Saturday, October 31, 2015




இல்லத்தில் ஒரு பொருள் "இல்லை' என்றால், அவ்வில்லத்தரசி அப்பொருள் "இல்லை' என்று கூறக்கூடாது (கூறமாட்டாள்); "வாங்க வேண்டும்' என்றுதான் கூறவேண்டும்; அதுதான் தமிழர் மரபு; அதுவே நனி நாகரிகமும்கூட. அவள் "இல்லை' என்ற சொல்லைக் கூறாமலிருப்பதால்தான் அவளுக்கு "இல்லாள்' என்ற பெயர் வாய்த்தது. "இல்லாள் மாண்புடையவளாயின் அங்கில்லாததே (இல்லத்தில்) இல்லை; அவள் அஃதில்லாளாயின் அங்கு உள்ளதுதான் என்ன?' (53) என்பார் வள்ளுவப் பெருந்தகை. வள்ளுவர் கூறிய மனைத்தக்க மாண்புடையவளாக இருப்பவள் "இல்லை' என்ற சொல்லையே கூறாத தமிழ் மரபு காப்பவள். இது இல்லாளின் மரபு மட்டுமன்று; தமிழ் வணிகர் மரபும்கூட!

இம்மரபைப் போற்றுகிறார் மணிவாசகர். திருவாசகம் ஒரு தோத்திர நூல் மட்டுமன்று; அன்பு நூலாகவும், சிறந்ததோர் சாத்திர நூலாகவும், உளவியல் நூலாகவும், யோக நூலாகவும், உபநிடத நூலாகவும், மெய்ஞ்ஞான நூலாகவும், தன் வரலாற்று நூலாகவும், மிகச் சிறந்ததோர் இலக்கிய - இலக்கண நூலாகவும் திகழ்கிறது.

"இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பல்' என்று கூறுவர். அதன்படி, இலக்கியம் கண்டு இலக்கணம் இயம்பியவர் தொல்காப்பியர். அவர் வகுத்த இலக்கணமே பின்வந்த இலக்கியங்களுக்கு இலக்கணமாகத் திகழ்கிறது. அவ்வகையில், மணிவாசகரின் மதுரவாசகத்துக்கும் அதுவே இலக்கண நூலாகத் திகழ்கிறது என்பதற்கு மணிவாசகர் கையாளும் ஓர் இலக்கண சொற்றொடரைக் குறிப்பிட்டு விளக்கலாம்.

தம் ஞான வாசகங்களில் பல இலக்கண வகைமைகளைப் பயன்படுத்தி புரட்சி செய்த மணிவாசகர், தொல்காப்பியம், கிளவியாக்கத்தில் வரும் இரு நூட்பாக்களை ஒரே பாடலில் பயன்படுத்தி முதன் முதலில் ஓர் இலக்கணப் புரட்சியை ஏற்படுத்தியுள்ளார்.

பல்பொருள் வாணிகம் செய்வோர் "அல்லதுஇல்' எனும் வாய்ப்பாட்டைக் கையாளும் முறையைத் தொல்காப்பியம் கூறுகிறது. உளுத்தும் கடலையும் விற்கும் வணிகனிடம் சென்று ஒருவன் "கடலையுண்டோ?' என்று கேட்டால், வணிகனிடம் கடலை இல்லையென்றால், வணிகன் "அல்லதுஇல்' என்னும் வாய்ப்பாட்டை விடைச்சுருக்கம் கருதிப் பயன்படுத்தி, "உளுந்து அல்லது இல்லை' என்பான். உளுந்து இல்லாமல் கடலை மட்டும் அவனிடம் இருந்தால், வந்தவன் வேறு கேட்காதிருக்க, "இக்கடலையல்லது இல்லை' என்று கடலையைச் சுட்டிச் சொல்வான். "அல்லதுஇல்' என்ற வாய்ப்பாட்டை வைத்துச் சொல்வதாயின், இவ்விருவகையில்தான் சொல்ல வேண்டும். இதனைத் தொல்காப்பியர்,

""எப்பொரு ளாயினும் அல்லதுஇல் எனின்
அப்பொரு ளல்லாப் பிறிதுபொருள் கூறல்''
(தொல்.கிள,35)

என்றும், தன்னிடம் இருக்கும் ஒரு பொருளைச் சுட்டிக் கூறுமிடத்து, ""அப்பொருள் கூறின் சுட்டிக் கூறல்'' (நூற்பா-36) என்றும் இரண்டு நூற்பாக்களால் கூறுவார். தன்னிடமுள்ளதையே கூற வேண்டின், குறிப்பிட்டுக் கூறவேண்டும். "பசும்பால்தான் உள்ளது' என்பது தன்னிடம் உள்ளதைச் சுட்டிக்கூறுவது. இது வணிக உரையாடல் மரபு; அல்லது இல்லை எனும் வாய்ப்பாட்டு விடை மரபு என்பர். தன்னிடம் ஒரு பொருள் "இல்லை' என்பதை நேரே சொல்வது வணிக மரபன்று என்கிறார் தொல்காப்பியர்.தொல்காப்பியரின் இவ்விரண்டு வகைகளையும் மணிவாசகப் பெருந்தகை, அதாவது "அல்லதுஇல்' என்பதை ஒரே பாடலில் நயம்பட அமைத்துள்ளதுதான் இப்பாடலின் தனிச்சிறப்பாகும்!

""ஐய! நின்ன தல்லதில்லை மற்றோர்பற்று வஞ்சனேன்
பொய்கலந்த தல்லதில்லை பொய்ம்மையேன்
எம்எம்பிரான்
மைகலந்த கண்ணி பங்க வந்துநின் கழற்கணே
மெய்கலந்த அன்பரன் பெனக்கு மாக வேண்டுமே''
(திருச்சதகம்-77)

""இப்பாடலில் ""நின்ன தல்ல தில்லை'' என்றதும், ""பொய் கலந்த தல்லது இல்லை'' என்றதும் காணத்தக்கன. பொய், மெய் என்னும் இரண்டனுள் மாணிக்கவாசகர் தாம் கலந்தது பொய்யையே என்றார். அவர் "அல்லதுஇல்' என்னும் வாய்ப்பாட்டைப் "பொய்கலந்தது அல்லதுஇல்' என்றார். மெய்யிற் கலக்கவில்லை என்பதை நேரே கூறாமல் அதற்கு மாறான பொய்யில் கலந்ததைக் கூறி, "அல்லதில்' என்ற வாய்ப்பாட்டால் மெய்யிற் கலவாமையைக் கூறினார். இக்கூற்று கடலைப் பயிர் இல்லை என்று கூறவரும் வணிகன், உளுந்தல்லதுஇல் என்று கூறுவது போல்வதாகும்.

இனி "நின்னது அல்லதுஇல் ஓர்பற்று' என்பதன் விளக்கம் வருமாறு: மாணிக்கவாசகர் இறைவனிடம் தமக்கு ஓர் பற்று வேண்டும் எனக் கூறவந்தார். இறைவன் (சிவபிரான்) அருளாகிய பற்று ஒன்று தவிர, வேறு பற்று இருப்பதாக அவர்க்குப் புலப்படவில்லை. கடலை மட்டும் உள்ள வணிகனிடம், கடலை உண்டோ எனக் கேட்பவனிடம், "கடலை மட்டும் உண்டு; வேறு பயறு இல்லை' என்று கூறவரும் வணிகன், "இக்கடலை அல்லதுஇல், எனக் கடலையைச் சுட்டிக் கூறுவது போலவே, மாணிக்கவாசகரும் வேறு தெய்வத்தின் அருளாகிய பற்று இல்லாமையால், சிவபிரான் அருளாகிய பற்றே தாம் காண்பதால், ""நின்னது அல்லதுஇல் ஓர் பற்று'' என்றார். "நின்னது' என்பது "நின்னதாகிய அருள்' என்னும் பொருள் தருவது. நின்னதாகிய பற்று எனச் சிவபிரானை முன்னிலைப் படுத்துமுகத்தான் சுட்டிக்கூறினார். எனவே, மாணிக்கவாசகர் "அப்பொருள் கூறின் சுட்டிக் கூறல்' என்னும் சூத்திரக் கருத்துக்கேற்ப ""ஐய நின்ன தல்லதுஇல் மற்றோர் பற்று'' என்றும், "அப்பொருளல்லாப் பிறிது பொருள் கூறல்' என்னும் சூத்திரக் கருத்தைப் ""பொய்கலந்த தல்லஇல்'' என்றும் கூறிய நயம் வியத்தற்குரியதாம்'' என்று "மணிவாசகரின் சமயமும் காலமும்' என்ற நூலில் வியந்துரைத்திருக்கிறார் தமிழறிஞர் ஆ.சிவலிங்கனார்.

 எனவே, இல்லாள் மட்டுமல்ல இனி எல்லோரும் எப்பொழுதும் மணிவாசகப் பெருந்தகையின் மணிமொழியான "அல்லதுஇல்' மரபைப் போற்றி வாழப்பழகுவோம். "இல்லை' என்ற சொல்லே இல்லாமல் செய்வோம்!

நன்றி :- இடைமருதூர் மஞ்சுளா, தினமணி

0 comments:

Post a Comment