின்றன என்று சொல்லும் பால்பாண்டி பறவை நேசத்திற்காக மக்கள் கொடுக்கும் விலை என்ன என்பதையும் விளக்குகிறார். “மழை பெய்தால் பறவைகள் வாழும் மரத்துக்குக் கீழே மிக மோசமான வாடை அடிக்கும். வீட்டில் உட்கார்ந்து சாப்பிட முடியாது. மரத்துக்குக் கீழே எச்சமும் முள்ளும் விழுந்து கிடக்கும். தினமும் கூட்டி சுத்தப்படுத்த வேண்டும்” என்கிறார் அவர்.

“இந்த ஊர்க் குளத்தில் தண்ணீர் எடுக்கவோ, குளிக்கவோ அனுமதி இல்லை. அதனால் தண்ணீர் பச்சை நிறத்தில் இருக்கும். பறவைகள் வாழும் குளத்துக்கு தண்ணீர் வேண்டுமென்றால், பாசனத்துக்கான தண்ணீரைக்கூட அடைத்துவிடுவார்கள்.

 பறவைகளுக்கு யாராவது தொந்தரவு செய்தால், ஊர் மக்களுக்குக் கோபம் வந்துவிடும், அடித்து விரட்டிவிடுவார்கள். அந்த அளவுக்கு எங்கள் ஊர் மக்கள், இந்தப் பறவைகளை நேசிக்கிறார்கள். அதேநேரம் குளத்தில் பறவை எச்சம் விழுவதால், அது இயற்கை உரமாக மாறுகிறது. அந்தத் தண்ணீரை வயலுக்குப் பாய்ச்சினால் அதிக மகசூல் கிடைக்கும்," என்கிறார் பால்பாண்டி.

ராஜஸ்தானில் உள்ள கிச்சான், மேற்குவங்கத்தில் உள்ள ஜாக்யநகர், கர்நாடகத்தில் உள்ள கோக்கரே பெல்லூர் ஆகிய ஊர்களில் பறவைகளோடு தங்கள் வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்ளும் கிராம மக்கள் வாழ்கிறார்கள். 

இந்த ஒரு காரணத்துக்காகவே இந்த ஊர்கள் தேசிய அளவில் புகழ்பெற்றுள்ளன. இந்த ஊர்களுக்குச் சற்றும் குறைந்ததல்ல கூந்தங்குளம். தமிழகத்திலேயேகூட, பறவைகள் - மனிதர்கள் இடையே இவ்வளவு அந்நியோந்நியமான ஒரு உறவை வேறு ஊர்களில் பார்க்க முடியுமா என்பது சந்தேகம்தான். 

கூந்தங்குளம் மக்களின் இந்த ஆத்மார்த்தமான உறவு, இயற்கையோடு இணக்கமாக வாழும் மனிதர்களுடைய மூதாதைப் பண்பின் தொடர்ச்சி. பறவைகள் மீது, தங்கள் குழந்தைகளைப் போலப் பாசத்தை வெளிப்படுத்தும் மனிதர்களைக்கூடப் பார்க்க முடியும். கூந்தங்குளம் மக்கள் ஒரு படி மேலே போய், இப்பறவைகளைத் தங்கள் ரத்தஉறவுகளாகவே பார்க்கிறார்கள்.

சிறகுகளும் பறவைகளும்
 
கூந்தங்குளத்தில் ஊரின் உள்ளே உள்ள மரங்கள் தவிர, அதிகம் பறவைகளைக் காணக்கூடிய இடம் 30 ஹெக்டேர் பரப்புக் கொண்ட குளம். மணிமுத்தாறு கால்வாய் மூலம் நீரைப் பெறும் இந்தக் குளத்தில் நீர்க்கருவை மரங்கள் நிறைந்திருக்கின்றன. இங்குதான் கூழைக்கடாக்கள் கூடமைக்கின்றன. பொதுவாக ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான மாதங்கள் பறவைகள் வரும் பருவம் என்று கருதப்பட்டாலும், கடுமையான வெயிலடிக்கும் மே மாதங்களில்கூடக் கூந்தங்குளம் குளத்தில் தண்ணீரையும் பறவைகளையும் காண முடியும். 

சைபீரியா, ஜெர்மனி, லடாக் பகுதிகளில் இருந்தும், நாட்டின் இதரப் பகுதிகளில் இருந்தும் குளிர்காலத்தில் இந்தச் சரணாலயத்துக்குப் பறவைகள் வலசை வருகின்றன. தென்னிந்தியாவின் மிகப் பெரிதான இந்த நீர்ப்பறவை சரணாலயத்துக்கு, ஓராண்டில் அதிகபட்சமாக 1 லட்சம் பறவைகளும், 43 வகைகளும் வந்துள்ளது பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கூந்தங்குளத்தில் அதிகம் பார்க்கக்கூடிய பறவைகள் மஞ்சள்மூக்கு நாரைகளும், நத்தைகுத்தி நாரைகளும். இவற்றைத் தவிர கூழைக்கடா (Pelican), பூநாரைகள் (Flamingo), நீர்க்காகங்கள் (Cormorant), பட்டைத்தலை வாத்து (Barred headed goose), ஊசிவால் வாத்து (Pintailed duck), பாம்புதாரா (Darter) உள்ளிட்ட நீர்ப்பறவைகளும் குறிப்பிடத்தக்க அளவு வருகைதருகின்றன.

இந்த நீர்ப்பறவைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறப்புகொண்டவை. மஞ்சள் மூக்கு நாரை சட்டெனக் கவரும் நிறம் கொண்டது. அதன் ஆங்கிலப் பெயரே அதை விளக்கும். வங்கதேசத்தைத் தாயகமாகக் கொண்ட நத்தைகுத்தி நாரையின் அலகு பாக்குவெட்டியைப் போன்றது. 

கூழைக்கடா இந்தியாவிலேயே எடை மிகுந்த நீர்ப்பறவை. பட்டைத்தலை வாத்துதான் தென்னிந்தியாவில் காணப்படும் வாத்து இனங்களிலேயே பெரியது. மண்வெட்டி போன்ற வாயைக் கொண்ட பூநாரைகள் பார்ப்பதற்கும் வித்தியாசமாக இருக்கும்.                                                                                                      

தி இந்து, 05-10-2013

0 comments:

Post a Comment