Saturday, June 7, 2014



சிதிலமடைந்து வரும் மீன்சுருட்டி வரதராஜப் பெருமாள் கோயிலைச் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ளது முத்துசேர்வாமடம் கிராமம். இங்கு சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூதேவி, ஸ்ரீதேவி சமேத வரதராஜப் பெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

நீண்ட நாள் திருமணமாகாதவர்கள் இந்தக் கோயிலில் வந்து வேண்டிக்கொண்டால் திருமணத் தடை நீங்கும், மேலும் மனநிலை சரியில்லாதவர்கள் வந்து வேண்டிக்கொண்டால் குணமளிக்கும் சிறப்புடைய பெருமாள் இவர் என்று புராண வரலாறு கூறுகிறது. இத்தகைய சிறப்புகள் பெற்ற இக்கோயில் தற்போது போதிய பராமரிப்பின்றி உள்ளது. இக்கோயிலை வழிப்போக்கர்களும், மது அருந்துபவர்களும், ஆடு, மாடு மேய்ப்பவர்களும் அசுத்தம் செய்து வருகின்றனர். மேலும் கோயிலைச் சுற்றி முட்புதர்கள் மண்டியுள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள சிறப்பான சுற்றுலா தலங்களில் கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் மத்திய தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

கோயிலின் கோபுரங்கள் புதுப்பொலிவோடு இருப்பதற்காக ரசாயனக் கலவை பூசப்பட்டு வருகிறது. இக்கோயிலுக்கு இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் திரளாக வந்து செல்கின்றனர். கங்கை கொண்ட சோழபுரம் கோயிலின் அருகில் உள்ள முத்துசேர்வாமடம் வரதராஜப் பெருமாள் கோயில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தக் கோயிலின் கட்டுமானங்களை மாற்றி அமைத்தும், கோயில் நிலங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றியும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இக்கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து முத்துசேர்வாமடத்தைச் சேர்ந்த விவசாயி கண்ணன் கூறியது:

இந்தக் கோயிலில் ஆண்டுத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வந்தது. ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக இக்கோயிலில் திருவிழா எதுவும் நடைபெறவில்லை. கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை பலர் அபகரித்து பட்டா போட்டுக் கொண்டனர். அதனை மீட்டு கோயிலுக்கு வருமானத்தை ஏற்படுத்தி மீண்டும் கோயிலை புதுப்பொலிவு பெறச் செய்ய வேண்டும் என்றார்.

தினமணி

0 comments:

Post a Comment